🔴 LIVE | முப்பெரும் விழா 2023


7.5% இடஒதுக்கீடு ரத்து? மத்திய அரசுக்கு கடும் கண்டனம்.

மருத்துவப்படிப்பிற்கு நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டபின் அதில் கேட்கப்படும் கேள்விகள் சிபிஸ்சி பாடத்திட்டத்திலிருந்து கேட்கப்படுவதால் அரசுப்பள்ளிகளில் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் ஏழை எளிய கிராமப்புற மாணவர்கள் எளிதில் வெற்றிபெற முடியாத சுழல் ஏற்பட்டது. சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் படிப்பவர்களும் கூட இத்தேர்வில் வெற்றிபெருவதற்கு தனியார் பயிற்சி மையங்களில் சேர்ந்து பல லட்சங்கள் செலவு செய்து பிரத்யோகமாக படித்தால் மட்டுமே வெற்றிபெறக்கூடிய சுழல் நிலவிவருகிறது. அப்படி தனியார் பயிற்சி மையங்களில் படித்தவர்களும் கூட இரண்டாவது, மூன்றாவது முயற்சிக்குப்பிறகே மருத்துவம் பயிலும் வாய்ப்பினை பெறமுடிவதை இந்தாண்டு மருத்து சேர்க்கை புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

நீட் பயிற்சி மையங்கள் ஐந்து முதல் பத்து லட்சங்கள் கட்டணமாக வாங்கிவருகின்றன.  அரசுப்பள்ளியில் படிக்கும் ஏழை எளிய மாணவர்கள் நுழைவுத்தேர்வுக்காக இரண்டாண்டு காலம் கூடுதலாக படிப்பது, லட்சங்களில் கட்டணம் செலுத்துவது என இரண்டுமே சாத்தியமில்லாதது என்பதால் மருத்துவம் என்பது அவர்களுக்கு எட்டாக்கனியாக மாறியுள்ளது. 

இதனை கருத்தில் கொண்டு மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையிலான அதிமுக ஆட்சியில் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை ரத்துசெய்யக்கோரி, அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளும், மாணவர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தனர்.

இவ்வழக்கு மீதான இறுதி விசாரணை  தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் கடந்த வியாழக்கிழமை துவங்கியது.

இடஒதுக்கீட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு, தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு அமலில் உள்ள நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு அமல்படுத்தும் போது, 31 சதவீத பொதுப்பிரிவினருக்கு பாதிப்பு ஏற்படும் என தெரிவித்தார்.

நீட் தேர்வை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் இந்த இட ஒதுக்கீடு உள்ளதாக மத்திய அரசு பதில் மனுவில் தெரிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், இட ஒதுக்கீடு 50 சதவீதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது என வாதிட்டார். அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதால், தகுதியான மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்றும் தெரிவித்தார்.

தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்கள் சேர முடியாத நிலை இருந்ததால் இந்த இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது என்றும், அரசு பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் யார்? சமுதாயத்தில் எந்த பிரிவினர்? என்பதை ஆராய வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

சமூக கட்டமைப்பில் உள்ள சமமற்ற நிலையை அகற்றவே இச்சட்டம் இயற்றப்பட்டதாகவும் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, ஒரே மாதிரியான படிப்பை படிக்கும் நிலையில் கல்வி நிறுவனங்கள் அடிப்படையில் முன்னுரிமை அளிக்கும் வகையில் இட ஒதுக்கீடு வழங்க முடியுமா எனவும், அப்படியானால் அரசியல் சட்டத்தை மீண்டும் எழுத வேண்டுமா எனவும் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், ஒரே படிப்பை படித்தாலும், அரசு பள்ளி மாணவர்கள் எத்தனை பேர் மருத்துவ படிப்பில் நுழைகிறார்கள் என்பதை பார்க்க வேண்டும் எனவும், கட்டமைப்பு சமநிலையற்ற நிலையை கருதி தான் பொருளாதார ரீதியில் பின்தங்கிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது என்றும் விளக்கினார். இந்த வழக்குகளில் வாதங்கள் தொடர்ச்சிக்காக விசாரணையை மார்ச் 17ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

அரசுபள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு முறையால் மட்டுமே தொட்டிய நாயக்கர் போன்ற எந்த அதிகாரமும் அற்ற விளிம்புநிலை சமூகங்களிலிருந்து கூட மாணவ மாணவியர் மருத்துவ இடங்களை பெறும் வாய்ப்பினை பெற்று வருகின்றனர். நீட் தேர்வு அறிமுகமாகிய பின் முதல் ஓரிரு ஆண்டுகள் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த யாருக்கும் மருத்தும் படிக்க இலவச இடங்கள் கிடைக்காத சூழ்நிலையில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும்  தமிழக அரசு சட்டத்திற்குப்பின்னரே கடந்த இரு ஆண்டுகளாக மாணவ/மாணவியர் மருத்துவம் பயிலும் வாய்ப்பினை பெற்றுவருகின்றனர். 

ஏழை எளிய மக்களின் கல்வி குறித்து கொஞ்சமும் பொருட்படுத்தாமல் மத்திய அரசு 7.5 விழுக்காடு இடஒதுக்கீட்டிற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளதிற்கு விடுதலைக்களம் கட்சியின் சார்பில் அக்கட்சியின் தலைவர் கொ.நாகராஜன், மற்றும் பிற சமுதாய அமைப்புகளும் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொண்டுள்ளனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved