🔴 LIVE | முப்பெரும் விழா 2023


ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துக! - சமூகநீதி கூட்டமைப்பு.

இந்திய நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணியை பத்தாண்டுகளுக்கு ஒருமுறை ஆங்கிலேயர்கள் ஆட்சிகாலம் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதில் 1931-வரை சாதிவாரி புள்ளி விபரங்கள் திரட்டப்பட்டன. ஆனால் அதற்குப்பின் இரண்டாம் உலகப்போர் தொடங்கியதையடுத்து 1941-இல் நடைபெற்றிருந்திருக்க வேண்டிய கணக்கெடுக்கும்பணி நடைபெறவில்லை.  சுதந்திர இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுக்கும்பணி நடைபெற்றாலும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுக்கும்பணி நடைபெறுவதில்லை. இதில் விதிவிலக்காக தாழ்த்தப்பட்டோர், பழங்குடி, மதச்சிறுபான்மையினர் புள்ளிவிபரங்கள் சேகரிக்கப்படுகின்றன. 

இதன் அடிப்படையில் தாழ்த்தப்பட்டோருக்கான கல்வி, வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு அளவு அவ்வப்பொழுது மாற்றியமைக்கப்படுகின்றன. ஆனால் நாட்டில் 70 சதவீதம் மக்கள்தொகை உள்ள பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட்டாலும் கூட இன்னும் அது எல்லா மட்டங்களிலும் வழங்கப்படுவதில்லை. இதனால் பல பிரிவினருக்கு அரசியல், நிர்வாக வாய்ப்புகள் கைகூடவில்லை. அதேவேளையில் நாட்டில் 3 சதவீதமே உள்ள உயர் வகுப்பினர் 70 விழுக்காடு முதல் 90 விழுக்காடு வரை உயர்பதவிகளில் இருப்பதாக பல புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. 

இதை மாற்றி அனைவருக்கும் அனைத்தும் கொண்டு  சேர்க்க சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று ஐக்கிய ஜனதாதளம், ராஷ்ட்ரிய ஜனதாதளம், பாமக உள்ளிட்ட பல கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன. கொரோனோ பெருந்தொற்றால் தள்ளிப்போயுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் விரைவில் துவங்குமென எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடக்கும்பொழுது பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் மக்கள்தொகை கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்தவேண்டும் என்று சமூகநீதி கூட்டமைப்பு மத்திய, மாநில அரசுகளை கேட்டுக்கொண்டுள்ளது. 

மேலும், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி மக்கள்தொகைக்கேற்ப அனைவருக்கும் அதிகாரத்தில் பங்களிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved