🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சமூகநீதிக்கு வெளிச்சம் கொடுத்த உயர்நீதிமன்றத் தீர்ப்பு!

கடந்த அதிமுக ஆட்சியில் எம்பிசி பிரிவினருக்கு வழங்கப்படும் 20 விழுக்காடு இடஒதுக்கீட்டில் வன்னியர் சாதிக்கு மட்டும் 10.5 விழுக்காடு உள்இடஒதுக்கீடு வழங்க கொண்டுவரப்பட்ட 08/2021 சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தீர்ப்பு வழங்கிய நீதியரசர் எம்.துரைசாமி, நீதியரசர். முரளி சங்கர் அமர்வு வன்னியருக்கு வழங்கிய 10.5 விழுக்காடு இடஒதுக்கீட்டை ரத்து செய்து தீர்ப்பளித்தது.

முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் கொண்டு வரப்பட்ட  இச்சட்டத்தை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. மொத்தம் மனுதாரர், எதிர்மனுதாரர் என்று 117 பேர் பங்கேற்றனர். ஆரம்பகட்டத்தில் இச்சட்டத்திற்கு எதிராக தடை வழங்க மறுத்த நீதிமன்றம், வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. அதையடுத்து சட்டமன்றத்தேர்தல், கொரோனா பெருந்தொற்று காரணமாக வழக்கு விசாரணை தாமதமாகி வந்த நிலையில், புதிதாக அமைந்த திமுக அரசு கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியருக்கு 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கி அரசாணை வெளியிட்டதைத் தொடர்ந்து வழக்கு சூடு பிடித்தது. 

முதலில் தலைமைநீதிமன்ற அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபொழுது, அமர்வில் இருந்த நீதிபதி வழக்கு விசாரணைக்கு வந்தபொழுது கடைசி நிமிடத்தில் விலகிக்கொண்டதை அடுத்து இருமுறை தள்ளி வைக்கப்பட்டது. கடும் போராட்டத்திற்குப் பிறகு நீதியரசர் எம்.எம்.சுந்தரேஷ், நீதியரசி எஸ்.கண்ணம்மாள் அமர்வில் வந்தபொழுது, கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர் 10.5 விழுக்காடு உள்ஒதுக்கீட்டால் பாதிக்கப்படும் நபர்கள் நீதிமன்றத்தை நாடி நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் என்று இடைக்கால நிவாரணம் வழங்கியது. அதையடுத்து நீதியரசர் எம்.எம்.சுந்தரேஷ் அவர்கள் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றதால், மீண்டும் வழக்கின் நிலை கேள்விக்குறியானது.

பலகட்டப் போராட்டத்திற்குப்பிறகு நீதியரசர் எம்.துரைசாமி, நீதியரசர் முரளி சங்கர் அமர்வு முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கின் முக்கியத்துவத்தை உணர்ந்த நீதியரசர் அமர்வு, வழக்கை தினசரி விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.  கடந்த 22-ஆம் தேதி வழக்கு விசாரணை நிறைவு பெற்று, வழக்கறிஞர்களின் எழுத்துப்பூர்வமான வாதங்களை 25-ஆம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டு, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது. அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் கடந்த வெள்ளியன்று இந்த வழக்கின் தீர்ப்பு திங்கள் வழங்கப்படுவதாக செய்தி வெளியானது. சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் 184 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை தாயாரித்து ஒருவாரகாலத்தில் மிகத்தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீதியரசர் துரைசாமி, நீதியரசர் முரளி சங்கர் வழங்கியுள்ள தீர்ப்பில், சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தாமல் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கியது தவறானது என்றும், உள்ஒதுக்கீடு வழங்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளதா? சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வழங்க முடியுமா? முறையான அளவு சார் தரவுகள் இல்லாமல் வழங்கும் முடியுமா? முறையாக  எடுக்கப்பட்ட புள்ளி விவரங்கள் இல்லாமல் இதுபோல ஒதுக்கீடு வழங்க முடியுமா? உள்ளிட்ட 7 கேள்விகளை கேட்டு, அரசு அளித்த விளக்கம் போதுமானதாக இல்லாததால் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியது செல்லாது என தெரிவித்தனர். தீர்ப்பை ஒரு வாரகாலம் நிறுத்திவைக்க பாமக தரப்பு வழக்கறிஞர் பாலு விடுத்த கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர். வன்னியர் இடஒதுக்கீடு சட்டப்படி கல்லூரியில் சேர்ந்த மாணவர்களின் கல்வி இந்தத் தீர்ப்பால் பாதிக்கப்படும் என்பதால் மேல் முறையீடு செல்லும் வகையில் தீர்ப்பை சில வாரங்கள் நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கையை, இதுகுறித்து ஏற்கனவே நீதியரசர் எம்.எம்.சுந்தரேஷ் அமர்வு  தெளிவுபடுத்தியுள்ளதால் அக்கோரிக்கையையும் நீதிமன்றம் நிராகரித்தது.

தீர்ப்பு வெளியானவுடன் அரசு தலைமை வழக்கறிஞர் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் என்று கூறியிருப்பதால் சமூகநீதி கூட்டமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் "கேவியட்" மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved