🔴 LIVE | முப்பெரும் விழா 2023


DNT சான்றிதழ் வழங்கக்கோரி விடுதலைக்களம் ஆர்ப்பாட்டம்!

தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினருக்கு தமிழகத்தில் 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் DNC/DNT என்றழைக்கப்படும் "சீர்மரபினர் வகுப்பு" என்ற சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. 1989-முதல் இச்சீர்மரபினர் வகுப்பினர் MBC பட்டியலில் ஒருபகுதியாக சேர்க்கப்பட்டு 20 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இதனால் காலப்போக்கில் DNC/DNT என்பது மறந்துபோய் மக்கள் MBC சான்றிதழே பெற்று வந்தனர். 

DNT என சொல்லபடும் போர்க்குடி பழங்குடிகளுக்கு மத்திய அரசு பல்வேறு சலுகைகள், நிதி உதவிகள், திட்டங்களை செயல்படுத்தி வருவதை தெரிந்துகொண்டு, 2014 முதல் தங்களுக்கும் அந்த சலுகைகளைப்பெற வேண்டும் என்று முயற்சி செய்து வருகின்றனர். இதற்கு 1979-இல் எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுக அரசு வெளியிட்ட அரசாணை எண் 1310 தடையாக இருப்பதாக சொல்லப்படுகிறது. அந்த அரசாணைப்படி DNT என்று சொல்லப்பட்டுவந்த போர்க்குடி பழங்குடியின மக்களை DNC என்று மாற்றம் செய்து "சீர்மரபு வகுப்பினர்" என்று புதிய நாமகரணத்தை சூட்டினர். இதுகுறித்தான விழிப்புணர்வு DNT பிரிவிலுள்ள 68 சமுதாய மக்களிடம் இல்லாத காரணத்தால் அந்த அரசாணை குறித்தோ, அதன் பாதிப்புகள் குறித்தோ உணராமல் இருந்து வந்துள்ளனர். மீண்டும் அது தற்பொழுது வெளிச்சத்திற்கு வரவே DNT ஒற்றைச்சான்றிதழ் வழங்கவேண்டி போராடி வருகின்றனர். இந்தப்போராட்டத்தையடுத்து முந்தைய எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு DNC/DNT என்று இரண்டு சான்றிதழ்களை மத்திய, மாநில அரசுகளுக்கு வெவ்வேறாக வழங்கத்தொடங்கியது. அதை ஏற்றுக்கொள்ளாத மக்கள் தங்களுக்கு ஒற்றைச்சான்றிதழே வேண்டும் என்று போராடி வருகின்றனர்.


இதற்கிடையே தமிழகம் முழுவதுள்ள தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினர் அனைவரும் "போர்க்குடி பழங்குடி"களே என்று நாடுமுழுவதுமுள்ள DNT மக்கள் பற்றிய புள்ளிவிபரங்களை சேகரிக்க 1949-இல் அமைக்கப்பட்ட  ஆணையமே அறிக்கை வழங்கியுள்ள நிலையில், தமிழக அரசு பட்டியலிடப்பட்ட மாவட்டங்களிலுள்ள தொட்டியநாயக்கர்களுக்கு மட்டும் "DNC/DNT" சான்றிதழ் வழங்குகிறது. இப்பட்டியலில் ஒருங்கிணைந்த மதுரை மாவட்டம் இடம்பெறவில்லை. இதனை கண்டிக்கும் வகையிலும், தொட்டிய நாயக்கர்கள் மிக அதிகம் வசிக்கும் மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உடனடியாக "DNC/DNT" சான்றிதழ் வழங்கக்கோரியும் விடுதலைக்களம் கட்சியின் சார்பில் நவம்பர்-29, டிசம்பர் 6, 13 தேதிகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தது. அதனடிப்படையில் தேனி, மதுரை மாவட்டங்களில் ஆர்ப்பாட்டத்தை நடத்தி முடித்த அக்கட்சியினர், நேற்று (13.12.2021) திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பு அக்கட்சியின் நிறுவன தலைவர் கொ.நாகராஜன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நாமக்கல் அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி, போடி சௌந்திரபாண்டியன், DNT போராளி தவமணி தேவி, விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பேசினர். இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செல்லப்பாண்டி, அழகர்சாமி உள்ளிட்ட திண்டுக்கல் மாவட்ட இளைஞர்கள் சிறப்பான முறையில் செய்திருந்ததாக கூட்டத்தில் கலந்துகொண்ட மூத்த தலைவர்கள் வாழ்த்தினர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved