🔴 LIVE | முப்பெரும் விழா 2023


உச்சநீதிமன்றத்தில் அடுத்தவாரம் வன்னியர் இடஒதுக்கீடு ரத்து வழக்கு விசாரணை! உ.நீ.மன்ற தீர்ப்பை உறுதி செய்யுமா? உச்சநீதிமன்றம்!

தமிழகத்தில் கல்வி,வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள 116 சமூகங்களுக்கு வழங்கப்பட்டு வந்த 20 விழுக்காடு இடஒதுக்கீட்டில், வன்னியர் ஒரு சாதிக்கு மட்டும் 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் 8/2021-ஐ கடந்த அதிமுக ஆட்சியின் இறுதிநாளான பிப்ரவரி'27-ஆம் தேதி கொண்டுவரப்பட்டு, அச்சட்டத்திற்கு உடனடியாக ஆளுநர் ஒப்புதலும் பெறப்பட்டது. முழுக்க முழுக்க அரசியல் லாபத்திற்காக, பிற 115 சமூகங்களின் உரிமையை பறிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட இச்சட்டத்தை மக்கள்நீதிமையம் உள்ளிட்ட ஒருசில அரசியல் கட்சிகள் தவிர்த்து யாரும் எதிர்கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால் இச்சட்டத்தால் மீண்டும் ஆட்சியை கைப்பற்றலாம் என்று கனவுகண்ட அதிமுக-வையும், தனி இடஒதுக்கீட்டு போர்வையில் சாதி அரசியலை கையிலெடுத்த பாட்டாளி மக்கள் கட்சியையும் மக்கள் புறக்கணித்து சட்டமன்றத்தேர்தலில் தோல்வியடையச்செய்தனர்..

இச்சட்டத்தை எதிர்த்து தொட்டிய நாயக்கர் உள்ளடக்கிய சீர்மரபினர் நலச்சங்கம் (டிஎன்டி/டிஎன்சி) உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டவர்கள் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த மார்ச் முதல் நடைபெற்றுவந்த வழக்கு விசாரணை, கொரோனா பெருந்தொற்றால் சற்று தாமதமாகி வந்தது.  இதற்கிடையே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான ஆட்சி அமைந்தது. ஆனால் ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பதுபோல, திராவிட முன்னேற்றக்கழகமும், அதிமுக வழியைப்பின்பற்றி கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியருக்கு 10.5 விழுக்காடு வழங்கும் அரசாணையை அரசிதழில் வெளியிட்டது. இதனால் பதறிப்போன மனுதாரர்கள் மீண்டும் உயர்நீதிமன்றத்தை நாடி வழக்க்கை விரைந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வற்புறுத்தினர்.

இதனையடுத்து மீண்டும் கடந்த ஆகஸ்டு முதல் தலைமை நீதிபதியின் அமர்வுமுன் தொடங்கிய விசாரணை இறுதியாக நீதியரசர்கள் எம்.துரைசாமி, கே.முரளிசங்கர் அமர்வுமுன் நடைபெற்றது. வழக்கின் முக்கியத்துவம் கருதி தினசரி அடிப்படையில் மதியம் 2.30 மணியளவில் தொடங்கி வழக்கறிஞர்கள் விவாதங்கள் நடைபெற்று வந்தது. இறுதி கட்ட வாதங்கள் அக்டோபர் 22-ஆம் தேதியோடு முடிவுற்று, தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. உயர்நீதிமன்ற தீர்ப்பு வெளியாக ஒருசில மாதங்களாவது பிடிக்கும் என்று சட்டவல்லுனர்களே கருத்துக்கூறி வந்த நிலையில் அதிரடியாக ஒரே வாரத்தில் தீர்ப்பு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

இதன்படி கடந்த நவம்பர் 01-ஆம்தேதி தீர்ப்பு வழங்கிய நீதியரசர்கள் அமர்வு, வன்னியர் இடஒதுக்கீட்டிற்கு எதிராக தான் முன்வைத்த ஏழு கேள்விகளுக்கு, தமிழக அரசு அளித்த விளக்கம் திருப்தியளிக்கவில்லை என்றுகூறி, வன்னியர் இடஒதுக்கீட்டை ரத்து செய்து தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பால் அதிர்ச்சிக்குள்ளான பாமக நிறுவன தலைவர் மருத்துவர் இராமதாசு அவர்கள் நீதிமன்ற தீர்ப்பை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டார். ஆனால் சமூகநீதி இடஒதுக்கீட்டில் ஆர்வமுள்ள அனைவரும் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று சமூக ஊடகங்களில் பேசிவந்தனர்.

உயர்நீதிமன்றத்தில் குட்டுப்பட்ட தமிழக அரசும், பாமகவும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். தமிழக அரசு சார்பில் தமிழக அரசு, சட்டத்துறை, உயர்கல்வித்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை என அந்தந்தத்துறை சார்பில் நான்கு  மனுக்களும், பாமக சார்பில் மூன்று மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. உயர்நீதிமன்ற தீர்ப்பு வந்தவுடன், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடைபெறுவதை தடுக்கும் வகையில் தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட சீர்மரபினர் நலச்சங்கம் மற்றும் இன்னபிற அமைப்புகள் சார்பில் "கேவியட்" மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இதனையடுத்து உச்சநீதி மன்றத்தில் எப்பொழுது விசாரணை தொடங்கும் என்று கடந்த ஒருமாதமாக நிலவி வந்த பரப்பரபிற்கு நேற்று விடையளித்துள்ளது உச்சநீதிமன்றம். தமிழக அரசின் சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மூத்த வழக்கறிஞர் வில்சன் தலைமைநீதிபதியிடம் நேற்று வேண்டுகோள் வைத்தார். இதனையடுத்து அடுத்த வாரம் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளார். இதனை எதிர்கொள்ள தயாராகிவரும் தொட்டிய நாயக்கர் சமுதாய அமைப்புகள் அங்கம் வகிக்கும் சமூகநீதி கூட்டமைப்பு, வழக்கு செலவிற்காக பொதுமக்களிடம் நிதி திரட்டி வருகிறது. முதற்கட்டமாக தொட்டிய நாயக்கர் சமுதாயம் ரூ.200000/- வழங்க வேண்டுமென சமூகநீதி கூட்டமைப்பு வைத்த வேண்டுகோளை ஏற்று சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், நாமக்கல் தொட்டிய நாயக்கர் கல்வி அறக்கட்டளை, இராஜகம்பளத்தார் மேன்மக்கள் கல்வி அறக்கட்டளை, விடுதலைக்களம் கட்சி போன்ற  அமைப்புகளின் சார்பில் நிதி திரட்டும் பணி முடிக்கிவிடப்பட்டுள்ளன. இந்த அமைப்புகள் ஏற்கனவே  உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கிற்கும் பங்களிப்பு செய்துள்ளதோடு, சமூகநீதி கூட்டமைப்பு, சீர்மரபினர் நலச்சங்கம் சார்பில் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களிலும் தொடர்ந்து பங்கேற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved