🔴 LIVE | முப்பெரும் விழா 2023


தமிழக அரசின் நிதிநிலை அறிக்கைக்கு கம்பளத்தாரின் பாராட்டுகள்!

தமிழகத்தில் 2021-இல் நடைபெற்ற சட்டமன்றத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றிபெற்று தமிழக முதல்வராக திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அமைச்சரவை கடந்த மேமாதம் பொறுப்பேற்றுக்கொண்டது. இதனையடுத்து கடந்த ஆகஸ்டு மாதம் 2021-22 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் திரு.பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன். இந்த பட்ஜெட்டிற்கான ஆயுட்காலம் வெறும் ஆறுமாத காலமே இருந்தபடியால் அதை திமுக அரசின் முழுமையான  நிதிநிலை அறிக்கையாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. ஆகவே அரசியல் மற்றும் பொருளாதார வல்லுநர்கள், விமர்சகர்கள் திமுக அரசின் முழுமையான நிதிநிலை அறிக்கைக்காக காத்திருந்தனர்.


அனைவரும் எதிபார்த்துக்காத்திருந்த 2022-23 க்காண தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் நேற்று தாக்கல் செய்தார். அதில் பாராட்டுவதற்கும், விமர்சிப்பதற்கும் பல்வேறு அம்சங்கள் இருந்தாலும், சமூக அமைப்பாக தமிழக அரசு தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையில் நேரடியாக மக்களுக்கு ஏற்படப்போகும் நன்மைகள், தீமைகள் குறித்து அலசுவதே ஆரோக்கியமாக இருக்கும்.

அந்தவகையில், தமிழக நிதியமைச்சர் தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையின்படி மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அரசுக்கான சவால்களாக சிலவற்றை குறிப்பிட்டுள்ளார். அதன்படி 2021-இல் தமிழக கண்ட வரலாறு காணாத மழைப்பொழிவு, கொரோனோ இரண்டாம் அலையால் அரசுக்கு ஏற்பட்ட கூடுதல் நிதிச்சுமை மாநில அரசின் நிதிநிலையை வெகுவாக பாதித்தாக குறிப்பிடப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்கிவேண்டியதாக உள்ளது. இவ்விரு காரணங்களுக்கு செலவிடப்பட்ட தொகை தவிர்க்கமுடியாத அவசியமான, அத்தியாவசியமானது. இதை சிறப்பாக கையாண்ட தமிழக அரசை பாராட்டக்கடமைப்பட்டுள்ளோம்.


இந்த சிரமமான வேளையிலும் 2014 முதல் அதிகரித்துவந்த வருவாய் பற்றாக்குறை 8 ஆண்டு இடைவெளிக்குப்பிறகு 7000 கோடி ரூபாய் அளவிற்கு குறைய வாய்ப்புள்ளதாக நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பதும், வருவாய்பற்றாக்குறை இல்லாதநிலையை உறுவாக்குவோம் என வருவாய்துறை செயலாளர் அறிவித்திருப்பதும், நிதிப்பற்றாக்குறை 4.61 சதவீதத்திலிருந்து 3.80 சதவீதமாக குறைய இருப்பதாக கூறப்பட்டிருப்பதும் தமிழக அரசு மிகச்சிறந்த நிர்வாகத்திறனை வெளிப்படுத்தத் தொடங்கியிருப்பதை வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது.

மதிப்புக்கூட்டு வரி அமலில் இருந்தபொழுது தமிழகத்தின் வருவாய் வளர்ச்சி சரக்கு மற்றும் சேவை வரி அமல் படுத்தப்பட்ட பிறகு எட்ட முடியவில்லை என்பதும், ஜிஎஸ்டி இழப்பீடு 30.06.2022 காலக்கெடுவுடன் முடிவடைவதால் வரும் நிதியாண்டில் 20000 கோடி ரூபாய் நிதி இழப்பினை தமிழக சந்திக்க நேரிடும் என்று நிதிநிலை அறிக்கையில் சுட்டிக்காட்டியிருப்பது கவலை அளிப்பதாக உள்ளது.


தமிழக முதல்வர் அறித்துள்ள திராவிட மாடல் ஆட்சியின் கூறுகளாக சமூகநீதி, சமூக நல்லிணக்கம், சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பது தமிழகத்தை வளர்ந்த நாடுகளுக்கு இணையாக வளர்த்தெடுக்கும் முயற்சியாக பார்க்க வேண்டியுள்ளது. சாதி-மத மோதல், கலவரம் தவிர்த்து அமைதிநிறைந்த சுழலுக்கும், சிறந்த சட்டம் ஒழுங்கிற்கும் திராவிட மாடலின் அடிப்படைக்கூறுகள் உதவும் என்பதை வடமாநிலங்களில் சமகாலத்தில் நடைபெற்று விரும்பத்தகாத நிகழ்வுகள் மூலம் உறுதியாகிறது.

மேலும் நாட்டின் மக்கள்தொகையில் தமிழகத்தின் 6.12 சதவீதமாக இருக்கும் நிலையில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழகத்தின் 10 சதவீதமாக இருப்பது தமிழகத்திற்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது. அதேவேளையில் நிதிப்பகிர்வில் தமிழகத்திற்கு வெறும் 4.09 சதவீதம் மட்டுமே வழங்கப்படுவது உழைப்பவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை. எனவே மத்திய அரசு தமிழகத்திற்கு கூடுதல்நிதி ஒதுக்கவேண்டும்.


தமிழ் வழியில் பயிலும் அரசு உதவிபெறும் மாணவர்களுக்கு பாடநூல் வழங்க ரூ.15 கோடி, 6 முதல் 12 ஆம் வகுப்புவரை அரசுப்பள்ளியில் பயிலும் மாணவிகள் உயர்கல்வி பயில மாதந்தோறும் ரூ.1000/- வழங்க அரசு எடுத்துள்ள முயற்சி வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. இதன்மூலம் தொட்டிய நாயக்கர் போன்ற சமுதாயங்களில் பெரும்பான்மையாக உள்ள விளிம்புநிலை குடும்பங்களுக்கு பேருதவியாக இருக்கும். ஏற்கனவே மென்பொருள் துறையின் ஆதிக்கம் வளர்ந்தபின் பெரும்பாலான குடும்பங்களின் முதுகெலும்பாக பெண்கள் மாறியுள்ள நிலையில், தமிழக அரசின் இந்த திட்டத்தின் மூலம் தமிழகத்தில் பெண்கள் முழுமையான அதிகாரத்தை கைப்பற்றும் ஆரோக்கிய நிலை உருவாகும். 

பயிர்க்கடன் தள்ளுபடிக்காக 2531 கோடி, நகைக்கடனுக்காக 1000 கோடி, சுய உதவிக்குழுக்களுக்களின் கடன் தள்ளுபடிக்காக ரூ.600 கோடி என ஆகமொத்தம் 4131 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதின் மூலம் விவசாயத்தை நம்பிவாழும் கம்பளத்தார் சமுதாய குடும்பங்களுக்கு பேருதவியாக இருக்கும்.

அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பையும் முழுமையாக பூர்த்தி செய்ய முடியாவிட்டாலும் அனைவரின் மீதும் அரசுக்கு அக்கறை உள்ளது என்பதை இந்த நிதிநிலை அறிக்கை மூலம் உணரமுடிகிறது. அரசின் முயற்சிக்கு கம்பளத்தாரின் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved