🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கம்பளத்து கவிராயரின் இசைத்தட்டு வெளியீட்டு விழா!

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி ஒன்றியம், கள்ளிகுளத்தைச் சேர்ந்தவர் திரு.T.பெருமாள்சாமி. இரண்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளவர், சிறுவயது முதலே நாடகங்கள் பார்ப்பதில் அதிக ஆர்வமுடையவர். அப்பொழுது முதலே நாடகங்கள் மற்றும் திரைப்படங்களில் வெளியாகும் பாடல்களை மனப்பாடம் செய்து அதேபாணியில் பாடும் திறமை பெற்றிருந்தார். நாட்கள் செல்லச் செல்ல பெருமாள்சாமியின் நாவில் வார்த்தைகள் வந்து நர்த்தனமாட சொந்தமாக வரிகளைப் போட்டு பாடல்களை பாடத்தொடங்கினார். கிராமிய இசை வடிவில் பெருமாள்சாமியின் பாடல்களைக் கேட்டு மக்கள் ஊக்கமளிக்கத் தொடங்கியபொழுது தன்னம்பிக்கை பிறந்தது. தொடர்ந்து பாடல்களைப் பாடத் தெரிந்தவருக்கு அதை எழுதிவைத்துக் கொள்வதற்குக்கூட கல்வியறிவு இல்லை. இருந்தாலும் நூற்றுக்கணக்கான பாடல்களை இயற்றி மனதில் தேக்கிக் கொள்ளும் வல்லமையை இயற்கை பெருமாள்சாமிக்கு வழங்கியுள்ளது. எந்த சூழ்நிலைக்கு ஏற்பவும் பாடல்களை இயற்றும் வல்லமை கொண்ட "பிறவிக்கவிஞர்". 

இயற்கை தனக்கு கொடுத்த இந்த வாய்ப்பைக்கொண்டு தெய்வங்கள் மீது பாசுரம் இயற்றி திருப்தி கொள்ளாதவர், கம்பளத்தார் "தெய்வம்" கட்டபொம்மன் மீது நூற்றுக்கணக்கான பாடல்களை இயற்றி பாடி வருகிறார். இதை முறைப்படியாக இசையமைத்து "இசைத்தட்டு"ஆக வெளிவிட வேண்டும் நீண்டநாள் ஆசை. இதற்காக நமது சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் உள்ளிட்ட பல அமைப்புகளின் உதவியை நாடியபொழுதும் எதுவும் கைகூடவில்லை. தற்பொழுது சமுதாய முக்கிய பிரமுகர்களின் உதவியோடு 38 பாடல்களை தேர்வு செய்து நாடக இசைக் கலைஞர்களை வைத்து இசைக்கோர்ப்பு பணியை முடித்து தன் நீண்டநாள் கனவை நிறைவேற்றியுள்ளார்.

மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் வீரவரலாறு தத்துவப்பாடல்கள் என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்டுள்ள திரு.பெருமாள்சாமி-யின் பாடல்களின் "இசைத்தட்டு வெளியீட்டு விழா" நாளை (26.12.2021) காலை 10 மணியளவில் விருதுநகர் மாவட்டம், கத்தாளம்பட்டியில் அமைந்துள்ள "சென்னக்கம்மாள் மஹால்"-இல் தொழிலதிபர் .P.S.மணி அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் சமுதாய முக்கியத்தலைவர்களும், சுற்றுவட்டார கிராம முக்கியஸ்தர்களும் கலந்துகொள்ள இருப்பதாக விழாவுக்கான ஏற்பாடுகளை செய்து வரும் திரு.கார்த்திகைச்சாமி தெரிவித்தார்.

கள்ளிக்குளத்திலிருந்து சுயம்புவாக தோன்றியுள்ள கம்பளத்துக் கவிஞர் பெருமாள்சாமிக்கு, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved