🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சமுதாயப்பணியில் 76 வயதில் 16 வயது இளைஞனின் சுறுசுறுப்பு!

சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் நலன் விரும்பி, நன்கொடையாளர், அறிவிக்கப்படாத கொள்கைபரப்பு செயலாளராக இருந்து வருபவர் 76 வயது இளைஞர் திரு.மு.நாகப்பன். இவர் நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அருகேயுள்ள கனகபொம்மன்பட்டியில் பிறந்தவர். சேலம் மாவட்டம் ஆத்தூரில் வட்டார வளர்ச்சி அலுவலராக (BDO) பணியாற்றி ஓய்வு பெற்றவர், போடிநாயக்கன்பட்டியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். 

பணியில் இருந்தபொழுதே சமுதாயத்தின் மீது தீராப்பற்று கொண்டவர். நாமக்கல் மாவட்டத்தில் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் உட்பிரிவான எர்ரகொல்லவார் பிரிவை MBC-யில் சேர்க்காமல் விடுபட்டதை அறிந்து, எர்ர கொல்லவார் பிரிவை தொட்டியநாயக்கர் உட்பிரிவில் சேர்த்து அரசாணை வெளியிடச்செய்ததில் அமரர்.ரங்கம நாயக்கர், முத்து நாயக்கர் ஆகியோரோடு சேர்ந்து சென்னைக்கும், நாமக்கல்லுக்கும், விருதுநகருக்கும் மாறி மாறி ஓயாமல் பயணித்து சாதித்துக்காட்டியவர் திரு.நாகப்பன். 

சமுதாய நிகழ்ச்சிகள் எங்கு நடந்தாலும், எந்த அமைப்பின் சார்பில் நடைபெற்றாலும் முடிந்த அளவு கலந்து கொள்பவர் அல்லது குறைந்த பட்சம் தனது நட்புவட்டத்திலாவது தகவலை பரிமாறி, அக்கூட்டத்திற்கு வலுசேர்ப்பவர். குற்றம் குறையோ, எதிர்மறை கருத்துக்களையோ என்றும் பேசமாட்டார். நிகழ்ச்சி நடத்துபவர்களை ஊக்குவித்துக்கொண்டே இருப்பார், பேச்சளவில் மட்டுமல்ல தன்னால் இயன்ற நிதியுதவியும் அளிப்பவர் திரு.நாகப்பன். இதுதவிர செய்தித்தாள்களில் வரும் வேலைவாய்ப்பு விபரங்களை சேகரித்து, இளைஞர்களுக்கும், அமைப்புகளின் நிர்வாகிகளுக்கும் அனுப்பிக்கொண்டே இருப்பார். மேலும் போட்டித்தேர்வுக்கு இளைஞர்களை ஊக்குவிப்பதோடு, அவர்களின் தொலைபேசி எண்ணையும் பெற்று தொடர்ந்து அவர்களுடன் பேசி ஊக்கமளிப்பவர். 

கம்பளத்தார் சமுதாயம் மட்டுமின்றி தெலுங்கு பேசும் அமைப்புகளின் கூட்டங்களிலும் கலந்துகொள்ளும் ஆர்வமுடையவர். அகில இந்திய தெலுங்கு சம்மேளனத்தின் தலைவர் சிஎம்கே.ரெட்டி, RMR பாசறை தலைவர் இராமமோகன்ராவ், கோவை.கிருஷ்ணராஜ், சி.ஜே.இராஜ்குமார், குணசேகர், ஜெயக்குமார் என எந்த தெலுங்கு சமுதாய அமைப்புகளின் தலைவர்களாக இருந்தாலும், அவர்களின் நிகழ்ச்சி எங்காவது நடப்பதை அறிந்தவுடன் தொடர்பு கொண்டு வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்குபவர் திரு.நாகப்பன்.

தற்பொழுது நாமக்கல் மாவட்ட தொட்டிய நாயக்கர் சமுதாய அறக்கட்டளையின் மூத்த உறுப்பினராகவும், ஆலோசகராகவும் உள்ள திரு.நாகப்பன் DNT போராட்டம், கூட்டங்களில் பங்கேற்பதோடு, DNT/MBC - இடஒதுக்கீட்டு பிரச்சினை, ஒற்றைச்சான்றிதழ் பிரச்சினை, ஓபிசி இடஒதுக்கீடு பிரச்சினை தொடர்பான காணொளி ஆலோசனைக்கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காவே "ஸ்மார்ட் போன்" வாங்கியவர் திரு.நாகப்பன். சமுதாயம் முன்னேற வேண்டும், இளைஞர்கள் கல்விலும், அதிகாரத்திலும் சிறந்து விளங்க வேண்டும் என்று அனுதினமும் சிந்திக்கும், அதுகுறித்து தினசரி ஒரு நபரிடமாவது கருத்துக்களை பறிமாறிக்கொள்பவர் திரு.நாகப்பன்.

வன்னியர் 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை அடுத்து தமிழக அரசும், பாட்டாளி மக்கள் கட்சியும் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு மனுக்களை  "சீர்மரபினர் நலச்சங்கத்தின்" சார்பில் எதிர்கொள்ள திரட்டப்பட்ட்டு வரும் வழக்காடு நிதிக்காக, தன் பங்களிப்போடு நிக்காமல், யாரும் கேட்டுக்கொள்ளாமல் தானாக முன்வந்து, தனது நட்பு வட்டார உறவுகளிடம் சுமார் ரூ.30000/- நிதி திரட்டி முதற்கட்ட நிதியாக நாமக்கல் அறக்கட்டளை வசம் ஒப்படைத்துள்ளார் திரு.நாகப்பன். 

76-வயதான நாகப்பன் அவர்கள் இருதய அறுவை சிகிச்சை செய்துகொண்டவர். சுகர்,பிபி என அனைத்து இணை நோய்களுக்கும் மாத்திரை உட்கொள்ளுபராக இருந்தாலும், சமுதாயப்பணி என்று வந்துவிட்டால் 16 வயது இளைஞராக களம் இறங்கிவிடுவார். ஒருநாளைக்கு  ஓரிரு நிமிடமாவது சமுதாயம் குறித்து யாரிடமாவது பேசியிருப்பார் திரு.நாகப்பன் என்பது அவரை அறிந்தவர்கள் நன்கு அறிவர். அதே சமயத்தில் தான் செய்யும் பணியை வெளியே சொல்லிக்கொள்வதில், விளம்பரம் தேடிக்கொள்வதில் நாட்டமில்லாதவர். தன் பெயர் பத்திரிக்கையில் போட வேண்டும், முன்வரிசையில் போட வேண்டும், பேனரில் படம் பொறிக்க வேண்டும் என்று எந்த "டிமாண்ட்"டும் இல்லாத முன்களப்பணியாளர் திரு.நாகப்பன் என்கிறார் நாமக்கல் அறக்கட்டளை தலைவர் திரு.மு.பழனிச்சாமி. 

சமுதாயப்பணியில் நிதி திரட்டுவது மிகச்சவாலான பணி. ஒரு பைசா கூட கொடுக்காதவர்கள் ஏதேதோ விமர்சனங்களைக்கூறி சாக்குப்போக்கு சொல்வர். பலர் தெரிந்தாலும் கண்டும் காணாமல் செல்வர் அல்லது என்னிடம் யாரும் கேட்கவில்லை என்று சப்பைக்கட்டு கட்டுவர். சமுதாயப்பணி என்பது தானாக முன்வந்து செய்யும் அர்ப்பணிப்பு பணி, அதை அற்பபுத்தியுள்ளவர்களால் செய்திட முடியாது என்பது காலம் கற்றுக்கொடுத்த உண்மை. அரசு ஓய்வூதியம், இரண்டு மகன்களில் ஒருவர் அரசு ஊழியர், ஒருவர் சாப்ட்வேர் எஞ்சினியர், இருமருமகள்களில் ஒருவர் அரசு ஊழியர் மற்றொருவர் சாப்ட்வேர் எஞ்சினியர் என  வாழ்க்கையின் எல்லா நலங்களோடும் வாழ்பவர், தள்ளாத வயதில் ஓய்வு கொள்ளாமல் சமுதாயத்திற்காக ஆற்றும் பணி என்பது தெய்வீகப்பணிக்கு மேலானது என்கிறார் நாகப்பன் வீட்டருகில் வசிக்கும் விடுதலைக்களம் கட்சியின் நிறுவன தலைவர் கொ.நாகராஜன்.

இன்றுகூட தான் வசூலித்த தொகையை அறக்கட்டளை தலைவரிடம் ஒப்படைக்க வருவதாக திரு. நாகப்பன் அவர்கள் தெரிவித்தவுடன், அவருக்கே தெரியாமல் இதை ஒரு நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்து திரு.நாகப்பன் அவர்களின் சமுதாயப்பணியை வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளார் அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி அவர்கள். இன்று (12.12.2021) நடந்த நிகழ்ச்சியில் மூத்த வழக்கறிஞர் நாமக்கல் பழனிச்சாமி அவர்கள் முன்னிலையில் ரூ.30000/-ஐ அறக்கட்டளை தலைவரிடம் ஒப்படைத்தார். அப்பொழுது அறக்கட்டளையின் பொருளாளர் சின்னுசாமி உடனிருந்தார்.

திரு.நாகப்பனை பாராட்டி அறிக்கை வெளியிட்டுள்ள அறக்கட்டளை தலைவர், இந்த வயதிலும் நாகப்பன் அய்யா அவர்களின் சமூக பற்று, அக்கரை, தொண்டுணர்வுக்கு பாராட்டுதலையும்  உளமார்ந்த நன்றியினையும் எனது சார்பாகவும், தொட்டிய நாயக்கர் சமுதாய அறக்கட்டளை சார்பாகவும், நாமக்கல் மாவட்ட தொட்டிய நாயக்கர் மக்கள் சார்பாகவும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார். 

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved