🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கட்டபொம்மன் பிறந்தநாளில் கண்ணியக்குறைவாக நடப்பதா?- கொ.நாகராஜன் அதிருப்தி

கட்டபொம்மன் பிறந்தநாள் விழாவும் கற்றுக்கொடுத்த பாடமும்!

உறவுகளுக்கு வணக்கம். கடந்த 03.01.2022-திங்களன்று நமது மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் 263-வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் எல்லோராலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. பாஞ்சை பெருவேந்தனின் பிறந்தநாள் விழாவில் பல்வேறு கட்சித்தலைவர்களையும், அமைப்புகளின் தலைவர்களையும் சிறப்பு விருந்தினர்களாக  கலந்துகொள்ளச் செய்ய சில தலைவர்களும், சமுதாய அமைப்புகளும் எடுத்துக்கொண்ட முயற்சி பாராட்டுக்குறியது. 

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஐயா.ஓ.பன்னீர்செல்வம், பாஜக மாநில தலைவர் ஐயா.கு. அண்ணாமலை, மதிமுக தலைமை கழக செயலாளர் ஐயா.துரை வைகோ, மதுரை ஆதீனம், ஆர்.எம்.ஆர் பாசறை தலைவர் ஐயா.இராமமோகன்ராவ், முன்னாள், இன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், நிர்வாகிகள் என முக்கிய பிரமுகர்கள் மாவீரனுக்கு நேரில் வந்து மாலை அணிவித்து மரியாதை செய்ததற்கு விடுதலைக்களம் கட்சியின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.  

இதில் முத்தாய்ப்பாக மேதகு தமிழக ஆளுநர் ஆர்.என்.இரவி அவர்கள் ஆளுநர் மாளிகையில் அலங்கரிக்கப்பட்ட மாவீரன் கட்டபொம்மன் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது கம்பளத்தார்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளித்தது என்றால் மிகையல்ல. மேதகு தமிழக ஆளுநர் கடந்த மாதம் தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபொழுது மாவீரன் மணிமண்டபம் அமைந்துள்ள கயத்தாறுக்கு நேரில் சென்று குடும்பத்துடன் மரியாதை செலுத்தியதை கம்பளத்தார் யாவரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டோம். ஆளுநர் மாளிகையில் மாவீரன் பிறந்தநாள் முதமுறையாக கொண்டாடப்பட்டது என்ற செய்தி கம்பளத்தாருக்கு பொங்கல் கரும்பு. 

ஆங்கிலேயர்களை எதிர்த்து தன் இன்னுயிர் நீர்த்த பாஞ்சை வேந்தனின் புகழ் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக நாளுக்கு நாள், நேரத்திற்கு நேரம், நொடிக்கு நொடி வளர்ந்துகொண்டுவரும் அதேவேளையில், பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபடும் நம்மவர்கள் சிலர் செய்திடும் செயல்கள் அம்மாவீரனுக்கோ, சமுதாயத்திற்கோ பெருமை சேர்க்கும் வகையில் உள்ளதா என்பதை நாம் அனைவரும் சுயபரிசோதனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

கடந்த சில வருடங்களாக ஜனவரி'03 ஆம் தேதி பிறந்தநாளின் போதும், அக்டோபர்'16 ஆம் தேதி நினைவுநாளின் போதும் நமது சமுதாய  இளைஞர்கள் ஒருசிலர் வன்முறையில் ஈடுபடுவது, பொதுபோக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துவது போன்ற செயல்களால் பொதுமக்களின் வெறுப்புக்கு ஆளாகி வருகின்றனர். மாவீரன் கட்டபொம்மன் மறைந்து இருநூறு ஆண்டுகள் கழிந்தபின்பும் கூட அவரின் புகழ் நீடித்து நிலைத்து நிற்பதற்கும், சர்வதேச அளவில் அவரின் வீரம் பேசப்படுவதற்கும் காரணம் என்ன என்பதை இளைஞர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். கடந்த 700 வருடங்களாக தமிழகத்தில் கம்பளத்தார் என்றால் ஒழுக்கம், கட்டுப்பாடு, வாக்கு தவறாமைக்கு பெயர் பெற்றவர்கள் என்று மற்ற சமுதாயத்தினர் புகழ்வதும், நம்மோடு இனம், மொழி, மதம் கடந்து அனைவரும் சகோதரர்களாக, மாமன், மச்சான்களாக உறவுமுறையில் இணக்கமாக வாழ்ந்து வருதும் தமிழகத்தில் வேறெந்த சமுதாயத்திற்கும் இல்லாத சிறப்பு.

இப்படி காலம் காலமாக காப்பாற்றப்பட்டு வரும் மாண்பை நம் கண்முன்னே ஒருசிறு கும்பலால் சிதைக்கப்படுவது நமது சமுதாய முன்னேற்றத்திற்கு ஆரோக்கியமானதல்ல என்பதை சமுதாய அக்கறையுள்ள நல்லோர் அனைவரும் ஒப்புக்கொள்வீர்கள் என்று நம்புகிறோம். பள்ளிப்படிப்பைத் தாண்டாத மாணவப்பருவ இளைஞர்கள் மதுபாட்டில்களோடு நடுரோட்டில் திரிவதும், வாகனங்களில் மேலேறி கோசமிடுவதும், போலீசாரோடு மல்லுக்கட்டுவதும் தமிழ்நாட்டில் வாழும் 40 லட்சம் கம்பளத்தார்களை அவமானப்படுத்தும் செயல். உண்மையில் இவர்கள் போலி தமிழ்தேசியவாதிகளைக்காட்டிலும் ஆபத்தானவர்கள். சமுதாயத்தை பீடித்துள்ள உள்ளிருந்தே கொல்லும் நோய் கிருமிகள். இவர்களை அடையாளம் கண்டு அப்புறப்படுத்த வேண்டியது அனைவரின் தலையாய கடமை. இக்கொடிய விஷக்கிருமைகளை அகற்றிட அனைத்து தரப்போடும் ஒருங்கிணைந்து செய்துமுடிக்க விடுதலைக்களம் கட்சி என்றென்றும் துணைநிற்கும் என்பதை உறுதிபட தெரிவிக்கின்றோம்.

பல்லாண்டுகளாக வீழ்ந்து கிடக்கும் சமுதாயத்தை தூக்கி நிறுத்துவதே தலையாய கடைமையாகக்கொண்டு பல்வேறு அமைப்புகளும், தலைவர்களும், சமுதாய அக்கறை உள்ளவர்களும் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர்.  வருங்கால தலைமுறை அடிமைச் சமூகமாக மாறிவிடாமல் காப்பாற்ற கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் என சமுதாயம் முன்னேற இன்னும் கடக்க வேண்டிய தூரம் மிக அதிகம் என்பதை அனைவரும் கருத்தில் கொள்ளவேண்டும். மாறிவரும் சூழலை கருத்தில் கொண்டு உழைத்தால் மட்டுமே  வருங்கால தலைமுறை வளர்ந்து வரும் பிற சமூகங்களோடு சம அந்தஸ்தில் வாழுவதை உறுதி செய்ய முடியும். இந்த இலக்கை அடைய இளைஞர்களுக்கு மாவீரன் பிறந்தநாளில் மட்டும் பீறிட்டுக் கொண்டு வரும் உணர்வு, இடஒதுக்கீடு, உரிமைமீட்பு போராட்டங்களிலும் வெளிப்பட வேண்டும் என்பதே எங்களது வேண்டுகோள்.

நாம் பல அமைப்புகளாக பிரிந்து பல வழிகளில் பயணித்தாலும் அனைவரின் நோக்கமும் சமுதாய முன்னேற்றம் ஒன்றே அடிப்படை. இந்த அடிப்படை புரிதல் இல்லாமல் தான்தோன்றித்தனமாக செயல்படுபவர்களுக்கு சமுதாய மக்கள் குறிப்பாக இளைஞர்கள் யாரும் ஆதரவுக்கரம் நீட்டாமல் இருக்க வேண்டும். இளைஞர்கள் தாங்கள் விரும்பும் இயக்கத்தில் இணைந்து சமுதாயப்பணி ஆற்றலாம். அதேவேளையில் உணர்ச்சிகளுக்கு இடங்கொடுத்து தவறான வழியை தேர்ந்தெடுத்து சமூகவிரோத காரியங்களில் ஈடுபட்டு எதிர்காலத்தை பாழாக்கிக்கொள்ள வேண்டாம் என்று விடுதலைக்களம் கட்சியின் சார்பில் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved