🔴 LIVE | முப்பெரும் விழா 2023


ஆண்ட பரம்பரையின் அவலநிலை! - சினிமா காட்சியை நிஜமாக்கிய சம்பவம்.

பாளையங்கள் வீழ்ந்து பலநூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஜமீன்தார் முறை ஒழிக்கப்பட்டு சில தலைமுறைகள் கடந்துவிட்டன. கம்பளத்தார்கள் கோலோச்சி வாழ்ந்த காலம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து, ஆதிக்க வர்க்கத்திலிருந்து பாட்டாளி வர்க்கத்திற்கு மாறியுள்ளோம். உள்ளூரளவில் உள்ள மதிப்பு தாண்டி அதிகார மட்டத்தில் கம்பளத்தார்கள் செல்லாக்காசு என்பது எதார்த்தநிலை. நவீன தொழில்நுட்ப யுகத்தில் கிராமங்கள் கூட நகரமயமாகி வரும் சூழலில், உள்ளூர் செல்வாக்குகள் கூட இன்னும் சில பத்தாண்டுகள் தான். கல்வியில் ஏற்பட்ட புரட்சி, இடஒதுக்கீடு வழங்கிய வாய்ப்புகள் சமுதாயத்தில் மூன்றில் ஒரு பங்கினர் ஓரளவு படித்து தனியார் நிறுவனங்களில் பணியாற்றியாவது தங்களை நிலைநிறுத்திக்கொண்டனர். மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள், தனியார் நிறுவனங்களில் நல்ல பதவியில் அமர்ந்துள்ளவர்கள், பெற்றோர்களை கடும் உழைப்பிலிருந்து விடுவித்துள்ளதும், பின்தங்கிய நிலையில் உள்ள பிற குடும்ப உறுவுகளின் குழந்தைகளுக்கு கூட கல்விச்செலவை ஏற்றுக்கொண்டு உதவிக்கரம் நீட்டி வருவதும் ஆரோக்கியமான சூழல்.

இதற்கு நேர்மாறாக ஒரு கும்பல் ஆண்ட பரம்பரை என்ற கட்டமைக்கப்பட்ட மிதப்பில் மாவீரன் கட்டபொம்மனாரின் பிறந்தநாளிலும், நினைவுநாளின்பொழுதும் குடியும், கும்மாளமுமாக பொதுமக்கள் முகம் சுழிக்கும் வகையில் நடந்துகொள்வது வாடிக்கையாகி வருகிறது. திருட்டு, கொலை, கொள்ளை என எந்த சட்டவிரோத காரியங்களில் ஈடுபடாத கம்பளத்தார் சமுதாயம் என்று காவல்துறையினராலும் பாராட்டப்படும் சமுதாயம், மாவீரன் பிறந்தநாளில் செய்யும் அழிச்சாட்டியத்தால் ஒட்டுமொத்த சமுதாயமும் தலைகுனிய நேர்கிறது.

அவர்களுக்கெல்லாம் பாடம் புகட்டும் விதமாக ஒரு அதிர்ச்சி சம்மபவம் அரங்கேறியுள்ளது. தமிழகத்தில் கம்பளத்தார்கள் மிக அதிகமாக வசிக்கும் மாவட்டங்களில் விருதுநகர் மாவட்டம் முதன்மையானது. நூறாண்டுகளுக்கு முன்பே சமுதாயத்திற்காக சங்கம் கண்ட மாவட்டம் மட்டுமல்ல, இன்றுள்ள பல சங்கங்களின் தோற்றுவாய் விருதுநகர் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. திரு.சுப்பு, திரு.சுந்தரராஜன், திரு.வரதராஜன் என்று மூன்று சட்டமன்ற உறுப்பினர்களை வழங்கிய மாவட்டம். இன்றும் பல ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத்தலைவர்கள், எல்லா அரசியல் கட்சிகளிலும் முக்கிய பொறுப்பாளர்கள் உள்ள மாவட்டம். நிலபுலங்களை பெருமளவில் இழந்துவிட்டாலும் கூட இன்றும் அம்மாவட்டத்தில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய அளவிற்கு வல்லமைமிக்க சமுதாயம் என்பதையும் மறந்துவிடக்கூடாது.

இத்தனை சிறப்புகள் இருந்தும்கூட, இருபத்தியோறாராம் நூற்றாண்டில் காதல் பிரச்சினைக்காக மகனைப்பெற்ற தாயை பொது இடத்தில் மின்கம்பத்தில் கட்டிவைத்து கொடூர தாக்குதல் நடத்தியிருக்கும் சம்பவம், கம்பளத்தார்கள் மீதான பிற சமுதாய மக்களின் பார்வையும், கம்பளத்தார்களின் தற்போதைய அரசியல், வாழ்வியல் நிலையும் கேள்விக்குள்ளாகியுள்ளது. அப்படி என்ன நடந்தது விருதுநகர் மாவட்டத்தில்?

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகேயுள்ள கே.வாகைகுளத்தைச் சேர்ந்தவர் கம்பளத்தார் சமுதாயத்தைச் சேர்ந்த மீனாட்சி (45). பட்டதாரி இளைஞனான (24) இவரது மகன் சென்னையிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் அதே ஊரில் வசிக்கும் வேறு சாதிப்பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதற்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தநிலையில், கடந்த 22-ஆம் தேதியன்று காதலியோடு மாயமானார் அந்த இளைஞர். இதுகுறித்து இருவீட்டாரும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இருவரையும் வலைவீசித் தேடிவந்த உறவினர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் ஆத்திரமுற்ற பெண்ணின் தாயார் சுதா தனது உறவினர்களுடன் இளைஞரின் வீட்டிற்கு சென்று அங்கிருந்த அவரின் தாயார் மீனாட்சி, பாட்டி அழகம்மாள் ஆகியோரிடம் பிரச்சினை செய்துள்ளார். ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றியநிலையில் "மீனாட்சி"யை நடுரோட்டில் தர தர வென்று இழுத்துச்சென்று அங்குள்ள மின்கம்பத்தில் கட்டிவைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். அக்கும்பல் குடிபோதையில் ஆயுதங்களுடன் இருந்ததால் மீனாட்சியை காப்பாற்ற யாரும் முன்வரவில்லை. தகவல் அறிந்து சென்ற பரளச்சி காவல்துறையினர் மீனாட்சியை மீட்டு, சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவம் நடந்து இருநாட்கள் ஆகிவிட்ட நிலையில் காவல்துறை வழக்கமான பாணியில் யாரையும் கைது செய்யாமல் மெத்தனமாக செயல்பட்டு வருவதாக குற்றச்சட்டு எழுந்துள்ளது. இதுமாதிரி சம்பவங்கள் சினிமாவில் தான் பார்த்துள்ளோம் என்பதை மாலைமலர் பத்திரிக்கைகூட குறிப்பிட்டு எழுதியுள்ளது. ஆண்டாண்டு காலமாக கடைநிலையில், அடிமைப்படுத்தப்பட்டு வந்த சமூகங்கள் மீதுகூட யாரும் இதுமாதிரியான தாக்குதலை இன்றைய காலகட்டத்தில் செய்துவிட முடியாத நிலையில், கம்பளத்தார் பூர்வீகமாக , சமூகமாக பலகுடும்பங்கள் வாழ்ந்துவரும் கிராமத்தில், ஒரு பெண்ணை மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்த கொடுமை நடந்துள்ளது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

இச்சம்பவத்திற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ள விடுதலைக்களம் கட்சியின் நிறுவன தலைவர் கொ.நாகராஜன், காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யாவிட்டால் தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் ஒருசில நாட்களில் போராட்டம் வெடிக்கும் என்று எச்சரித்துள்ளார்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved