🔴 LIVE | முப்பெரும் விழா 2023


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பறிக்கப்படுகிறதா கம்பளத்தார் வாய்ப்புகள்! - பறக்கட்டும் தந்தி!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கம்பளத்தார்களுக்கு வாய்ப்பை உறுதி செய்க! - திமுக தலைவருக்கு கோரிக்கை!

வணக்கம். தமிழக முதல்வராக தாங்கள் பொறுப்பேற்றுக்கொண்டதிலிருந்து உள்நாட்டு மாநிலங்களோடு போட்டிபோடாமல் வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு இணையாக தமிழகத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற உயரிய குறிக்கோளோடு அல்லும் பகலும் அயராது பாடுபட்டுவரும் தங்கள் உழைப்பை போற்றி வணங்குகிறோம்.

தமிழகம் சர்வதேச நாடுகளோடு போட்டியிட முடியும் என்ற நம்பிக்கை அளிப்பதற்கு அடிப்படைக்காரணமாக இருந்தது திராவிட இயக்கத்தின் அடிப்படை தத்துவமான சமூகநீதி. திராவிட இயக்கத்தின் தத்துவங்களை அரசியல் ரீதியாக நடைமுறைப்படுத்தியல் தலைவர் கலைஞரின் பங்களிப்பு அபரிதமானது. ஒவ்வொரு துறை ரீதியாக, சமூக ரீதியாக அனைத்து தரப்பு மக்களுக்கும் அனைத்து வாய்ப்புகளும் சென்று சேரும் வகையில் இடஒதுக்கீட்டை பங்கீடு செய்து அடிமைச் சமூகங்களே தமிழகத்தில் இல்லை என்ற நிலையை உருவாக்கியவர் தலைவர் கலைஞர் என்றால் மிகையல்ல.

அந்த வகையில் தமிழகத்தில் 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வாழும் 40 லட்சம் தொட்டிய நாயக்கர் சமூகத்தினரை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து வீழ்ந்துகிடந்த சமுதாயம் மீட்சிபெற உதவியதை நன்றியுடன் நினைவு கூறுகிறோம். தலைவர் கலைஞர் வழியில் தமிழகத்தை சர்வேச அளவில் வளர்ச்சியடைய வேண்டும் என்ற தங்களின் லட்சியக்கனவிற்கு அடிநாதமாக விளங்கும் சமூகநீதியை தொடர்ந்து உறுதி செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் பேராசிரியர் சுப.வீ. தலைமையில் "சமூகநீதி கண்காணிப்புக்குழு" அமைத்துள்ள தங்களின் பேராற்றல் மானுட சமூக வரலாற்றுப்பேராசிரியர்களாலும் கூட கற்பனை செய்யமுடியாதது. பகுத்தறிவுப் பகலவன் தந்தைப்பெரியாரின் வாரிசாக, உலகப்பல்கலைக்கழகங்கள் கூட உருவாக்க முடியாத சிந்தனையாளரை ஈரோட்டுப்பள்ளி உருவாக்கியுள்ளது என்பது மகிழ்ச்சியாக உள்ளது.

சமூகநீதிக்காக தாங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் தமிழகத்தில் வாழும் அடையாளம் தெரியாத நூற்றுக்கணக்கான இன,மொழி,சாதி சிறுபான்மை மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு உரிமையை உறுதிசெய்யும் என்பதில் எள்முனையளவும் சந்தேகமில்லை.

அதேவேளையில் இச்சமூகங்களுக்கு அரசியலில் சமூகநீதி கிடைக்கவில்லை என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறோம். சுதந்திரம் பெற்றதிலிருந்தே தமிழகத்தில் நூற்றுக்கணக்கான சாதிகளுக்கு அரசியலில் போதிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பது நிதர்சனமான உண்மை. வாக்கு அரசியலில் பெரும்பான்மை தீர்மானிக்கும் நிலையில் நியமன பதவிகளில்கூட வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை. ஒருசில சமூகங்கள் கிராம அளவில், வட்டார அளவில் பெரும்பான்மை இருந்தும்கூட நகரமயமாதல், புதிய மாவட்டங்கள், நகராட்சிகள், மாநகராட்சிகள், பேரூராட்சிகள் உதயம் போன்றவைகளால் இச்சமூகங்களுக்கு கிடைத்துவந்த ஒருசில வாய்ப்புகளுக்கும் ஆபத்துகள் வந்துள்ளது. 

அந்தவகையில் கடுமையான பாதிப்புக்குள்ளான சமுதாயங்களில் தொட்டிய நாயக்கர் சமுதாயம் முதனமையானது. தெலுங்குமொழி பேசும் மொழி சிறுபான்மையினரின் தொட்டிய நாயக்கர் சமூகம் பெரும்பான்மை எண்ணிக்கை கொண்டது. இதை 1000-க்கும் மேற்பட்ட ஊரக உள்ளாட்சிப் பிரதிநிகள் பட்டியல் உறுதி செய்யும். தமிழகம் முழுவதும் 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 40 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாழ்ந்தும் எந்த ஒரு சட்டமன்ற தொகுதியிலும் பெரும்பான்மை இல்லாதது துரதிஷ்டம். கூடுதலாக கல்வி, பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி இருப்பதால் சட்டமன்ற வாய்ப்புகள் எட்டாக்கனியாகவே உள்ளது. சுதந்திர இந்தியாவில் க.சுப்பு உள்ளிட்ட ஒருசிலரைத்தவிர அந்த வாய்ப்பு யாருக்கும் கிட்டவில்லை என்பதும், திமுக அந்த வாய்ப்பினை ஒருமுறைகூட கம்பளத்தாருக்கு வழங்கவில்லை என்பதும் கசப்பான உண்மை. 40 லட்சம் மக்கள்தொகை கொண்ட சமுதாயத்திற்கு ஒரே ஒரு மாவட்ட கவுன்சிலர் மட்டுமே வழங்கியது திமுக என்பது கூடுதல் தகவல்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளில் பாதிக்கும் மேற்பட்ட கம்பளத்தார்கள் திராவிட முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தும் ஒன்றியக்குழு தலைவர் பதவிகூட திராவிட முன்னேற்றக்கழகம் வழங்கவில்லை என்பது வேதனையாக உள்ளது. கழகத்திற்காக பரம்பரை பரம்பரையாக உழைத்துவரும் குடும்பங்கள் கம்பளத்தார் சமுதாயத்தில் நிறைய உண்டு. ஏற்கனவே திமுக-வில் கம்பளத்தார்களின் நிலை படுமோசமாக இருக்கும் நிலையில் எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்னும் சவாலாக அமைந்துள்ளது.

நகரங்களையொட்டி உள்ள கம்பளத்தார் கிராமங்கள் தரம் உயர்த்தப்பட்ட பகுதிகளோடு இணைத்ததின் விளைவாக அந்தந்த மாவட்டங்களிலுள்ள பெரும்பான்மை சமூகங்கள் கம்பளத்தார்களுக்கு கிடைக்கும் ஒருசில வாய்ப்புகளையும் தட்டிப்பறிக்க முனைந்துள்ளதாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வரும் செய்தி மிகுந்த கவலை கொள்ளச்செய்கிறது. ஏற்கனவே எந்தவொரு இராஜ்யசபா, வாரியங்கள் உள்ளிட்ட தலைமையால் முடிவு செய்யப்படும் நியமனப்பதவிகள் கூட கம்பளத்தாருக்கு கிடைக்காத நிலையில் இருக்கும் கடைசி வாய்ப்பும் பறிபோகும் நிலையில் இருப்பது திராவிட இயக்க சமூகநீதிக்கு எதிராக உள்ளது.

எனவே தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கம்பளத்தார் உள்ளிட்ட அனைத்து சாதி சிறுபான்மை சமூகங்களுக்கான வாய்ப்பையும் உறுதி செய்வதோடு, நியமன பதவிகளில் தகுதியான தொட்டிய நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த கட்சியினருக்கு வாய்ப்புகள் வழங்கிட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved