🔴 LIVE | முப்பெரும் விழா 2023


ஏன் வேண்டும் சாதிவாரி கணக்கெடுப்பு? - அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற குரல் நாடு முழுவதும் சமூகநீதிக்காக போராடுபவர்களால் பல்லாண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் நாடு சாதிகளற்ற சமூகத்தை நோக்கி செல்வதை இலக்காகக் கொண்டிருப்பதால் சாதிவாரி கணக்கெடுப்பு வாதம் பிற்போக்கானது என்று மத்திய அரசு தரப்பில் சொல்லப்பட்டு வருகிறது. 

இக்கருத்து மத்திய அரசின் கருத்தாக தோற்றமளித்தாலும் இதன் பின்னனியில் ஆதிக்க சக்திகள் இருப்பதை யாரும் மறுக்கமுடியாது. பலநூறு ஆண்டுகளாக அதிகாரத்தின் அருகாமையிலும், ஆண்டைகளின் அரவணைப்பிலும் தங்களின் இருப்பை தக்கவைத்துக்கொண்டு, சுதந்திர இந்தியாவில் தங்களை வலுவாக நிலைநிறுத்திக்கொண்டு எல்லா அரசு பதவிகளிலும் ஆதிக்கம் செலுத்துவர்கள், நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் அது வகுப்புவாரி பிரதிநிதித்துவ குரலுக்கு அடித்தளமாக அமையும் என்பதால் அதிகாரத்தின் மூலம் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கு முட்டுக்கட்டை ஏற்படுத்தி வருகின்றனர்.

அரசு நிர்வாகத்தில் ஒரு குறிப்பிட்ட சில சாதிகளே ஆதிக்கம் செலுத்திவந்த நிலையில் தமிழகம் போன்ற ஒருசில மாநிலங்களில் பின்பற்றப்பட்டு வரும் இடஒதுக்கீடு முறையால் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்கள் ஓரளவு கல்வி, வேலைவாய்ப்புகளில் முன்னேறியுள்ளன. இருந்தபோதிலும் முழுமையான சமூகநீதிக்கு, சமூகநீதியின் பலன் அனைத்து சாதிகளுக்கும் சென்றுசேர விகிதாச்சார முறையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதே சமூகநீதிக்காக குரல்கொடுப்பவர்களின் கருத்தாக உள்ளது. 

இக்கோரிக்கைக்க வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது தற்போது வெளியாகியுள்ள 2020-21 ஆம் ஆண்டிற்கான மருத்துவ மாணவர் சேர்க்கை விபரம். 

அதன்படி தமிழகஅரசு பிரிவில் மொத்தமுள்ள 4133 இடங்களில் தெலுங்கு மொழி பேசுவோர் 195 பேர் மட்டுமே உள்ளனர். தமிழகத்தில் மொத்தமுள்ள மக்கள் தொகையில் குறைந்தபட்சம் 30 சதவீதமுள்ள தெலுங்குமொழி பேசுபவர்கள் குறைந்தது 1200-க்கும் மேற்பட்ட இடங்களை பெற்றிருக்க வேண்டும். ஆனால் வெறும் 4.7 விழுக்காடு மாணவர்களுக்கே இடம் கிடைத்துள்ளது. அதேபோல் 7 கோடி மக்கள்தொகையுள்ள தமிழகத்தில்  தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் மக்கள்தொகை மிக மிக குறைந்தபட்சமாக    20 லட்சம் என்று எடுத்துக்கொண்டாலும் மொத்த மக்கள்தொகையில் 2.5 விழுக்காடு பேர் உள்ளனர். ஆனால் மருத்துவ இடஒதுக்கீட்டில் மொத்தமுள்ள 4133 இடங்களில் (4+8+2+1) 15 பேருக்கு மட்டுமே இடம் கிடைத்துள்ளது. இது வெறும் 0.25 விழுக்காடு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புள்ளிவிபரம் ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல் மொத்த பங்களிப்பையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. 

எனவே சமுதாயம் கல்வி, வேலைவாய்ப்பில் நமது உரிமையை நிலைநாட்டிட சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி குரல் கொடுப்பது அவசியமாகிறது. இதன் முதற்கட்டமாக தொட்டிய நாயக்கர் சமுதாய அமைப்புகள் அங்கம் வகிக்கும் சமூகநீதி கூட்டமைப்பு சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அரசை வலியுறுத்தி போராட்டங்கள் தொடங்கியுள்ளன. நேற்று (திங்கள்) ஓசூரில் நடைபெற இருந்த போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒருங்கிணைப்பாள் ராமசாமி தலைமையில் தடையைமீறி அடையாள போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டம் இனிவரும் காலங்களில் நாடு தழுவிய அளவில் கொண்டு செல்லப்பட இருக்கிறது. நாமும் போராட்ட களம்கண்டு உரிமையை நிலைநாட்டிட தயாராவோம்.




  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved