🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கம்பளத்தாரின் பங்களிப்பு-ஒற்றுமை! - அதிகாரிகள் வாழ்த்து!

"DNC/DNT" பட்டியலில் உள்ள தொட்டிய நாயக்கர் சமூகத்தினரின் ஒற்றுமைக்கும், சமூகநீதியை வென்றெடுக்க கொடுத்துவரும் ஆதரவிற்கும் பல்வேறு தரப்பில் இருந்து மகிழ்ச்சியும், வாழ்த்துக்களும் வந்த வண்ணம் உள்ளன.

வன்னியர் சாதிக்கு 10.5  விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் 8/2021 சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது அனைவரும் அறிந்ததே. 

இத்தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசும், பாட்டாளி மக்கள் கட்சியும் உச்சநீதி மன்றத்தில் 7 மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளது.

இச்சட்டம் கடந்த 2021-பிப்ரவரியில் வந்தபொழுதே "சீர்மரபினர் நலச்சங்கம்" ((DNT/DNC) சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது. அப்பொழுது இந்த அமைப்பில் இத்தனை சாதிகளோ அல்லது  பெரும்பான்மை சாதிகளிடம் விழிப்புணர்வோ இல்லை. உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டாலும், வழக்கறிஞர் கட்டணமாக இரண்டு மூன்று லட்சங்களாவது உடனடியாக தேவைப்படும் என்பதால், நிர்வாகிகளிடம் ஒரு தயக்கம் நிலவியது. அப்பொழுது உடனடியாக ரூ.50000/- வழங்க ஒப்புகொண்ட தொட்டிய நாயக்கர் சமுதாய அமைப்புகளான வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், தொட்டிய நாயக்கர் சமுதாய அறக்கட்டளை, இராஜகம்பளத்தார் மேன்மக்கள் அறக்கட்டளை ஆகியன முறையே 20,20,10 ஆயிரங்களை வழங்கி, தயக்கத்தைப்போக்கியது. இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு நீதியரசர் நாகேஷ்வரராவ் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவின் அடிப்படையிலேயே சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அந்த விசாரணையின் பொழும் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்தகுமார், அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி, அமிர்தராஜ், போடி சௌந்திரபாண்டியன் உள்ளிட்ட பலரும் நிதியுதவி அளித்து திறமையான மூத்த வழக்கறிஞரை வைத்து வழக்காட உதவிகரமாக இருந்தனர். 

இப்படி பலரும் தானாக முன்வந்து நிதியுதவி அளித்ததின் பலனாக தமிழக அரசையும்,  பணபலமிக்க பாமக வையும் உயர்நீதி மன்றத்தில் எதிர்கொண்டு வெற்றிபெற முடிந்தது. உயர்நீதிமன்ற தீர்ப்பு பெரும் மகிழ்ச்சியையும், உத்வேகத்தையும், விழிப்புணர்வையும் மக்களிடம் ஏற்படுத்தியதை யாரும் மறுக்கமுடியாது. 

இத்தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யக்கூடாது என சீர்மரபினர் நலச்சங்கம், சமூகநீதி கூட்டமைப்பு, பல்வேறு சமுதாய அமைப்புகள் விடுத்த கோரிக்கைகளை நிராகரித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது. 

மொத்தம் 7 மேல்முறையீட்டு வழக்குகளை தாக்கல் செய்துள்ளதால் அதை எதிர்கொள்ள எதிர் தரப்பாகிய நாமும் குறைந்தது ஓரிரு மூத்த வழக்கறிஞர்கள் உள்பட ஏழு வழக்கறிஞர்களை அமர்த்தியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பல லட்சம் ரூபாய்களை வழக்கறிஞர் கட்டணமாக செலுத்த வேண்டியுள்ளது. 

பொருளாதார பிரச்சினையை சமாளிக்க சமூகநீதி கூட்டமைப்பு தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்கவேண்டும் என்று பகிரங்க வேண்டுகோள் வைத்தது. இந்தவேண்டுகோளை அடுத்து பல்வேறு கருத்துகளை பலரும் தெரிவித்துவந்த வேளையில், நமது சார்பில் பேசிய மூத்த தலைவரும், நாமக்கல் அறக்கட்டளை தலைவருமான மு.பழனிச்சாமி அவர்கள் தொட்டிய நாயக்கர் சமூகத்தின் சார்பில் முதற்கட்ட நிதியாக ரூ.200000/- வழங்கப்படும் என்று அறிவித்தார்.இதனையடுத்து பிற சமூக அமைப்புகளும் தங்கள் சமுதாயத்தின்  சார்பில் நிதி திரட்ட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. முதற்கட்ட வழக்காடு நிதியாக ரூ.10,00,000/-  திரட்ட முடிவு செய்யப்பட்டதின் அடிப்படையில் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் சார்பில் வாக்குறுதி அளித்தபடி குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிர்ணயிக்கப்பட்ட தொகைக்கும் கூடுதலாக ரூ.ஐந்தாயிரம் சேர்த்து ரூ.205000/- ஆக மூத்த ஐஏஎஸ் அதிகாரி முனைவர். எம்.இராஜேந்திரன் முன்னிலையில் கடந்த சனிக்கிழமை (11.12.2021) வழங்கப்பட்டது.

ஏற்கனவே செப்'06-இல் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட தொட்டிய நாயக்கர் சமூகத்தினர் தமிழகம் முழுவதிலும் இருந்து விடுதலைக்களம் கட்சியின் நிறுவன தலைவர் கொ.நாகராஜன் தலைமையில் குவிந்தது,  கூட்டமைப்பிலுள்ள பிற தலைவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. அதேபோல தற்பொழுது வழக்காடு நிதியாக கூட்டமைப்பிலுள்ள சமுதாயங்களிலேயே அதிகப்படியாக முதற்கட்ட நிதியை முறைப்படி எல்லா அமைப்புகளும் சேர்ந்து, தங்களுக்குள் முறைப்படுத்திக்கொண்டு ஒற்றுமையாக ஒரே குழுவாகச் சென்று நிதி வழங்கியதோடு, அதை ஒரு நிகழ்ச்சியாக மாற்றிக்காட்டியது பல  தரப்பினருக்கும் ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

இந்தநிகழ்ச்சி முடிந்தவுடன் அன்று மாலையே தன்னுடைய மகிழ்சியையும், வாழ்த்துக்களையும் தொட்டிய நாயக்கர் சமுதாய உறவுகளுக்கு தெரியப்படுத்த கேட்டுக்கொண்டார் ஐஏஎஸ் அதிகாரி முனைவர் எம்.இராஜேந்திரன் அவர்கள். அதேபோல் கூட்டமைப்பில் உள்ள மூத்த போலீஸ் அதிகாரி இரத்தின சபாபதி, முன்னாள் தடயவியல்துறை இயக்குநர் சி.விஜயகுமார் , மூத்த மருத்துவர். கந்தையா, மு.போலீஸ் அதிகாரி துரைமணி, வேட்டுவக்கவுண்டர் சமுதாய தலைவர் முனுசாமிக்கவுண்டர் உள்ளிட்ட பலர் தங்கள் வாழ்த்துகளை தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினருக்கு தெரிவித்துக்கொண்டனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved