🔴 LIVE | முப்பெரும் விழா 2023


இராஜகம்பளத்தாருக்கு மாநில தேர்தல் ஆணையாளர் பாராட்டு!

இன்று (27.11.2021) மாலை தமிழ்நாடு மாநிலக் கூட்டுறவு தேர்தல் ஆணையாளர் முனைவர் M.இராஜேந்திரன் IAS., அவர்களை சென்னை வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் மூத்த ஆலோசகர் ஆசிரியர் ந.நல்லையா மற்றும் பொதுச்செயலாளர் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். முனைவர்.இராஜேந்திரன் IAS அவர்கள் மாவட்ட ஆட்சியராகவும், தமிழ்நாடு பிற்பட்டோர் நல ஆணைய உறுப்பினராகவும் பணியாற்றியவர். மேலும் தமிழ்நாடு சிலம்பாட்ட கழகத்தின் தலைவராகவும், கேரள மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற "கண்ணகி" கோவிலின் தலைவராகவும் பொறுப்பு வகிக்கின்றார். தமிழகத்தில் செப்பேடுகள், பட்டயங்கள் குறித்து ஆய்வு செய்வதில் முதன்மையானர், சிறந்த எழுத்தாளரும் கூட. இவரின் எழுத்தைப் பாராட்டி மலேசிய அரசு விருது வழங்கி கௌரவித்துள்ளது. மலேசிய அரசின் விருது பெற்ற இந்தியர்களுள் இருவரில் ஒருவர் முனைவர்.இராஜேந்திரன் IAS மற்றொருவர் கவிப்பேரரசு வைரமுத்து என்பது குறிப்பிடத்தக்கது.

சுமார் ஒன்றரை மணி நேர சந்திப்பின்பொழுது தொட்டிய நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த விருப்பாச்சி கோபால நாயக்கர், தளி யதுல் நாயக்கர் போன்ற பலர் குறித்து தான் எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதை காண்பித்தார். மேலும் தொட்டிய நாயக்கர் சமுதாயம் வாழும் இடங்கள், மக்கள் வாழ்க்கைமுறை பாளையக்காரர்கள் குறித்தெல்லாம் விவாதித்தார். பொள்ளாச்சி இராமபட்டினம் ஜமீன் குறித்த தகவல்களை கேட்டறிந்தார். 


இச்சந்திப்பின்பொழுது, MBC இடஒதுக்கீடு வழக்கில் முனைவர்.இராஜேந்திரன் அவர்களின் பங்களிப்புக்காக தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தில் ஆளும் அரசுகள் கடந்த 35 வருடங்களாக அம்பாசங்கர் அறிக்கை என்ற பெயரில் நடத்திவரும் மோசடிகளை, அந்த ஆணையத்தின் உறுப்பினராக இருந்த வி.வி.சுவாமிநாதன் அவர்கள் மூலமாகவே அம்பலப்படுத்தியதில் முனைவர்.இராஜேந்திரன் IAS அவர்களின் பங்கு முக்கியமானது. சமீபத்தில் வன்னியர் 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழக்கில் அம்பாசங்கர் ஆணையத்தின் அறிக்கை என்று சில புள்ளிவிபரங்களை குறிப்பிட்டு அரசு வாதாடியதை நீதிமன்றம் நிராகரித்தது, இடஒதுக்கீடு வழக்கில் மிக முக்கிய திருப்பமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நன்றிக்கு பதிலளித்துப்பேசியவர், இது சாமானிய மக்கள் நடத்திய வழக்கு. சாமானிய எளிய மக்களுக்குக்கிடைத்த வெற்றி. எந்த சமுதாயத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகளோ, உயர் அதிகாரிகளோ, இடஒதுக்கீட்டில் படித்து பலன் பெற்றவர்களோ வழக்கு குறித்து எந்தக் கவலையும் படவில்லை. ஓரிருவர் பெயருக்கு சில நூறுகளையும், ஆயிரங்களையும் கொடுத்துவிட்டு ஒதுங்கிக்கொண்டதை எல்லா சமூகங்களையும் பார்க்க முடிந்ததாக குறிப்பிட்டார். எளிய மக்களே தங்கள் சக்திக்குமீறி நிதியுதவி ஆத்மார்த்த பங்களிப்பையும் செய்ததை  கண்கூட பார்க்க முடிந்ததாக குறிப்பிட்டார். ஆகவே இது எளிய மக்களுக்கான நீதி. நீதியரசர்கள் தெய்வத்திற்கு நிகராக நீதி வங்கியுள்ளதாகக் கூறினார். 

இடஒதுக்கீட்டின் அவசியம் குறித்து சமுதாய இளைஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தான் தஞ்சாவூர் ஆட்சியராக இருந்தபொழுது நடந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு இடஒதுக்கீட்டின் முக்கியத்துவத்தை விளக்கினார். கந்தர்வக்கோட்டை என்ற இடம் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்ததால் கந்தர்வக்கோட்டை கள்ளர் சமூகத்தினருக்கு MBC சான்றிதழ் வழங்குவதை தஞ்சாவூரில் தனக்கு முன்பிருந்த ஆட்சியர்கள் மறுத்து BC சாதி சான்றிதழே வழங்கி வந்தனர். தான் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொண்டபொழுது, MBC சான்றிதழ்கோரி அச்சமுதாய மக்களிடமிருந்து மீண்டும் கோரிக்கை வந்தது. அப்பொழுது அந்த மாவட்டத்தில் இருந்த ஜமீன்தாரரிடம், அவருக்கு பாத்தியப்பட்ட கிராமங்கள் குறித்து தகவல் கேட்டபொழுது, 48 கிராமங்களை அவர் அடையாளம் காட்டியதாகவும், அந்த கிராமங்களின் பெயரில் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களிடம் கடன்பெற்ற ஆவணங்கள் மூலம் உறுதி செய்துகொண்டு, அதனடிப்படையில் தஞ்சாவூரில் மாவட்டத்தில் வாழும் கந்தர்வக்கோட்டை கள்ளர்களுக்கு MBC சான்றிதழ் வழங்கியதை குறிப்பிட்டது மிகுந்த சுவாரசியமாக இருந்தது.

இச்சம்பவம் நடந்து பலவருடங்கள் கழித்து மருத்துவர்கள் மாநாடு ஒன்றுக்கு சென்றிருந்தபொழுது, தன்னை அடையாளம் கண்டுகொண்ட மருத்துவர் ஒருவர், தன்னிடம் அனுமதி பெற்று வெளியே சென்றார். எனது அடையாளங்களை தனது தந்தையிடம் சொல்லி உறுதி செய்துகொண்டு திரும்பி வந்து, சார், நான் மருத்துவர் ஆவதற்கு நீங்கள் தான் காரணம் என்று சொல்லி அறிமுகம் செய்துகொண்டார். எனக்கு வியப்பாக இருந்தது, நீங்கள் மருத்துவராக நான் என்ன செய்தேன் என்று வியப்பாக கேட்டேன். அப்பொழுது தான் தனது தந்தை முன்னாள் எம்.எல்.ஏ. துரை.கோவிந்தசாமி (பெயர் மாற்றப்பட்டுள்ளது), எனது பெயர் கலாநிதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பலவருடங்களாக கந்தர்வக்கோட்டை கள்ளர்களுக்கு மறுக்கப்பட்டு வந்த MBC சான்றிதழ் நீங்கள் மாவட்ட ஆட்சியராக வந்தபின் தீர்வு கண்டு MBC சான்றிதழ் வழங்கிய ஆதே ஆண்டில் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு பெற்றவன் என்று கூறி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அவருக்கு அது மகிழ்ச்சி என்றபோதிலும், அதுவரை MBC சான்றிதழ் வழங்காததால் எத்தனை மருத்துவர்களை அந்த சமுதாயம் இழந்துள்ளதோ என்று கவலையடைந்தேன் என்றார். ஆகையால் மக்களுக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் பெற்றுத்தர வேண்டியது சமுதாய தலைவர்களின் கடமை என்று அறிவுரை வழங்கினார்.

DNT பிரச்சினையில் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினர் தாமதமாக கலந்துகொண்டாலும் சிறப்பான பங்களிப்பை அளித்துவருவதை அவ்வப்பொழுது சிலர் கூறக்கேட்டுள்ளேன். கடந்த செப்டம்பர்’06 ஆம் தேதி சென்னை சின்னமலையில், வன்னியர் 10.5 விழுக்காடு இடஒதுக்கீட்டிற்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினர் மிக அதிக அளவில் கலந்துகொண்டதாக உளவுத்துறை நண்பர்கள் கூறக்கேட்டுள்ளேன். அதேபோல உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடரவும், சென்னை உயர்நீதி மன்றத்தில் நடந்த வழக்கிற்கு தொட்டிய நாயக்கர் சமுதாயம் செய்த பொருளாதார உதவிகள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். 

அதேவேகத்துடன் தற்பொழுது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு வழக்கிற்கும் தொட்டிய நாயக்கர் சமுதாயம் பெரும்பங்காற்றி வருவதாகவும். அச்சமுதாய மக்களிடையே விழிப்புணர்ச்சி மேலோங்கி வருவதாக தன் பத்திரிக்கை நண்பர்கள், உளவுத்துறை நண்பர்கள் சொல்வதை கேட்கமுடிவதாக குறிப்பிட்டார். மேலும் சிலம்பாட்டக் கலையை மாணவர்களிடையே ஊக்குவிக்க கேட்டுக்கொண்டவர், தமிழக அரசு கல்வி, வேலைவாய்ப்பு இடஒதுக்கீட்டில் சிலம்பக்கலையையும் சேர்த்துள்ளதால், அதிக வாய்ப்புகள் இருப்பதாக குறிப்பிட்ட முனைவர்.இராஜேந்திரன் ஐஏஎஸ், அதை உங்கள் சமுதாயம் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள தன்னால் இயன்ற உதவி செய்யத்தயார் என்றும் உறுதியளித்தார்.

இறுதியாக, உச்சநீதிமன்றத்திலும் உங்களுக்கு ஆதரவான தீர்ப்பு நிச்சயம் கிடைக்கும்.  பொறியியல் படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு விரைவில் தொடங்க இருப்பதால், அதில் விழிப்போடு இருந்து மீண்டும் பழைய 20 விழுக்காடு இடஒதுக்கீடு முறையே பின்பற்றுவதை உறுதி செய்திட விழிப்போடு இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved