🔴 LIVE | முப்பெரும் விழா 2023


உயர்நீதிமன்ற தீர்ப்பு சாதி அரசியலுக்கு சம்மட்டி அடி!- தோழர்.தியாகு

வன்னியர் 10.5 விழுக்காடு இடஒதுக்கீட்டுச் சட்டம் 08/2021-ஐ எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அச்சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தீர்ப்பு வழங்கியதை ஒட்டி, இச்சட்டத்திற்கு எதிராக போராடி வந்த தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட சமூகநீதி கூட்டமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த "அனைவருக்குமான சமூகநீதிக்கு அடித்தளமிட்ட உயர்நீதிமன்ற தீர்ப்பு - முதல் அடி, இரண்டாம் அடி என்ன? என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் தமிழ்தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தோழர்.தியாகு அவர்கள் கலந்துகொண்டு பேசினார். அவர் பேச்சின் விபரம் வருமாறு...

வன்னியர் இடஒதுக்கீடு சட்டத்தை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளதை, வன்னியர் சமுதாய மக்களுக்கு ஏற்பட்ட தோல்விபோல் ஒருசிலர் கட்டமைக்க முயல்வதாகவும், ஆனால் ஒரே சமூக அந்தஸ்தில் உள்ள சமுதாயங்களுக்கிடையே பிளவை உருவாக்கி, அரசியல் செய்ய நினைத்தவர்களுக்குத்தான் தோல்வியே தவிர சாமானிய வன்னியருக்கு அல்ல. இந்த தீர்ப்பின் மூலம் வன்னியருக்கான இடஒதுக்கீடு வாய்ப்பு எந்த விதத்திலும் பாதிக்கப்படப்போவதில்லை. மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படும் 20 விழுக்காடு இடஒதுக்கீடு  அப்படியே நீடிக்கிறது. அந்த 20 விழுக்காடு இடஒதுக்கீட்டில் வன்னியர்கள் 12 முதல் 15 விழுக்காடு வரை பயனடந்து வருவதாக சொல்லப்படுவதை கருத்தில் கொள்ள வேண்டும். ஆகையால் இதில் எந்த சமுதாயத்திற்கும் வெற்றி, தோல்வி என்ற கேள்வியே எழவில்லை. வன்னிய சமுதாய மக்கள் எந்த நிலையில்  இருக்கிறார்களோ அதேநிலையில் தான் எம்பிசி-யில் உள்ள மற்ற பிரிவினர்களும் இருக்கிறார்கள். எது எல்லாம் இன்னும் தங்களுக்குத்தேவையென ஒவ்வொரு சமுதாயமும் நினைக்கிறதோ, அதே தேவை மற்ற சமுதாயத்தினருக்கும் இருக்கிறது என்பதை அனைத்து தரப்பும் உணர வேண்டும்.

இந்த வழக்கின் தீர்ப்பை முழுவதும் படித்து விட்டேன். இதில் உச்சநீதிமன்ற மேல்முறையீட்டில் வெற்றிபெறுவதற்கான கதவுகளை மட்டுமல்ல, சிறு ஓட்டைகூட இல்லாமல் அடைத்துவிட்டது உயர்நீதிமன்றம். வழக்கில் அத்தனை அம்சங்களையும் சீர்தூக்கிப்பார்த்து தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது. இடஒதுக்கீட்டில் பாதிக்கப்பட்ட தரப்பினர் மூன்று வலிமையான சக்திகளை எதிர்த்து போரிட்டு வென்றுள்ளது. இச்சட்டத்தைக் கொண்டு வந்த எடப்பாடியின் தமிழக அரசு, நீதிமன்றம் தலையிட்டும் தங்களுக்கு விருப்பமில்லாத கோப்புகளை பல வருடங்கள் கிடப்பில் போட்டு வைத்திருந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், இச்சட்டத்திற்கு  ஒரே நாளில் ஒப்புதல் வழங்கியதில்  அவருக்குப்பின் இருந்து இயக்கிய மத்திய பாஜக அரசு, எதிர்க்கட்சியாக இருந்த திமுக என மூன்று பலம் வாய்ந்த சக்திகளை எதிர்த்து வென்றுள்ளது நீதிக்கு கிடைத்த வெற்றி. திமுக அரசின் தலைமை வழக்கறிஞர் எடப்படி பழனிச்சாமிக்கு ஆதரவாக வாதாடி இச்சட்டத்தை நியாயப்படுத்த முயன்றதின் மூலம் இச்சட்டத்திற்கு ஆதரவாக ஸ்டாலின் அரசு இருப்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. நியாயமான அரசாக, சமூகநீதிக்கான அரசாக இருந்திருக்குமேயானால், புதிய அரசு பதவியேற்றவுடன் இப்பிரச்சினையை சுமூகமாக முடிக்க முன்வந்திருக்க வேண்டும். இனிமேலாவது உச்சநீதிமன்றத்திற்கு மேல்முறையீட்டிற்குச் சென்று இவ்வழக்கை மேலும் சிக்கலாக்கக்கூடாது என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

இச்சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டபொழுதே, தடைவிதிக்க அடிப்படை முகாந்திம் தெளிவாக இருந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் கண்டுகொள்ளாமல் விட்டது ஏமாற்றமே.  அன்றே நீதிமன்றம் அந்தநிலை எடுத்திருக்குமேயானால் இன்று இச்சட்டத்தின்படி கல்வி,  வேலைவாய்ப்பு இடங்களில் தேர்வானவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டிருக்காது. என்ன காரணத்தாலோ அது நடக்காமல் போய்விட்டது. இது நீதிமன்றங்களில் சில நேரங்களில் நிகழும் நடைமுறைச் சிக்கல். எனினும் விசாரணையின் ஊடே ஆகஸ்டு மாதம் வழங்கிய இடைக்கால நிவாரணத்தில், இச்சட்டத்தின் மூலம் பலன் பெறுபவர்களை இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு கட்டுப்படுத்தும் என்று உத்தரவிட்டிருப்பதால், இந்த சிக்கல் வரக்கூடும் என்று அரசு யோசித்து அரசாணை வெளியிட்டிருக்க வேண்டும்.

இத்தீர்ப்பு ஒன்றை தெளிவாக்கியுள்ளது. இடஒதுக்கீடு விசயம் இருபுறமும் கூர்தீட்டிய ஆயுதம். யார் அவசரப்பட்டு முடிவெடுத்தாலும், தனி சாதிக்கு இடஒதுக்கீடு பெறலாம் என்று மக்களிடம் சாதி மனோபாவத்தை வளர்த்து அரசியல் செய்ய நினைப்பவர்களின் தலையில் ஓங்கி சம்மட்டியால் அடித்துள்ளது தீர்ப்பு. இடஒதுக்கீட்டில் தெளிவான புரிதல் இன்றி வெற்றிபெறவே முடியாது என்பது எம்ஜிஆர் முதல் எடப்பாடி  வரை நிரூபணமாகியுள்ளது. அதனால் தான் 1980-இல் எம்ஜிஆரே ஒதுங்கிக்கொண்டார். ஆகையால் இவர்களெல்லாம் அதற்கு முன் நிற்கவே முடியாது. 

இப்பொழுது உடனடியாக தமிழக அரசு செய்யவேண்டியது, 10.5 விழுக்காடு இடஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்டவர்களை கல்லூரிகளில் சேர்ப்பது , ஏற்கனவே சேர்ந்தவர்கள் கல்வியைத்தொடர உரிய வழிவகை செய்வது மட்டுமே. சமூகநீதி கூட்டமைப்பும் அதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.

தங்கள் தரப்பு வழக்கறிஞர்களுக்கு போதிய நேரம் வழங்கவில்லை என்று மருத்துவர் அய்யா குறிப்பிடுவதெல்லாம் வெறும் சப்பைக்கட்டு, கட்சியினரை திருப்தி படுத்த மட்டுமே உதவும். ஆனால் உண்மையில் நீதிமன்ற வழக்கு விசாரணையை கவனித்தவர்களுக்குத் தெரியும், அரசு வழக்கறிஞர் இச்சட்டத்தை ஆதரித்து இரண்டு நாட்கள் மூன்று மணி நேரம் வாதாடினார். பாமக தரப்பு  வழக்கறிஞர் ரவிவர்ம குமார் இரண்டு நாட்கள்  தலா இரண்டு மணி நேரம் என மொத்தம் நான்கு மணி நேரமும், முன்னாள் அட்வகேட் ஜென்ரல்கள் இருவரும் தலா ஒருமணிநேரம் என இரண்டு மணி நேரம், மற்றொருவர் முப்பது நிமிடம், இன்னொருவர் பதினைந்து நிமிடம் என இச்சட்டத்தை ஆதரித்து ஏறக்குறை 10 மணி நேரம் வாதாடியுள்ளனர்.

ஆனால் மனுதாரர் தரப்பில் இறுதியாக வாதிட்ட மூத்த வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் மட்டும் இரண்டு நாட்களும் சேர்த்து 2 மணி 45 நிமிடங்களும், மற்றொரு மூத்த வழக்கறிஞர் விஜயன் 45 நிமிடமும், பிற மூத்த வழக்கறிஞர்கள் இருவர் தலா 10 மற்றும் 15 நிமிடங்கள் என 30க்கும் மேற்ப்பட்ட மனுதாரர்கள் மொத்தம் 4 முதல் 5 மணி நேரம் மட்டுமே வாதிட்டுள்ளனர். ஒருவழக்கில் பாதிக்கப்பட்டவர்களின் முறையீடுதான் அதிகமாக இருக்கும், ஆனால் இந்த வழக்கில் தடுப்பாட்டம் ஆடியவர்களே அதிகநேரம் எடுத்துக் கொண்டுள்ளனர். இதிலிருந்தே  சட்டம் எவ்வளவு பலவீனமானது என்று விளங்கும்.

சமூகநீதிக்கூட்டமைப்பிலுள்ள சமுதாயத்தினர் சமூக ஊடகங்களில் கட்டவிழ்த்து விடப்படும் அவதூறுகள் குறித்து கவலைப்படாமல், சாமானிய வன்னியர் சமுதாய மக்கள் நம் சகோதரர்களே என்ற மனோபாவத்துடன் அவர்களுக்குமான சமூகநீதியை மீட்டுக்கொடுக்க முன்வரவேண்டும். இவ்வாறு தோழர் தியாகு பேசினார்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved