🔴 LIVE | முப்பெரும் விழா 2023


மதுரை மாவட்ட தொட்டிய நாயக்கர் சமூகத்திற்கு DNT சான்றிதழ் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்!

"போர்க்குடி" சமுதாயமான தொட்டிய நாயக்கர்கள் மதுரையை மையமாக வைத்து பாளையங்களை உருவாக்கி தமிழகத்தில் ஆட்சி செய்தவர்கள். ஆங்கிலேயர்கள் இந்தியாவை கைப்பற்றி ஆளுகை செலுத்த முயன்றபொழுது எதிர்த்து நின்று போராடி பல உயிர் தியாகங்களை செய்து, பாளையங்களையும் இழந்தவர்கள். ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தில் இருந்த விருப்பாச்சி, எரியோடு, நிலக்கோட்டை, இடையகோட்டை, கன்னிவாடி, மாம்பாறை, கன்னிவாடி, அம்மையநாயக்கனூர், தேவதானப்பட்டி பாளையக்காரர்கள் ஆங்கிலேயர்களுக்கு அடிபணிய மறுத்ததால் கடுமையான அடக்குமுறைக்கு ஆளானவர்கள். 

கம்பளத்தார் வரலாறுநெடுக ஆங்கிலேய எதிர்ப்பை முழுமையாக பதிவு செய்துள்ள நிலையில், ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக கிளச்சி செய்தவர்களை அடக்கி ஒடுக்க கொண்டுவரப்பட்ட "குற்றப்பரம்பரை சட்டம்" கம்பளத்தார்களின் வாழ்க்கையை புரட்டிப்போட்டுள்ளது. இச்சட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க ஆங்கிலே அரசும், அதன்பின் அமைந்த இந்திய அரசும் இவர்களை "DNT" என்று அடையாளப்படுத்தி பல்வேறு சலுகைகளை வழங்குகின்றன. தமிழகத்தில் 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வாழும் தொட்டிய நாயக்கர் சமூகத்திற்கு "DNC/DNT" சான்றிதழ் வழங்கப்படும் நிலையில், முன்பு ஒருங்கிணைந்த மதுரை மாவட்டமாக இருந்து, தற்பொழுது மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கம்பளத்தார்களுக்கு மட்டும் DNT சான்றிதழ் வழங்கப்படுவதில்லை.

இதைக்கண்டிக்கும் வகையிலும், தமிழக அரசு உடனடியாக இம்மாவாட்டங்களில் வசிக்கும் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினருக்கு DNT சான்ரிதழ் வழங்கக்கோரியும் விடுதலைக்களம் கட்சி மக்களைத் திரட்டி போராட்டங்களை நடத்தி வருகிறது. கடந்த 29.11.2021-அன்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட அக்கட்சியினர், வரும் திங்கள்கிழமை காலை 10 மணியளவில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரை சுற்றுவட்டார கிராம மக்கள் பெருமளவில் திரளாக கலந்துகொண்டு போராட்டத்தை சிறப்பிக்க விடுதலைக்களம் கட்சியின் நிறுவன தலைவர் கொ.நாகராஜன் வேண்டுகோள் வைத்துள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நாமக்கல் தொட்டிய நாயக்கர் கல்வி அறக்கட்டளையின் தலைவர் மு.பழனிச்சாமி, சௌந்திரபாண்டியன் போன்ற சமுதாய முன்னோடிகளும், பல்வேறு நாயுடு, நாயக்கர் சங்கங்களும், தோழமை அமைப்புகளும் கலந்துகொள்வதாக கூறப்பட்டுள்ளது

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved