🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சமநிலை மக்களை அரசியல் சதிசெய்து பிரிக்காதீர்! - தோழர்.அய்யநாதன் வேண்டுகோள்.

வன்னியர் 10.5 விழுக்காடு இடஒதுக்கீட்டுச் சட்டம் 08/2021-ஐ எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அச்சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தீர்ப்பு வழங்கியதைஒட்டி, இச்சட்டத்திற்கு எதிராக போராடி வந்த தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட சமூகநீதி கூட்டமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த "அனைவருக்குமான சமூகநீதிக்கு அடித்தளமிட்ட உயர்நீதிமன்ற தீர்ப்பு - முதல் அடி, இரண்டாம் அடி என்ன? என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் மூத்த ஊடகவியலாளர் தோழர்.அய்யநாதன் அவர்கள் கலந்துகொண்டு பேசினார்.

தமிழகத்தில் பெரும்பான்மை சமூகங்களில் ஒன்றான வன்னியர் சமூகத்தை மையப்படுத்தி, அச்சமூகத்திற்கு நன்மை செய்கிறோம் என்ற போர்வையில் சில பிளவுவாத சக்திகள் அரசியல் ஆதாயத்திற்காக அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக இடஒதுக்கீடு செய்ததாக  குற்றஞ்சாட்டினார். சமூக அந்தஸ்தில் ஒரேநிலையில் இருக்கும் சாதிகளுக்குள் மோதலை உருவாக்கி சமூகநீதி என்ற போர்வையில் அரசியல் களத்தில் மக்களால் நிராகரிக்கப்பட்ட  சில சக்திகள் குளிர்காய நினைப்பதாகவும், அதற்கு எந்த சமூகமும் பலியாகிவிடக்கூடாது என்று எச்சரிக்கை செய்தார். வன்னியர் சமுதாய மக்கள் உரிமைக்காக தானும் வன்னிய அமைப்புகளோடு இணைந்து பலபோராட்டங்களில் கலந்துகொண்டவன் என்ற முறையிலும், இந்தியத்திருநாட்டில் உள்ள பெரும்பான்மை சமூகமான பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைக்காக தன் பிரதமர் பதவியை இழந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களுக்கு பக்கபலமாக இருந்து நாடு முழுவதுக்குமான பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் சமூகநீதிக்காக பாடுபட்டவன் என்ற முறையில், அனைத்து சமூகங்களும் மேன்மையடைய வேண்டும் என்பதே எங்களைப் போன்றவர்களின் கனவாக இருக்கிறது என்றார். 

சமநிலையில் இருக்கும் மக்களை, அதிகாரத்தின் அருகாமையில் இருப்பதால், அதன் துணைகொண்டு அதிகாரம் கைக்கு எட்டாத சமுதாய மக்களை வஞ்சிப்பது என்னவகையான சமூகநீதி என்று கேள்வி எழுப்பினார். ஆகவே இத்தீர்ப்பில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மிகச்சரியான கேள்வியை எழுப்பியுள்ளதாகவும், எந்தவிதமான தரவுகளும், புள்ளி விபரங்களும் இல்லாமல், வாக்கு அரசியலுக்காக மக்களின் வாழ்க்கையோடு விளையாடுவதை அரசியல்வாதிகள் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினார். இச்சட்டதின்படி கல்லூரியில் இடம் கிடைத்தவர்களும், இடம் கிடைக்காமல் போனவர்களுக்கும் இதைவைத்து விளையாடியவர்கள் என்ன பதில் சொல்லப்போகிறார்கள் என்று கேள்வி எழுப்பினார். 

அனைத்துசமுதாய மக்களும் வேறுபாடுகளை மறந்து தங்களுக்குள் பிரிவினையைத் தூண்டும் அரசியல்வாதிகளை நிராகரிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை மக்களிடம் முன்வைத்தார். நீதிமன்றத்தில் சமூகநீதிக்கு கிடைத்த வெற்றியை உறுதி செய்ய மக்கள் ஓரணியில் திரண்டு பேரணியாகவோ அல்லது மிகப்பெரும் மாநாடுகளை நடத்தியோ,  தங்களை மையப்படுத்தி நடக்கும் அரசியல் சூழ்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved