🔴 LIVE | முப்பெரும் விழா 2023


நிறைவு பெற்றது இடஒதுக்கீடு வழக்கு விசாரணை!- தீர்ப்பு எப்பொழுது?

வன்னியர் 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டம் 8/2021- ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இருதரப்பு வாதங்கள் நேற்றுடன் (23.02.2022) நிறைவு பெற்றதை அடுத்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர் உச்சநீதிமன்ற நீதியரசர்கள். 

முன்னதாக கடந்த 15-ஆம் தேதி வழக்கு விசாரணை தொடங்கியபொழுது மனுதாரர் தரப்பில் மூத்தவழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, ராகேஷ் திவேதி உள்ளிட்டோர் ஆஜராகி வாதிட்டனர். அதனைத்தொடர்ந்து 16-ஆம் தேதியும் மனுதாரர்கள் தரப்பு வாதங்களே தொடர்ந்தது. மனுதாரர் தரப்பு வாதங்களே நிறைவு பெறாதபடியால் மீண்டும் வழக்குவிசாரணையை 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 

அதனையடுத்து கடந்த செவ்வாய்கிழமை விசாரணை தொடங்கியபோது மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன், வைத்தியநாதன், இராதாகிருஸ்ணன் ஆகியோர் வாதிட்டனர். 

மனுதாரர் தரப்பு வாதங்கள் நிறைவுபெற்று கடந்த செவ்வாயன்று பிரதிவாதிகள் தரப்பு சார்பில் வழக்கறிஞர் மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கர நாராயணன் ஒரு மணிநேரம் வாதிட்டார். அன்றைய விசாரணை நிறைவுபெற்று நேற்று வழக்குவிசாரணைக்கு வந்தபொழுது மீண்டும் கோபால் சங்கர நாரயணன் வாதங்களை தொடர்ந்தார். அவரைத்தொடர்ந்து மற்றொரு மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான் ஆஜராகி சுமார் ஒன்றரை மணிநேரம் வாதங்களை எடுத்துவைத்தார். 

அவரைத்தொடர்ந்து மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன், கர்னல்.பாலசுப்பிரமணியம், ஷேஷாச்ரி நாயுடு, காலின் கோன்சால்லிஸ், முருகேந்திரன், ஜெய்தீப் குப்தா உள்ளிட்டோர் வாதுரைத்தனர். 

இருதரப்பு வாதங்களும் நிறைவு பெற்றதையடுத்து, எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டிய வாதங்களை மூன்று நாட்களுக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டு தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

உச்சநீதிமன்றடத்தில் கடந்த 15-ஆம் தேதி வழக்கு விசாரணை தொடங்கியதிலிருந்து எதிர்தரப்பு வாதங்களை குறிப்பெடுத்துக்கொண்டு தகுந்த பதில்களை நம் வழக்கறிஞர்கள் மூலம் நீதிமன்றத்தில் எடுத்துரைக்க தமிழகத்திலிருந்து முனைவர்.மு.ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ், மேனாள் தடயவியல் இயக்குநர்.சி.விஜயகுமார், வழக்கறிஞர் ரஜினி மற்றும் வழக்கறிஞர்குழு டெல்லியில் முகாமிட்டு சிறப்பாக ஒருங்கிணைத்தனர். அதேபோல் நிலைமைக்கு ஏற்ப அரசியல் சாசனத்தில் நிபுனத்துவம் பெற்ற வழக்கறிஞர்களை உடனடியாக ஏற்பாடுகள் செய்த காவல்துறை முன்னாள் உயரதிகாரி.ரத்தினசபாபதி, நிதியுதவிகளை ஒருங்கிணைத்த தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி, வேட்டுவ கவுண்டர் முனுசாமி கவுண்டர், துரைமணி, சீர்மரபினர் நலச்சங்க ஒருங்கிணைப்பாளர் ஒசூர் இராமசாமி ஆகியோருக்கு தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved