🔴 LIVE | முப்பெரும் விழா 2023


மதுரை போர்க்குடிகளுக்கு DNT சான்றிதழ் வழங்குக - விடுதலைக்களம் ஆர்ப்பாட்டம்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  டிஎன்டி சான்றிதழ் வழங்கக்கோரி விடுதலைக்களம் கட்சியின்  நிறுவன தலைவர் கொ. நாகராஜன் தலைமையில் நேற்று (06.12.2021) காலை 10 மணியளவில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் வசிக்கும் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினர் ஒருங்கிணைந்த மதுரை மாவட்டம் தவிர்த்து பெரும்பாலான மாவட்டங்களில் போர்க்குடி வம்சமான "சீர்மரபின பழங்குடி பட்டியல்"-லில் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். தொட்டிய நாயக்க மன்னர்களின் ஆட்சியின் தலைமையிடமாக இருந்தது மதுரை. அதன் சுற்றுவட்டாரங்களில் இருந்த கம்பளத்து பாளையக்காரர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்து பல தியாகங்களை செய்துள்ளனர். அப்படியிருந்தும் ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தில் மட்டும் தொட்டிய நாயக்கர் சமூகத்தினர் DNT பட்டியலில் இடம் பெறவில்லை. இதனைக்கண்டித்தும், மதுரை மாவட்டத்தில் வசிக்கும் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினருக்கு DNT  சான்றிதழ் வழங்கக் கோரியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விடுதலைக்களம் கட்சியின் சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 


இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய விடுதலை கட்சியின் நிறுவன தலைவர் கொ.நாகராஜன், மதுரை மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் தொட்டிய நாயக்கர் சமுதாய மக்கள் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் விவசாயக் கூலிகளாக வாழ்ந்து வருகின்றனர். எனவே, மதுரை மாவட்டத்தில் வசிக்கும் போர்க்குடி பழங்குடி மக்களான தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினருக்கு DNT சான்றிதழ் வழங்கிட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை வைத்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் நாமக்கல் தொட்டிய நாயக்கர் சமுதாய அறக்கட்டளை தலைவர் மு.பழனிசாமி, மதுரை மாவட்ட பொருப்பாளர் முத்து, மாநில இளைஞரணி அமைப்பாளர் பிரபு நாயுடு, தமிழ்நாடு நாயுடு மகாஜன சங்கம் பொதுச்செயலாளர் சீனிவாசன், பொருளாளர் சன்னாசி,மகாராஜன், ராம்குமார், அருணாச்சலம் மற்றும் கட்சி நிர்வாகிகள் என 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved