🔴 LIVE | முப்பெரும் விழா 2023


அறியாமையால் தொலைத்த 40 வருடங்கள்.

ஆங்கிலேயர்களின் அடக்கு, ஒடுக்கு முறைக்கு ஆளாகி நாடு கடத்தப்படுதல், நாடு கடத்தும்பொழுது கடலில் தூக்கிவிசப்படுதல், அந்தமான் சிறைகளில் அடைத்தல் போன்ற சொல்லென துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் ஆளான சமுதாயங்களை ஆங்கிலேயர்கள் DNT என்று வகைப்படுத்தி சுதந்திரம் அளிக்கும் முன் இச்சமூகங்களை கொடுமைப்படுத்தியதற்கு உதவிகளை செய்து பரிகாரம் தேடிக்கொண்டனர். சுதந்தரத்திற்குப்பின் 1950-இல் அனந்த சயன ஐயங்கார் தலைமையில் குழு அமைத்து நாடு முழுவதும் உள்ள  De Notified சமூகங்களை அடையாளம் கண்டு,  தமிழகத்தில் தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 68 டிஎன்டி (De Notified Tribes) சமூகங்களை அங்கீகரித்து, அம்மக்களின் சமூக, பொருளாதார, கல்வியினை மேம்படுத்த இந்திய அரசு பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் தனித்தொகுதி, இடஒதுக்கீடு கூட வழங்கப்பட்டு வருகிறது. 

ஆனால் தமிழகத்தில் 1979-வரை DNT சமூகங்களாக அடையாளப்படுத்தப்பட்டதை 1310 அரசாணை மூலம் DNC  சமூகங்கள் என்று எம்ஜிஆர் ஆட்சியில் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மத்திய அரசின் உத்தரவின் அடிப்படையிலேயே இவ்வாறு பெயர்மாற்றம் செய்யப்பட்டது என்று கூறப்பட்டாலும் அந்த மாதிரி எந்த உத்தரவும் மத்திய அரசு பிறப்பிக்கவில்லை என்று பின்நாட்களில் உறுதி செய்யப்பட்டது.  தமிழகத்தில் சில குறிப்பிட்ட சமூகங்களை வளரவிடக்கூடாது என்ற வஞ்சக எண்ணத்தோடு அதிகாரத்தில் இருந்தவர்கள் நடத்திய மோசடி வேலைக்கு நமது அறியாமை பேருதவி செய்தது என்றால் மிகையல்ல. 


இந்த ஓரெழுத்து  பெயர் மாற்றம் இரண்டு கோடி மக்களின் இரண்டு தலைமுறையினரின் வாழ்க்கையையே புரட்டிப்போட்டுள்ளது. கடந்த 40 வருடங்களாக இம்மக்களுக்கு மத்திய அரசு வழங்கிவரும் பல ஆயிரம் கோடி மதிப்பிலான உதவிகளை இழந்து நிற்கின்றோம். 

எம்ஜிஆர் ஆட்சியில் நடைபெற்ற இந்த மோசடிக்கான தண்டனையை அக்கட்சிக்கு இயற்கை உடனடியாக 1980-இல் நடைபெற்ற தேர்தலில் வழங்கிட தவறவில்லை. அத்தேர்தலில் அதிமுக-வை மண்ணைக்கவ்வச் செய்ததின் விளைவாக அடுத்து அந்த ஆண்டே அரசாணை 72-இன் மூலம் DNC என பெயர் மாற்றம் செய்த 1310-அரசாணையை ரத்து செய்து விட்டது. 


அதன்பின் மீண்டும்  DNT என்று சாதி சான்றிதழ் வழங்கியிருக்க வேண்டிய அரசு அதிகாரிகள்இன்று வரை அதை நடைமுறைப்படுத்தவேயில்லை. இது நமது அறியாமையால்  42 வருடங்களை கடந்துவிட்ட நிலையில் இன்று DNT ஒற்றை சான்றிதழ் கேட்டு போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இப்பொழுதும்கூட மத்திய அரசு SEED என்ற திட்டத்தை DNT மக்களுக்கு அறிவித்து ரூ.200 கோடி ஒதுக்கியுள்ளது. ஆனால் தமிழகத்தில் ஒற்றைச்சான்றிதழ் வழங்காத காரணத்தால் இப்பயனை அடையமுடியவில்லை.


எனவே தமிழக அரசு 1980-களிலேயே ரத்து செய்துவிட்ட அரசாணைப்படி DNC சான்று வழங்கிவருவது சட்டவிரோதமானது என்றும், உடனடியாக DNT ஒற்றைச்சான்றிதழ் வழங்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டதோடு அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது.


சென்னையில் நேற்று மாவட்ட ஆட்சியரிடம் சமூகநீதி கூட்டமைப்பு சார்பில் மனுவழங்கப்பட்டது. இதில் நமது தொட்டிய நாயக்கர் சமுதாயம் சார்பாக மத்திய அரசின் ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர் திரு.இராமராஜ், முகப்பேர் இராஜா ஆகியோர் கலந்துகொண்டனர். இதேபோல் நாமக்கல் ஆட்சியரிடம் காந்தியவாதி இரமேஷ் தலைமையிலான குழுவினர் மனு அளித்தனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved