🔴 LIVE | முப்பெரும் விழா 2023


இந்நாள் உலகத்தமிழர் அதிர்ச்சியில் உறைந்தநாள்! - காசிராஜன்

1987 டிசம்பர் 24, தமிழக அரசியல் வரலாற்றில் எவரும் எளிதில் மறந்து விடமுடியாத ஒரு இருண்ட நாள். உலகில் எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ, அங்கெல்லாம் அவர்களின் வாழ்வில் அணையாமல் பிரகாசமாக எரிந்து கொண்டிருந்த ஓர் அணையா ஒளிவிளக்கு அணைந்து இருளில் மூழ்கிய நாள். உலகத் தமிழ் இனமே உருக்கிலைந்து உருகி அதிர்ச்சியில் உறைந்த நாள். தமிழ் நாட்டின் தாய்க்குலமும், தமிழகப் பொதுமக்களும் கண்ணீரில் நனைந்த துயரமான நாள். தமிழகமே துக்கத்தால் நிலைகுலைந்த நாள். எளியோரின் துயர் கண்டு வாரி வழங்கும் வள்ளளின் மொத்த உறைவிடம் பிரிந்த நாள். ஆம் தகதகவென ஜொலிக்கும் தங்கத்தைப் போல தங்கநிற மேனி கொண்ட தங்கதலைவன், மனிதப்புனிதர் மறைந்த நாள். மண்ணைத் தோண்டி தங்கம் எடுப்பார்கள், ஆனால் தங்கத்தையே மண்ணில் விதைத்த நாள். இலட்சியவாதிகள் மண்ணில் புதைக்கப்படுவதில்லை, விதைக்கப்படுகிறார்கள் என்ற லெனினின் கூற்றுப்படி, மக்களின் தேவையே என் சேவை என வாழ்ந்து வரலாறு படைத்த ஓர் இலட்சியவாதி விதைக்கப்பட்ட நாள்.


திரை உலகிலும், அரசியல் துறையிலும் புரட்சி கண்ட புரட்சி தலைவர், ஏழை எளியோருக்கு வாரி வழங்கும் பொன்மனச் செம்மல், மக்களின் அன்பைப் பெற்ற மக்கள் திலகம், தமிழக மக்களின் இதய தெய்வம், டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்த நாள். மக்கள் நலத் திட்டங்கள் மூலம் மண்ணுலகை ஆண்டது போதும், இனி விண்ணுகை ஆள்வதற்கு வாருங்கள் என காலன் அழைத்துக் கொண்ட நாள். இல்லை என்று சொல்லும் மனம் இல்லாத எம்ஜிஆர், காலனின் இந்த கோரிக்கையையும் ஏற்று நம்மை விட்டுப் பிரிய மனம் இல்லாது நம்மிடம் விடை பெற்றுச் சென்ற ஓர் கருப்பு நாள். "வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி, மக்களின் மனதில் நிற்பவர் யார்? மாபெரும் வீரர் மானம் காப்போர் சரித்திரம் தனிலே நிற்கின்றார் " என்ற வரிகளுக்கு உயிரூட்டிய மக்கள் திலகம் எம்ஜிஆர் மறைந்த நாள்.


அவர் மறைந்தாலும் மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டு தான் உள்ளார். 'ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்' என்றார் அண்ணா. அதன்படியே கோடிக்கணக்கான ஏழைகளின் அன்பால் ஆட்சி செய்து, அவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்க வாழ்ந்து காட்டியவர் அண்ணா வின் இதயக்கனி, ஏழைகளின் ஏந்தல் எம்ஜிஆர் அவர்கள். அதுமாத்திரம் அல்ல 'கடமை, கண்ணியம், கட்டுப்பாடு' என்று சொன்னார் அண்ணா. அதுபோலவே "மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும், உள்ளம் என்றொரு ஊரிருக்கும் அந்த ஊருக்குள் எனக்கொரு பேரிருக்கும், கடமை... இது என் கடமை "என வாழ்ந்து சரித்திரம் படைத்தவர் தமிழகத்தின் இதய தெய்வம் எம்ஜிஆர் அவர்கள். அதுமட்டும் அல்ல மனிதன் வாழும் வழிமுறையை அழகாகச் சொல்லி அதன்படியே வாழ்ந்து சகாப்தம் படைத்தவர் கடையேழு வள்ளல்களில் எட்டாம் வள்ளல் எம்ஜிஆர் அவர்கள். "கண் போன பொக்கிலே கால் போகலாமா? கால் போன போக்கிலே மனம் போகலாமா? மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா? மனிதன் போன பாதையை மறந்து போகலாமா"? இந்த மனிதன் போன பாதையை மறந்து போகலாமா? 

வாழ்க எம்ஜிஆர் நாமம்! வளர்க எம்ஜிஆர் புகழ்!!

எம்ஜிஆரின் 34 ஆம் ஆண்டு நினைவு நாளில் புகழஞ்சலி செலுத்தி வீரவணக்கம் செலுத்துவோமாக....

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved