🔴 LIVE | முப்பெரும் விழா 2023


தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட சமூகங்கள் சார்பில் இடஒதுக்கீடு வழக்கில் ஆஜராகும் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான்!

MBC பிரிவிலுள்ள வன்னியர் சாதிக்கு 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் 8/2021-ஐ சென்னை உயர்நீதி மன்ற மதுரைக்கிளை கடந்த நவம்பர் மாதம் ரத்து செய்ததை அடுத்து தமிழக அரசும், பாட்டாளி மக்கள் கட்சியும் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தன. இவ்வழக்கின் விசாரணை இன்று எடுத்துக்கொள்ளப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாயின. மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் விரைவில் தொடங்க வேண்டும் என்று தமிழக அரசு தரப்பு மூத்த வழக்கறிஞர் வில்சன், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கேட்டுக்கொண்டதையடுத்து இவ்வாறான தகவல் வெளியாயின.

ஆனால் பலரும் எதிர்பார்த்த மாதிரி வழக்கு இன்று விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை, என்றபோதிலும் வரும் செவ்வாய்க்கிழமை (15.12.2021) விசாரணை தொடங்குவதற்கான வாய்ப்பிருப்பதாக உச்சநீதிமன்ற வட்டாரங்களிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே உச்சநீதிமன்றத்தில் EWS பிரிவினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவதற்கெதிரான வழக்கு உட்பட இடஒதுக்கீடு சார்ந்து பல வழக்குகள் நிலுவையில் இருப்பதால், இந்த வழக்கின் மீதான தீர்ப்பும் வெளியாக நீண்ட காலம் ஆகலாம் என்று சொல்லப்படுகிறது. எனவே விசாரணையின் தொடக்கத்திலேயே உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை பெற அரசு தரப்பும், பாமக தரப்பும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளதாக தெரிகிறது.

தமிழக அரசின் தரப்பில் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் முகில் ரோத்தகி, அபிஷேக் சிங்வி, வில்சன் உள்ளிட்ட பிரபலங்கள் களமிறங்கவுள்ளதாக தெரிகிறது. அதேபோல் பாமக தரப்பும் பெரும் வழக்கறிஞர் பட்டாளத்தோடு களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசுக்கும், பாமக-விற்கும் பணபலத்திற்கு எந்தக்குறையுமில்லை. ஆனால் எதிர்தரப்பான 115 சாதிகள் அடங்கிய சமூகநீதிகூட்டமைப்பிற்கு சட்டமும், உயர்நீதிமன்ற தீர்ப்பும் சாதகமாக இருந்தாலும், பொருளாதாரத்தில் நொண்டியடிக்கிறது என்கிறார்கள், அரசியல் பார்வையாளர்கள்.

இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. உச்சநீதிமன்ற வழக்குகளை பொறுத்தவரை, வழக்கின் தீவிரத்தைப்பொறுத்து மூத்த வழக்கறிஞர்களுக்கான கட்டணம் மாறுபடுகிறது. அரசியல் சட்டநுணுக்கமிக்க இந்த வழக்கில் "சமூகநீதி கூட்டமைப்பு" சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கே.எம்.விஜயன், கர்னல்.பாலசுப்பிரமணியம் போன்றோர் உச்சநீதிமன்றத்திலும் ஆஜராகின்றனர். இவர்கள் இடஒதுக்கீடு வழக்கில் அனுபவம் உள்ளவர்கள் என்றபோதிலும் ஒரு சில நிமிடங்களே உச்சநீதிமன்றத்தில் நடக்கும் முதற்கட்ட வழக்கு விசாரணையில் நீதியரசர்களின் கவனத்தை ஈர்த்து முடிவை மாற்றக்கூடிய அளவுக்கு பரிட்சியமானவர்கள் அல்ல என்ற கருத்து நிலவுகிறது.

தமிழக அரசும், பாமக-வும் முதற்கட்ட விசாரணையில் தடை பெற்றுவிட்டால், இறுதி தீர்ப்பு வர பல ஆண்டுகள் ஆகிவிடும் என்பதால் அதுவரை அரசியல் அறுவடை செய்து கொள்ளலாம் என்று நினைப்பதாக தெரிகிறது. இதனால் "சமூகநீதி கூட்டமைப்பு" உச்சநீதிமன்றத்தில் புகழ்பெற்ற வழக்கறிஞர் ஒருவரையாவது தங்கள் தரப்பு வழக்கறிஞராக தங்கள் "பட்ஜெட்"டுக்குள் நியமிக்க முயற்சி மேற்கொண்டு வந்தது. அதனடிப்படையில் மூத்த வழக்கறிஞர் "ராஜீவ் தவான்" அவர்களை அணுகியுள்ளதாக தெரிகிறது. மேல்முறையீட்டு வழக்கை எதிர்கொள்ள நிதி திரட்டி வரும் சமூகநீதி கூட்டமைப்பிலுள்ள தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட சமூகங்கள் சார்பாக முதற்கட்ட ந்தியாக 10 லட்சம் ரூபாயை இலக்கு வைத்து நிதி திரட்டி வருகின்றன. இந்த நிதியானது ராஜீவ் தவான் போன்ற மூத்த வழக்கறிஞர்கள் நீதி மன்றத்தில் ஒரே ஒருமுறை ஆஜராவதற்கு வாங்கும் கட்டணங்களில் பாதி அளவு மட்டுமே என்கிறார்கள் நீதிமன்ற விவகாரங்களை நன்கு அறிந்தவர்கள். 

எனினும் மூத்த வழக்கறிஞர் "ராஜீவ் தவான்" அவர்கள் கட்டணத்தை தாண்டி, சமூக நலனில் அக்கறையுள்ளவர், பல பொதுநல வழக்குகளில் ஆஜராகி வருபவர் என்பதால், கட்டணத்தை விட வழக்கின் தன்மைக்கே அதிக முக்கியத்துவம் தருபவர் என்ற கருத்து சொல்லப்படுகிறது. மேற்கு வங்கமாநில கவர்னராக இருந்த சாந்தி ஸ்வரூப் தவான் அவர்களின் மகனான ராஜீவ் தவான் அவர்கள் உத்திரப்பிரதேச மாநிலத்திலுள்ள அலகாபாத் பல்கலைக்கழகத்திலும், அதன்பின் லண்டனிலுள்ள கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் அங்கமான இமானுவேல் கல்லூரியிலும் படித்தவர். வெளிநாட்டிலுள்ள குயின்ஸ் பல்கலைக்கழகம், புரூனல் பல்கலைக்கழகம், விஸ்காசின்-மேடிசன் பல்கலைக்கழகங்களில் ஆசிரியராக பணியாற்றியவர். மேலும் இந்தியன் லா இன்ஸ்டிடியூட் கல்லூரில் கௌரவ பேராசிரியராக பணியாற்றிவர். சட்டம் குறித்து பல புத்தகங்களை எழுதிய இந்தியாவின் முதன்மை வழக்கறிஞர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. புகழ்பெற்ற பாபர் மசூதி வழக்கில் ஆஜரானவர் என்பது கூடுதல் தகவல். 

தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட அரசியல், பொருளாதார பின்புலங்கள் இல்லாத எளிய சமூகங்கள் சார்பில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான், கே.எம்.விஜயன், பாலகிருஷ்ணன், யோகேஷ்கண்ணா போன்றவர்கள் உயர்நீதி மன்றத்தில் பெற்ற வெற்றியை உச்சநீதிமன்ரத்திலும் உறுதி செய்வார்கள் என்ற நம்பிக்கையில் கோடானுகோடி மக்களின் எதிபார்ப்பு.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved