🔴 LIVE | முப்பெரும் விழா 2023


உச்சநீதிமன்ற வழக்காடு நிதியில் முதற்கட்ட தவணையை வழங்கினார் தொழிலதிபர் P.S.மணி!

வன்னியர் 10.5 விழுக்காடு இடஒதுக்கீட்டை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கடந்த நவம்பர் 01-ஆம் தேதி ரத்து செய்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் நான்கு வழக்குகளும், பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மூன்று வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கின் மீதான விசாரணை  இந்த வாரத்தில் தொடங்கும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணையிபோது தமிழக அரசின் சார்பில் புகழ்பெற்ற மூத்த வழக்கறிஞர்களை களமிறக்கி வாதாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி இந்திய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் முகில்ரோத்தகி, அபிஷேக் சிங்வி, வில்சன் போன்றவர்கள் ஆஜராகலாம் என்று தெரிகிறது. பாட்டாளி மக்கள் கட்சி ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடக்கையில், கர்நாடக அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் ரவி வர்ம குமார், தமிழக அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர்கள் இராமன், மாசிலாமணி உள்ளிட்ட ஜாம்பவான்களை வைத்து வாதாடியதால், உச்சநீதி மன்றத்திலும் பிரபலமான வழக்கறிஞர் பட்டாளத்தை களமிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உயர்நீதிமன்ற தீர்ப்பு வெளியானவுடனே தீர்ப்புக்கு தடை ஏதும் வாங்கி விடக்கூடாது என்ற வகையில் தொட்டிய நாயக்கர் சமுதாயம் உள்ளடக்கிய "சீர்மரபினர் நலச்சங்கம் மற்றும் சமூகநீதி கூட்டமைப்பு" சார்பில் உச்சநீதிமன்றத்தில் "கேவியட்" மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசு மக்கள் வரிப்பணத்தில் வழக்கறிஞர்களுக்கு கோடிக்கணக்கில் கொட்டிக்கொடுக்க தயாராக உள்ளது. அதுபோல் பாட்டாளி மக்கள் கட்சியின் பணபலம் உலகறிந்த ஒன்று. இந்த வழக்கில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவிலுள்ள வன்னியர் அல்லாத 115 சமூகங்களில் அரசியல் மற்றும் பொருளாதார பலமுள்ள சமூகங்கள் மிக மிகக்குறைவே. பெரும்பாலும் நாவிதர், வண்ணார், பண்டாரத்தார், மீனவர், போயர்,நரிக்குறவர் போன்ற எளிய சமூகங்கள் நிறைந்துள்ளதோடு, இடஒதுக்கீடு குறித்த விழிப்புணர்வும் குறைவு. 

உச்சநீதிமன்றத்தில் இடஒதுக்கீடு போன்ற அரசியல் முக்கியத்துவமும், சட்ட நுணுக்கங்களும் மிகுந்த வழக்கில் அனுபவமுள்ள ஒரு மூத்த வழக்கறிஞரை நியமித்து வாதாடினால் மிக அதிக செலவு பிடிக்கும். குறைந்த பட்ச கட்டணமாக ஒரு "வாய்தா"விற்கு ரூ.6 லட்சம் என்பது நடைமுறையில் உள்ளது. இது நம் வழக்கு ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் வெற்றி பெற்றுள்ளதால் பிரதிவாதிக்கு ஆகும் செலவு. இதுவே உயர்நீதிமன்றத் தீர்ப்பை உச்சநீதிமன்றத்தில் உடைக்க வேண்டிய அவசியமுள்ள மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கட்டணம் என்றால் ஒரு வாய்தாவிற்கு 20 முதல் 50 லட்சம் வரை ஆகும் என்று சொல்லப்படுகிறது. தமிழக அரசின் சார்பில் நான்கு, பாமக சார்பில் மூன்று என மொத்தம் ஏழு வழக்குகளை எதிர்கொள்ள நாமும் குறைந்தபட்சம் ஏழு வழக்கறிஞர்களை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

தொட்டிய நாயக்கர் சமுதாயத்தைப் பொறுத்தவரை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கை நடத்துகையிலும், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை எதிர்கொள்வதிலும் "சீர்மரபினர் நலச்சங்கம்"என்று சொல்லப்படும் 68-DNT சாதிகளின் சங்கத்தோடு இணைந்து வழக்குகளை எதிர்கொள்கிறோம். மேலும் DNT-யில் இடம்பெறாத பிற மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளையும், பிற்படுத்தப்பட்ட சாதிகளை இணைத்தும் "சமூகநீதி கூட்டமைப்பு" என்ற பெயரில் போராட்ட களங்களையும், அரசியலையும் எதிர்கொண்டு வருகிறோம்.

உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை எதிர்கொள்ள முதற்கட்ட விசாரணையில் அரசு தீர்ப்புக்கு தடை ஏதும் பெற்றுவிடாமல் தடுக்க வேண்டும் என்ற அடிப்படையில், சிறந்த வழக்கறிஞர்களை வைத்து முதல்கட்ட விசாரணையை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. இதற்கு தொட்டிய நாயக்கர் சமுதாயம் முதல் தவணையாக ரூ.200000/- (ரூபாய் இரண்டு லட்சம்) உடனடியாக வழங்க வேண்டும் என்றும், கூடுதலாக தேவைப்படும் நிதியை அடுத்தடுத்த விசாரணைகளின் பொழுது கொடுக்க வேண்டும் என்று "கூட்டமைப்பு" கேட்டுக்கொண்டதின் அடிப்படையில், சமுதாய மக்களிடன் கடந்த சில நாட்களாக நிதி திரட்டும் பணி நடந்து வருகிறது. 

சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாயநலச்சங்கம், நாமக்கல், தொட்டிய நாயக்கர் கல்வி அறக்கட்டளை, இராஜகம்பளத்தார் மேன்மக்கள் அறக்கட்டளை ஆகிய அமைப்புகள் நிதி திரட்டும் பணியில் முழுமையாக ஈடுபட்டு வருகின்றன. நேற்று (05.12.2021-ஞாயிற்றுக்கிழமை) பல்லடம் அருகேயுள்ள சுல்தான்பேட்டையில் நடைபெற்ற  நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற வழக்காடு நிதியில், தன் பங்களிப்பாக ரூ.15000/- (பதினைந்தாயிரம்) சேர்த்து முதல்தவணையாக ரூ.100000/- ஐ (ரூபாய் ஒருலட்சம்) தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுகழக மாநில அவைத்தலைவரும், தொழிலதிபருமான திருப்பூர்.P.S மணி அவர்கள், தொட்டியநாயக்கர் சமூகம் சார்பாக சமூகநீதி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் , நாமக்கல் தொட்டியநாயக்கர் சமூக அறக்கட்டளை தலைவருமான மு.பழனிசாமி மற்றும் நாமக்கல் மூத்தவழக்கறிஞர் B.பழனிசாமி ஆகியோரிடம்  வழங்கினார். இந்த நிகழ்வின்பொழுது நாமக்கல் அறக்கட்டளை உறுப்பினர்கள் B.மணி, தலைமை நிலையச் செயலாளர்கள் சின்னுசாமி மற்றும் தங்கவேல் ஆகியோர் உடனிருந்தனர். இதையடுத்து விரைவில் சென்னையில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் சார்பில் திரட்டப்பட்ட  வழக்காடு நிதி முழுவதும் ஒப்படைக்கப்படவுள்ளது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved