🔴 LIVE | முப்பெரும் விழா 2023


இடஒதுக்கீடு: நிதி-யால் நீதி-யை பறிக்கும் முயற்சியை முறியடிப்போம்!

தமிழகத்தில் 116 MBC சமூகங்களுக்கு வழங்கப்பட்டு வந்த 20 விழுக்காடு இடஒதுக்கீட்டை எடப்பாடி கா.பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு 8/2021 சட்டம் மூலம் மூன்று பிரிவுகளாக பிரித்து வன்னியர் ஒரு சாதிக்கு மட்டும் 10.5 விழுக்காடும்,  தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 93 சாதிகளுக்கு 7 விழுக்காடும் இன்ன பிற 22 சாதிகளுக்கு 2.5 விழுக்காடு வழங்க வழிவகை செய்யும் சட்டத்தை நிறைவேற்றியது. 

சட்டமன்ற தேர்தலுக்கு பின்பு ஆட்சிப்பொறுப்பேற்ற திமுக அரசும் அதிமுக அரசு கொண்டுவந்த சட்டத்தை நிறைவேற்றுவதில் முனைப்போடு செயல்பட்டு அரசிதழில் வெளியிட்டது. இதனால் தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 115 சமூகங்கள் பொறியியல், கலை அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கையின் போது 20000 இடங்களை இழந்தது. 

இதற்கிடையே தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 115 சமூகங்கள் ஒன்றிணைந்து இச்சட்டத்திற்கு எதிராக வழக்காடி வெற்றிபெற்றது. வரலாற்றுச்சிறப்பு வாய்ந்த இந்தத்தீர்ப்பு அகில இந்திய அளவில் பேசுபொருளானது. இதன் மூலம் அரசியல் கட்சிகள் தங்கள் வாக்கு அரசியலுக்காக இடஒதுக்கீட்டை தன் இஷ்டம்போல் வளைக்கும் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது. 

இந்த தீர்பில் நீதியரசர்கள் எழுப்பிய ஏழு கேள்விகளுக்கு விடையளிக்க முடியாத தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. அந்த முறையீட்டு மனுவிலேயே தனது தவறை ஒப்புக்கொண்டுள்ள தமிழக அரசு, தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 115 சாதிகளின் அறியாமையை பயன்படுத்தி இடைக்கால தடை பெற முயற்சிக்கிறது. உச்சநீதிமன்றத்தில் நான்கு தனித்தனி வழக்குகளை தாக்கல் செய்துள்ள தமிழக அரசு,  புகழ்பெற்ற வழக்கறிஞர்களை வாதாட அமர்த்தியுள்ளது. அதைபோல் பாட்டாளி மக்கள் கட்சியும் மூன்று வழக்குகளை தாக்கல் செய்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் வழக்கை நடத்த பல லட்சங்கள் செலவு பிடிக்கும் என்பதால் பிற சமுதாயங்கள் அவ்வளவு தொகை செலவு செய்யமுடியாது என கணக்கிட்டு நான்கு வழக்குகளை தாக்கல் செய்துள்ளதாக தெரிகிறது. தமிழக அரசு மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி என ஏழு வழக்குகள்  தாக்கலாகியுள்ளதால் குறைந்தபட்சம் ஏழு வழக்கறிஞர்களை நியமிக்க வேண்டிய கட்டாயத்திற்கு 115 சாதிகள் தள்ளப்பட்டுள்ளன.  மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் அரசு கோடிகளை கொட்டி இடஒதுக்கீட்டு உரிமையை பறிக்கும் முயற்சியை உச்சநீதிமன்றத்திலும் முறியடிப்போம் என்று சமூக நீதி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 

உச்சநீதிமன்ற மனுவில் தமிழக அரசின் ஒப்புதல் வாக்குமூலம்...


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved