🔴 LIVE | முப்பெரும் விழா 2023


தேனியில் தொட்டிய நாயக்கர்களுக்கு DNT சான்றிதழ் வழங்கக்கோரி விடுதலைக்களம் ஆர்ப்பாட்டம்!

இன்று (29.11.2021) காலை விடுதலைக்களம் கட்சியின் சார்பில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினருக்கு DNT சான்றிதழ் வழங்கக்கோரி விடுதலைக்களம் கட்சியின் நிறுவன தலைவர் கொ. நாகராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலைக்களம் கட்சியின் மாநில பொருப்பாளர் ராஜேந்திரன், நாமக்கல் தொட்டிய நாயக்கர் சமுதாய அறக்கட்டளை தலைவர் மு.பழனிசாமி, தேனி மாவட்ட பொருப்பாளர் செளந்திர பாண்டியன், தேனி மாவட்ட தொழுவ நாயக்கர் மகாஜன முன்னேற்ற  தலைவர்  கட்டபொம்மு ராஜா , செயலாளர் கிருஷ்ண பிரபு, பொருளாளர் தங்கபாண்டியன் மற்றும்  கட்சி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில்100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் தேனி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. அம்மனுவில் கூறியிருப்பதாவது,

வணக்கம். இப்பவும், இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய சமூகங்களில் தமிழகத்தில் இருந்த 78 பாளையங்களில் 50-க்கும் மேற்பட்ட பாளையங்களை ஆட்சி செய்த தொட்டிய நாயக்கர் சமுதாயம் மிக முக்கியமானது.

தேசவிடுதலைக்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து சமர்புரிந்து 1700-களின் இறுதியிலிருந்தே வீரபாண்டிய கட்டபொம்மன், விருப்பாச்சி கோபால நாயக்கர், தளி எத்திலப்ப நாயக்கர், ஊமைத்துரை போன்ற  ஒப்பற்ற மாவீரர்களை பலிகொடுத்த வரலாறு தொட்டிய நாயக்கர் சமுதாயத்திற்கு உண்டு. பெரும்பான்மை பாளையங்களில் சிறு,குறு மன்னர்களாக இருந்த தொட்டிய நாயக்கர் இனக்குழு போன்று நாடுமுழுவதும் இருந்த கிளர்ச்சிக்குழுக்களை அடக்குவதற்காக 1857-இல் நடைபெற்ற சிப்பாய் கலகத்தைத் தொடர்ந்து 1871-இல் சர் மாயோ பிரபு அவர்களால் குற்றப் பழங்குடியினர் சட்டம் (Criminal Tribes Act-1871) கொண்டுவரப்பட்டு கிளர்ச்சியாளர்களை அடக்கி ஒடுக்கி வந்தனர். அந்தவகையில் தமிழகத்தில் வாழ்ந்த தொட்டிய நாயக்கர் சமுதாய இளைஞர்கள், ஆண்-பெண் பாகுபாடின்றி சொல்லெனாத்துயருக்கு ஆளாக்கியது ஏகாதிபத்திய அரசு. ஆங்கில அரசின் இந்தக் கொடுஞ்செயலுக்கு அஞ்சி மக்கள் மலை, மலை சார்ந்த பகுதிகளிலும், அடர்ந்த வனங்களிலும் தஞ்சம் புகுந்து தலைமறைவாக வாழ்ந்தனர்.

தேசம் விடுதலைபெறும் முன் இம்மக்களுக்கு செய்திட்ட சித்திரைவதைகளுக்கு பரிகாரம் தேடும் வகையில், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு, மனிதாபிமான அடிப்படையில் குற்றப் பழங்குடியினர் சட்டத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு சில சலுகைகளை பிரிட்டீஷ் அரசு அளித்துச்சென்றது. 1950-ஆம் ஆண்டு இந்திய அரசினால்,1871 முதல் குற்றப்பழங்குடியினர்  சட்டத்தால் பாதிக்கப்பட்ட, அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி, சமூக மற்றும் பொருளாதாரத்தினை மேம்படுத்தும் பொருட்டு மதிப்பிற்குரிய அனந்தசயன அய்யங்கார் தலைமையில் அமைக்கப்பட்ட குற்றப்பழங்குடியினர் சட்ட விசாரணைக்குழு நாடுமுழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆராய்ந்து 1952-இல் ஆய்வறிக்கையை சமர்ப்பித்தது. அதனடிப்படையில் குற்றப் பழங்குடியினர் சட்டம் அகற்றப்பட்டு, 1952 முதல் "குற்றப் பழங்குடியினர்"  (Criminal Tribes) "சீர்மரபு பழங்குடியினர்" (De notified Tribes) என்று மாற்றப்பட்டு, உரிய அரசாணைகள் வெளியிடப்பட்டது. தமிழகத்தில் இப்படி கொடுமைகளுக்கு ஆளான 68 சமுதாயங்களை அடையாளம் காணப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து "சீர்மரபினர் நல வாரியங்கள்" அமைக்கப்பட்டு மத்திய, மாநில அரசுகள் நலத்திட்ட உதவிகள் வழங்கி வந்தன.

தமிழகத்தில் வாழும் சீர்மரபு பழங்குடி மக்களுக்கு அரசியல், சமூகம், கல்வி, பொருளாதாரம் பற்றி போதிய விழிப்புணர்வு இல்லாதபடியால், 30.07.1979-இல் அரசாணை எண் 1310/1979-இன்படி  "சீர்மரபு பழங்குடிகள்" (DNT) என்பதை  "சீர்மரபு வகுப்பினர்" (DNC) என்று அன்றைய அரசு பெயர் மாற்றம் செய்த குறித்து எதுவும் அறிந்திருக்கவில்லை. அதனைத்தொடர்ந்து 1989-இல் தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் "சீர்மரபினர் வகுப்பில்" (DNC) உள்ள 68 சாதிகள் சேர்க்கப்பட்டு "MBC" சான்றிதழே வழங்கப்பட்டு வந்தன. மக்களிடையே ஏற்பட்ட விழிப்புணர்வின் காரணமாக 2014-முதல் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தியதின் விளைவாக 08.03.2019-அன்று தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசாணை எண் 26/2019 இன் மூலம்  சீர்மரபு பழங்குடியினர் (DNT) என்று மீண்டும் பெயர் மாற்றப்பட்டு பட்டியலிட்டுள்ளனர்.


தமிழக வரலாற்றில் தொட்டியநாயக்கர் சமுதாயத்தின் வரலாறு கி.பி.1200-களின் தொடக்கத்திலிருந்தே காணப்பட்டாலும், 1370-களில் மதுரையை விஜயநகரப்பேரரசு கைப்பற்றி, 1540-களில் விசுவநாத நாயக்கர் தலைமையில் மதுரையை மையமாக வைத்து ஆட்சி அமைக்கப்பட்டபின் உருவாக்கப்பட்ட பாளையக்கார ஆட்சிமுறை உறுதிபடுத்துகிறது. அப்படி உருவான பாளையங்களில் விருப்பாச்சி, நிலக்கோட்டை, இடையகோட்டை,  கன்னிவாடி, மாம்பாறை, மணப்பாறை, தேவதானப்பட்டி, அம்மையநாயக்கனூர், எரியோடு,உள்ளிட்ட பாளையக்காரர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டதை வரலாறு நெடுக்க உறுதி செய்கிறது. இந்தப்பாளையங்கள் அனைத்தும்  ஒன்றிணைந்த மதுரை மாவட்டத்தின் பகுதிகளாக இருந்து, தற்பொழுது அவை தேனி, மதுரை, திண்டுக்கல் என்று மூன்று மாவட்டங்களில் அமையப்பெற்றுள்ளன. ஆங்கிலேயர்களை எதிர்த்து சர்வ தியாகங்களையும் செய்துள்ள இம்மாவட்டங்களில் வாழும் தொட்டிய நாயக்கர்களை தற்போதைய DNT அட்டவணைப்பட்டியலில் இணைக்காமல் புறக்கணிக்கப்பட்டிருப்பது உண்மை வரலாற்றுக்கு எதிரானது,இயற்கைக்கு முரணானது. மேலும் தமிழகம் முழுவதும் 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பரந்து விரிந்துள்ள தொட்டிய நாயக்கர் சமூகத்தினர் ஒரே மாதிரியான கல்வி, பொருளாதார, சமூக அந்தஸ்தோடு கொள்வினை, கொடுப்பினை சம்பந்தங்கள் இருந்துவரும் நிலையில், இந்த மூன்று மாவட்டங்களில் மட்டும் எந்தவித கருத்துக்கேட்புகளோ, ஆவணங்கள், சான்றுகள், தரவுகள் எதுவும் மேற்கொள்ளாமல் தொட்டிய நாயக்கர் சமுதாய மக்களை DNT பட்டியலில் சேர்க்காமல் புறக்கணித்திருப்பது, ஆங்கிலேயர்களை எதிர்த்துப்போரிட்டு மகுடத்தையும், வாழ்வாதாரங்களையும் இழந்த போர்க்குடிகளுக்கு செய்த அநீதி ஆகும்.

தேனி மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் தொட்டிய நாயக்கர் சமுதாய மக்கள் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் விவசாய தினக்கூலிகளாக வாழ்ந்து வருகின்றனர். எனவே, மதிப்பிற்குறிய தேனி மாவட்ட ஆட்சியர் அவர்கள் இம்மாவட்டத்தில் வசிக்கும் போர்க்குடி பழங்குடி மக்களான தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினருக்கு  DNT சான்றிதழ் வழங்கிட உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமாய் விடுதலைக்களம் கட்சியின் சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved