🔴 LIVE | முப்பெரும் விழா 2023


மீண்டும் அவசர சட்டமா? உண்மைநிலை என்ன? தமிழக முதல்வருக்கு கடிதம்

வன்னியர் இடஒதுக்கீடு சட்டத்தை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்ததை எதிர்த்து பாமக மற்றும் தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு இடைக்கால தடைவிதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. ஏற்கனவே பல்வேறு தீர்ப்புகளில் நீதிமன்றன்றங்கள் இடஒதுக்கீடு வழக்கில் வழங்கியுள்ள தீர்ப்பின் அடிப்படையில் வன்னியர் 10.5 விழுக்காடு இடஒதுக்கீடுக்கு ஆதரவாக தீர்ப்பு வருவதற்கு வாய்ப்பில்லை என்பது பாமக-விற்கு தெளிவாகிவிட்டது. எனவே சமீப காலமாக அக்கட்சியின் கூட்டங்களில் பேசிவரும் அதன் முன்னனி தலைவர்கள் நீதிமன்றமே நமக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கவில்லை என்றாலும்கூட இடஒதுக்கீட்டை பெறும் வழி எங்களுக்கு தெரியும் என்று சவால்விடும் பாணியில் பேசி வருகின்றனர். அதனடிப்படையில் சமீபத்தில் மருத்துவர் இராமதாசு அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் வன்னியர் இடஒதுக்கீட்டிற்கு புதிய அவசர சட்டம் கொண்டுவர வேண்டும் என்று தமிழக முதல்வரை வற்புறுத்தி கடிதம் எழுத வேண்டும் என்று படிவம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சமூகநீதி கூட்டமைப்பினர் உண்மை சட்டநிலையை விளக்கி தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளனர். அக்கடிதத்தின் விபரம் வருமாறு... 

போற்றுதலுக்குரிய முதல்வர் ஐயா;

பொருள் : சாதிவாரி சமூக கல்விநிலை கணக்கெடுப்பு நடத்திய பிறகே இடஒதுக்கீட்டில் மாற்றம் செய்ய கோரி 146 (BC) & 115 (47 MBC & 68 DNT) சமூகங்கள் தீர்மானம்.

ஆண்டாண்டு காலமாய் வேரூன்றிப்போன அநீதிகளை நவீன அறிவாயுதம் கொண்டு வேரோடு அகற்றிவரும் பகுத்தறிவுப்பாதையில் வந்த தமிழக முதல்வரின் கவனத்திற்கும் நடவடிக்கைக்காகவும் 146 (BC) & 115 (47 MBC & 68 DNT) சமூகங்களின் தீர்மானத்தை கீழ்கண்டவாறு சமர்ப்பிக்கின்றோம்.

சமீப காலமாக தமிழகத்தின் MBC 20% இடஒதுக்கீட்டில் உள்இடஒதுக்கீடு சம்பந்தமாக பல தவறான வழிகாட்டுதல் தங்களுக்கு வழங்கப்பட்டுவருகிறது. சாதிவாரி இடஒதுக்கீடு என்பது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானதோடு, சமூகநீதிக்கும், சமூகவளர்ச்சிக்கும் எதிரானது. ஒரு சாதிக்கு தனி இடஒதுக்கீடு அறியாமை அனுமானத்தில் வாக்கு அரசியலுக்காக முன்வைக்கப்பட்டது. சமூகநீதிச்சட்டம் என்பது உச்சநீதிமன்றத்தின் நாகராஜ் கோட்பாட்டின்படி ஒவ்வொருமுறையும் இடஒதுக்கீடு செய்யும் முன் 

1) ஒரு வகுப்பு சமூகரீதியாக கல்விரீதியாக பின்தங்கியுள்ளதா? 

2) போதுமான அளவிற்கு அரசு வேலையில் பிரதிநிதித்துவம் இல்லாமல் உள்ளதா? 

3) அப்படி இடஒதுக்கீடு வழங்குவது நிர்வாகத் திறமையைப் பாதிக்காமல் இருக்குமா? 

என்ற மூன்று சோதனைகளையும் சமீபகாலப் புள்ளிவிபரத்தின் அடிப்படையில் ஒரு ஆணையம் செய்துமுடித்து வழங்கும் பரிந்துரையின் அடிப்படையில்தான் இடஒதுக்கீடு வழங்க முடியும் என்று சமீபத்தில் கூட (19.1.2022) மஹாராஷ்ட்ரா ஓபிசி இடஒதுக்கீட்டு வழக்கில் உச்சநீதி மன்றம் கூறிவிட்டது.  

ஆனால் சமூகநீதிக்கு சற்றும் ஒவ்வாத தனிச்சாதி இடஒதுக்கீட்டுச் சட்டம் 8/2021யை சுய அரசியல் லாபத்திற்காக எடப்பாடி அரசு கொண்டுவந்தது. அச்சட்டத்தை  எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் 1.11.2021ல் அச்சட்டத்தை ரத்து செய்து வழங்கியுள்ள தீர்ப்பு தமிழகத்தின் சமூகநீதியைப் பாதுகாக்கவே என்பதை மறைத்து தங்கள் அரசும் அத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்திருப்பது தமிழக மக்களை மிகுந்த கவலைகொள்ள வைத்துள்ளது. மேலும் அது தங்கள் அரசுக்கு நீங்கா அவப்பெயரை சேர்க்கவுள்ளது.

இந்நிலையில் சில அரசியல் கட்சிகள் மேற்படி சாத்தியமில்லாத சமூகநீதிக்கு எதிரான 8/2021 சட்டத்தை 15.08.2021-க்கு பிறகு வந்த 105-ஆம் அரசமைப்புச் சட்டத் திருத்தம் மாநில அரசுக்கு அதிகாரம் வழங்கியுள்ளதால் மீண்டும் அதே சட்டத்தை மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற கற்பனைக் காரணத்திற்காக அவசரச்சட்டமாகக் கொண்டுவரக் கோரிவருவது வருத்தமளிக்கிறது. மேற்கூறிய சட்டக் கோட்பாடுகளின்படி சமீபகாலப் புள்ளிவிபரங்களின் அடிப்படையில் மேற்கூறிய சோதனைகளைப் பூர்த்திசெய்தால் மட்டுமே வகுப்புவாரி இடஒதுக்கீடு வழங்க முடியும். சாதிவாரி இடஒதுக்கீடு என்ற பேச்சிற்கே இடமில்லை. ஒத்தநிலையில் இருக்கும் சாதிகளை வேறுவேறு பிரிவில் வைக்க வாய்ப்பேயில்லை என்பதை அரசு நன்கு அறியும். அரசமைப்புச் சட்டச் சரத்துகள் 31C, 31B மற்றும் 338B(9) வகுத்துள்ள நடைமுறைப்படியே இடஒதுக்கீட்டுச் சட்டம் கொண்டுவரமுடியும். ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையிலேயே சட்டம் கொண்டுவரமுடியும். தனிநபர் பரிந்துரை ஆணையத்தின் பரிந்துரையாகாது. வன்னியர் தனி இடஒதுக்கீட்டிற்கு எந்த ஆணையமும் எப்போதும் பரிந்துரை செய்யவில்லை. மாறாக ஆணையத்தின் பரிந்துரைகள் அப்படி வழங்கக்கூடாது என்றே உள்ளது. அம்பாசங்கர், ஜனார்தனம், தனிகாச்சலம் பரிந்துரைகள் ஆணையத்தின் பரிந்துரைகள் அல்ல. அவைகள் தனிநபர் சுயசாதிப் பரிந்துரைகள். 

எனவே 146 (BC) & 115 (47 MBC & 68 DNT) சமூகங்களின் சமூகநீதிக் கூட்டமைப்பு முறையான வெளிப்படையான சமூககல்வி நிலைகுறித்த கணக்கெடுப்பு நடத்தி, சமூகநீதி அமைத்துச் சமூகங்களுக்கும் சட்டப்படி சென்றடைய நடவடிக்கை எடுக்கும்வரை தற்போதுள்ள இடஒதுகீட்டில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்றும், சட்டம் 45/1994ன் படி மருத்துவப்படிப்பிலும் 69% இடஒதுக்கீடு அரசு வழங்க கோரி ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி தங்களின் கருணையான நடவடிக்கைக்கு சமர்ப்பிக்கின்றோம்.

இப்படிக்கு

146 BC & 115 MBC/DNT சமூகங்களின் சமூகநீதிக் கூட்டமைப்பு

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved