🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சாதிவாரி கணக்கெடுப்பு அகிலேஷ்யாதவ் அறிவிப்பு!

ஆங்கிலேயர்கள் காலத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட  மக்கள்தொகை கணக்கெடுக்கும் பணி ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. 1931-இல் மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 

சுதந்திர இந்தியாவில் இதுவரை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்றாலும் தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்கள், மத சிறுபான்மையினத்தவரின் தனியாக கணக்கிடும்பணி ஒவ்வொரு மக்கள்தொகை கணக்கெடுப்பின்போதும் நடத்தப்படுகிறது. இதற்காக மக்கள்தொகை கணக்கெடுப்பு படிவத்திலேயே வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையிலேயே தாழ்த்தப்பட்ட மக்கள்தொகைக்கேற்ப இடஒதுக்கீடு மாற்றியமைக்கப்படுகிறது. 

ஆனால் நாட்டில் எண்ணிக்கையில் பெரும்பான்மையாக உள்ள இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரான ஓபிசி மக்கள்தொகை கணக்கெடுப்பு மட்டும் நடத்தப்படுவதே இல்லை. இதற்கு அரசு பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டினாலும், அப்படி ஓபிசி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் குறிப்பிட்ட உயர்சாதியினர் ஆண்டாண்டு காலமாக அனுபவித்துவரும் அதிகாரம் கைவிட்டுப்போய் விடும் என்ற அச்சமே காரணம் என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. 

இதற்கிடையே தமிழகத்தில் ஏறக்குறைய அனைத்து கட்சிகளும் இக்கோரிக்கையை நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகின்றன. பிகாரில்  அனைத்துக்கட்சியினர் அடங்கியகுழுவினர் பிரதமர் மோடியை சந்தித்து 2021-மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று வலியுறித்தியது. இதுதொடர்பாக நீதிமன்றங்களிலும் பலர் வழக்கு தொடர்ந்துள்ளனர். ஆனால் மத்திய அரசு பிடிவாதமாக மறுத்து வருகிறது. 

இதற்கிடையே உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஆளும் பாஜக கட்சியில் இருந்து சமீபத்தில் பதவி விலகிய அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் யோகி அரசில் ஓபிசிக்களுக்கு உரிய பிரதிநிதித்துவமோ, அதிகாரமோ வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். உபியில் ஓபிசி மக்கள்தொகை தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கக்கூடிய அளவில் மிக அதிகம் என்பதால் இப்பிரச்சினை தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. அங்கு ஆளும் பிஜேபிக்கும், சமாஜ்வாதி கட்சிக்குமிடையே கடும் போட்டி நிலவிவரும் சூழலில் சமாஜ்வாதி கட்சித்தலைவர் அகிலேஷ்யாதவ் தங்கள் அரசு பதவிக்கு வந்தால் மாநில அரசே சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி மாநிலத்தில் சமூகநீதி நிலைநாட்டப்படும் என்று உறுதி அளித்துள்ளார். 

தமிழகத்தில் வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரத்தை ஒட்டி ஏற்கனவே இக்கோரிக்கை எழுந்துள்ளதால் உபி தேர்தல் முடிவுகள் சாதிவாரி கணக்கெடுக்கும் கோரிக்கைக்கு வலு சேர்க்கும் என்று நம்பப்படுகிறது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved