🔴 LIVE | முப்பெரும் விழா 2023


உட்கட்சியில் சமூகநீதி சவக்குழியில்! அகில இந்திய சமூகநீதி சாத்தியமா?

தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி'19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. வேட்புமனு தாக்கல் இன்றுடன் (04.02.2022) முடிவடைய உள்ள நிலையில் எல்லா அரசியல் கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. 

இதுவரை வெளியிடப்பட்டுள்ள பட்டியலின்படி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்ற கட்சிகளை அதிக இடங்களை கம்பளத்தாருக்கு வழங்கியுள்ளது. ஆளும்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தில் வழக்கம்போல் மாவட்டச் செயலாளர்களான குறுநில மன்னர்களின் கையே ஓங்கியுள்ளது. அவர்கள் எந்தவிதக்கட்டுப்படுமின்றி தங்கள் இஷ்டம் போல் செயல்பட்டு, உழைப்பவர்களுக்கு வாய்ப்பை மறுத்து, தன் சாதிக்காரர்களுக்கும், பணபலமிக்கவர்களுக்கும் வாய்ப்பு வழங்குவதாக பலரும் புலம்பி வருகின்றனர்.

இதற்கிடையே நேற்று முன்தினம் (02.02.2022) தமிழக முதல்வர் அகில இந்திய தலைவர்கள் 38 பேருக்கு எழுதியுள்ள கடிதத்தில் அகில இந்திய அளவில் "சமூகநீதி"க் கொள்கையை நாடுதழுவிய அளவில் கொண்டு சென்று உறுதி செய்வதது தொடர்பாக கடிதம் எழுதியிருப்பது கவனத்தைப் பெறுகிறது. தமிழக முதல்வரின் இந்த முடிவு வரவேற்கத்தக்கதே. ஆனால் தமிழக முதல்வர் தன் கட்சியிலும்,ஆட்சியிலும் சமூகநீதியை உறுதி செய்யாமல் அகில இந்திய அளவில் பேசுவது அல்லது முன்னெடுப்பது என்பது கட்டிடம் ஸ்ட்ராங், பேஸ்மென்ட் வீக் என்பதை போல் இருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது. இதற்கு அடிப்படையாக சில காரணங்களை கூறலாம்.

தமிழகத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரையில் எம்ஜிஆர் காலத்தில் தொடங்கி ஜெயலலிதா வரை தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு, கட்சி,ஆட்சி, நிர்வாகத்தில் தனக்கும் கட்சிக்கும் விசுவாசமான அனைத்து சமுதாயத்தினருக்கும் வாய்ப்பு வழங்கி வந்தார்கள். குறிப்பாக ஜெயலலிதா அவர்கள் இன்னும் அதில் ஒருபடிமேலாக பொள்ளாச்சி போன்ற ஒரு சமூகம் அதிகமாக உள்ள தொகுதியில் மொழி,சாதி சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவருக்கு வாய்ப்பு வழங்கி வெற்றிபெறச் செய்ததோடு துணைசபாநாயகர் பொறுப்பும் வழங்கினார். இதனால் கொங்கு மண்டலத்தில் பெரும்பான்மை சமூகத்திற்கு இணையாகவுள்ள மொழி,சாதி,மத சிறுபான்மை சாதியினர் அதிக அளவில் ஆதரவளித்து வருகின்றனர். கட்சியில் யாரும் உயர்ந்தவர் தாழ்ந்தவர், ஆதிக்கமிக்கவர் என்று எவருமில்லை, அம்மாவின் கவனத்துக்கு சென்றால் நமக்கு உரிய நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை அனைத்து தரப்பிற்கும் இருந்ததால் ஒவ்வொருவரும் கட்சிக்காக உழைத்தனர். மொழி,சாதி,இன பாகுபாடின்றி அனைவரும் ஆதரவளித்து வந்தனர்.

அதற்கு நேர்மாறாக திராவிட முன்னேற்றக்கழகத்தில் பெரும்பான்மை சாதியினருக்கே மாவட்ட பொறுப்பிலிருந்து கிளைக்கழக பொறுப்பு வரை அளிக்கப்படுகிறது. ரிசர்வ் தொகுதியுடன் ஒன்றிரண்டு இடங்கள் தவிர அனைத்தும் பெரும்பான்மை சமூகத்திற்கே வழங்கப்படுகிறது. இதுதவிர அரசு நியமனப்பதவிகள், வாரியங்கள் அனைத்தும் மாவட்டச் செயலாளரின் விருப்பப்படியே வழங்கப்படுகிறது. மொழி, சாதி சிறுபான்மையினருக்கு எந்தஒரு வாய்ப்பும் திமுக கழகத்தில் வழங்கப்படுவதில்லை. இதுகுறித்து திமுக தலைமையும் கவலை கொள்வதில்லை. சாதாரண் தொண்டர் தலைமையை அணுகி தன் குறையை போக்கிக்கொள்ளமுடியாது. மாவட்ட செயலாளர், அவர்கள் கட்டுப்பாட்டிலுள்ள தலைமைக்கழக நிர்வாகிகள் தாண்டி தலைமையை ஒருபோதும் நெருங்கிவிடமுடியாது. பெரும்பாலான மாவட்டச் செயலாளர்களுக்கு சமூகநீதி என்றால் என்னவென்றுகூட தெரியாது.

இப்படியான சூழலில் சாதி , மொழி சிறுபான்மையினர்களுக்கு இருந்த ஒரே வாய்ப்பாக  இருந்தது, ஆங்காங்கே ஒருசில இடங்களில் தாங்கள் சமுதாயத்தினர் அதிகமாக வசிக்கும் வார்டுகளில் போட்டியிடும் வாய்ப்பையாவது பெற்று வந்தனர். ஆனால் அதற்கும் முடிவுகட்டியுள்ளது கோவை மாநகராட்சி வெளியிடப்பட்ட திமுக வேட்பாளர் பட்டியல். ஒட்டுமொத்த சிறுபான்மை சாதியினருக்கும் அதிர்ச்சியளிக்கும் வகையில் மாவட்ட செயலாளரின் அரஜாகப்போக்கால் திமுக-வில் நீண்டகாலம் பணியாற்றி வரும் கம்பளத்தாரின் வாய்ப்பு தட்டிப்பறிக்கப்பட்டுள்ளது. 

மாநகராட்சியிலுள்ள 97-வார்டில் கம்பளத்தார் சமுதாயத்தைச் சேர்ந்தவர் பகுதிச் செயலாளராக இருந்து கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக-விற்கு அதிகமான வாக்குகளை பெற்றுக்கொடுத்தார். இருந்தும் அந்த சட்டமன்றத் தொகுதியில் திமுக தோல்வி அடைந்தது. கட்சியில் கால்நூற்றாண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருபவர் தனக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் திமுக வேட்பாளருக்கு மிக அதிக வாக்குகள் பெற்றுக்கொடுத்ததோடு, தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்களையும் மக்களுக்கு கொண்டு சேர்ந்து மக்கள் செல்வாக்கோடு இருந்து வருகிறார். இதனால் தனக்கு நிச்சயம் மாநகர வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கும் என்று அவரும், அவரது ஆதரவாளர்களும் நம்பி வந்தனர். அதற்கேற்றாற்போல் திமுக தலைமை தனியார் நிறுவனம் மூலம் நடத்திய ரகசிய ஆய்விலும் அவருக்கு சாதகமான முடிவே இருந்துள்ளது. இதையறிந்து வேட்பாளர் பட்டியல் வெளியிடும் முன்பாகவே மாவட்டத்திலுள்ள முக்கிய பிரமுகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து நம்பிக்கை அளித்தனர்.

ஆனால் நேற்று பட்டியல் வெளியானபொழுது மாவட்டச் செயலாளரின் மகளுக்கு 97-வது வார்டு போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமான விசயமாக பார்க்கப்படுவது யாதெனில் மாவட்டச் செயலாளர் குடியிருப்பது அந்த வார்டோ அல்லது அருகிலுள்ள வார்டும் கூட கிடையாது. அவர் குடியிருப்பது 15 கிமீ-க்கு அப்பால் உள்ள பகுதி. பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவரான மாவட்டச்செயலாளர் நகரின் எந்த வார்டில் வேண்டுமானாலும் நின்று வெற்றி பெற முடியும். ஆனால் அதையெல்லாம் செய்யாமல், அடுத்தவர் உழைத்து கட்சியை வலுப்படுத்தி வைத்துள்ள பகுதியில், கம்பளத்தார் போன்ற சிறுபான்மை சாதிகள் அதிகமுள்ள தொகுதியில், சிறுபான்மை மக்களுக்கு இருக்கும் ஒருசில வாய்ப்புகளையும் பறித்துக்கொள்வது என்ன மாதிரியான சமூகநீதியை கொங்கு மண்டல திமுக பொறுப்பாளர்கள் கடைபிடித்து வருகின்றார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

ஆனால் அதிமுக-வில் அதே பெரும்பான்மை சாதியைச் சேர்ந்தவர்கள் மாவட்டச் செயலாளராகவும், சட்ட மன்ர உறுப்பினர்களாக இருந்தபோதும்கூட 96-வது வார்டில் கம்பளத்தார்கள் குறிப்பிடத்தக்க அளவில் இருப்பதால் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த மூத்த அதிமுக தொண்டருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்குறிப்பிட்ட உதாரணம் "ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" என்பது போல் கொங்கு மாவட்டம் முழுவதும் இதுதான் நிலை. கொங்கு மண்டலத்தில் திமுக பெரிய அளவில் வெற்றிபெற முடியாமல் போனதிற்கும்/ போவதற்கும் அடிப்படைக்காரணமாக இருப்பது சமூகநீதி கட்சியில் குறைந்த பட்சம் கூட இல்லாததும், அதை தலைமை கண்டும்காணாமல் இருப்பதும் தான். தமிழக முதல்வரும் ஏகப்பட்ட குழுக்களை உருவாக்கி வருகிறார். அதில் சிறந்த ஆளுமைகளை நியமிப்பது மகிழ்ச்சிக்குறியது என்றாலும் கட்சிக்காக உழைத்து, உழைத்து ஓடாய் தேய்ந்த சாதி,மொழி சிறுபான்மை சமுதாய தலைவர்கள் பலர் உண்டு. அவர்களுக்கு நியமனப்பதவிகள் கூட வழங்கப்படுவதில்லை.தமிழக முதல்வர் தன் கட்சியில் சமூகநீதி படும் பாட்டை நேரமிருக்கும்பொழுது கவனித்தாரேயானால் கட்சியின் அடித்தளம் முழுமையாக கரையான் அரிக்கும் முன் காப்பாற்றலாம். இல்லேயேல் இராகுல் காந்தி சொன்ன வாசகம் தான் "DMK ever never win Kongu region".

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved