🔴 LIVE | முப்பெரும் விழா 2023


இடஒதுக்கீடு: அரசுப்பணி, அட்மிஷனுக்கு செல்லும் இளைஞர்கள், மாணவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க சமூகநீதி கூட்டமைப்பு வேண்டுகோள்!

தொட்டிய நாயக்கர் (கொல்லவார், சில்லவார், தோக்கலவார், எர்ர கொல்லா) உள்ளிட்ட 116 சமூகங்களை உள்ளடக்கிய MBC பிரிவினருக்கு வழங்கப்பட்டு வழங்கப்பட்டு வந்த 20 விழுக்காடு இடஒதுக்கீட்டில் வன்னியர் ஒரு சாதிக்கு மட்டும் 10.5 விழுக்காடு இடஒதுக்கீடும் மற்ற 115 சாதிகளுக்கு 9.5 விழுக்காடு இடஒதுக்கீடும் வழங்க வழிவகை செய்யும் சட்டத்தை கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது அனைவரும் அறிந்ததே. 


இதை எதிர்த்து தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட சீர்மரபினர் நலச்சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில்  தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில்  கடந்த 01.11.2021 -இல் நீதியரசர்கள் எம்.துரைசாமி கே.முரளிசங்கர் அமர்வு அச்சட்டத்தை ரத்து செய்து தீர்ப்பு வழங்கியது. 


இத்தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசும், பாட்டாளி மக்கள் கட்சியும் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளன. இதற்கிடையே இந்த இடைப்பட்ட காலத்தில் நடைபெற்ற கலை அறிவியல் மற்றும் பொறியியல் மாணவர் சேர்க்கையில் 115 சமுதாய மாணவர்களுக்கு சேரவேண்டிய சுமார் 20000 இடங்கள் பறிபோய் உள்ளதாக சமூகநீதி கூட்டமைப்பு குற்றஞ்சாட்டி வருகிறது. 

வன்னியர் இடஒதுக்கீட்டை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் நவம்பர் முதல் தேதியே தீர்ப்பு வழங்கிய பின்பும் கடந்த 18.11.2021 -இல் தமிழக அரசு நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில்    காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையில் வன்னியர்க்கு தனி ஒதுக்கீடு MBC (V) வழங்கி அறிவிப்பு வெளியிட்டது. 


இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூகநீதி கூட்டமைப்பு சார்பில் உடனடியாக நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் வழக்கறிஞர் மூலம் அனுப்பப்பட்டது. இதனையடுத்து அந்நிறுவனம்  23.11.2021 வெளியிட்ட அறிவிப்பில் முந்தைய அறிவிப்பை நிர்வாகக் காரணங்களுக்காக நிறுத்திவைத்துள்ளதாக செய்தி வெளியிட்டது. இதனைத்தொடர்ந்து நேற்று ( 26.11.2021) புதிதாக அறிவிப்பு செய்துள்ள நுகர்பொருள் வாணிபக்கழகம், பழைய முறைப்படி  ஒட்டுமொத்த MBC -க்கும் 20 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறையை பின்பற்றியே அறிவிப்பு செய்துள்ளது. இதன் மூலம் தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட பிற சமுதாயங்களுக்கான உரிமை மீட்கப்பட்டுள்ளது.

இதேபோல் அரசு உதவிபெறும் திருச்செந்தூர் ஆதித்தனார் கலை, அறிவியல் கல்லூரி உதவிப்பேராசியர் பணிக்கு வன்னியருக்கு தனி இடஒதுக்கீடு வழங்கி 21.11.2021-இல் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கும் சமூகநீதி கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து அம்முடிவை கைவிட்டுள்ளதாக தெரிகிறது. 


உயர்நீதி மன்றம் வன்னியர் இடஒதுக்கீட்டை ரத்து செய்தாலும் அரசு மற்றும் அதன் சார்பு நிறுவனங்கள் தீர்ப்பை மதிக்காமல் 115 சமுதாயங்களின் வேலைவாய்ப்பு உரிமையை பறிக்க முயல்வது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

இதுதொடர்பாக பேசியுள்ள சமூகநீதி கூட்டமைப்பின் முக்கிய தலைவர் அரசு பணியிடங்களை நிரப்பும்பொழுது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க இளைஞர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved