🔴 LIVE | முப்பெரும் விழா 2023


மக்களை வஞ்சிக்கும் மத்திய,மாநில அரசுகள்! - சமூகநீதி கூட்டமைப்பு

சமூக நிதியும் சமூக நீதியும்:

சமூகநீதி என்றால் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்குவது என்ற குறுகிய வட்டத்திற்குள்தான் நமது பார்வை இருந்து வருகின்றது. இது மிகவும் தவறான கண்ணோட்டமாகும். கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சமூக நீதியின் சில பக்கங்களே. அரசியல், பொருளாதாரம், மதம், கலாச்சாரம், பொதுச்சொத்து, தனிச்சொத்து, இயற்கை வளம், நிதி, அறிவியல், சட்டம், திட்டம் என்று சமூகத்தின் எல்லா தளங்களிலும் எல்லா சமூகங்களுக்கும் உரிய உரிமைகளையும் வாய்ப்புக்களையும் வழங்குவதே சரியான சமூகநீதியாகும். கல்வி மற்றும் வேலை வாய்ப்பிலேயே பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இன்றுவரை உரிய உரிமை வழங்கப்படவில்லை. மேலும் இதுவும்  அவசியமில்லாதது, தேச வளர்ச்சிக்கு தீங்கானது, திறமைக்கு எதிரானது போன்ற பல தப்பெண்ணங்களால் ஊனப்பட்டுக் கிடக்கின்றது. 

இந்த பின்புலத்தில் நம்நாட்டின் சமூக நிதி சமூக நீதிக்கு வலுச்சேர்பதாக இருக்கின்றதா? அல்லது அதற்கு எதிராக இருக்கின்றதா? என்பதை நாம் உற்றுநோக்க வேண்டியுள்ளது. ஆண்டுதோறும் மத்திய மாநில அரசுகள் தங்களது நிதிநிலை அறிக்கை மூலம் சமூக நிதியை திட்டமிட்டு நமது பிரதிநிதிகளின் ஒப்புதலோடு செலவு செய்து வருகின்றனர். ஆனால் அவ்வாறு திட்டமிடப்படும் செலவுகள் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பலனைத் தருகின்றதா? என்று நாம் பரிசீலிப்பதில்லை. வளர்ச்சி, முன்னேற்றம் என்ற கோஷ்ங்கள் தொடர்ந்து நம் நாட்டில் முன்னெடுக்கப்பட்டாலும். நாம் உண்மையான வளர்ச்சி, முன்னேற்ற பாதையிலிருந்து விலகி, குறிப்பாக அரசமைப்புக் கோட்பாட்டிற்குப் புறம்பாக  ஏற்றத்தாழ்வை மிகைப்படுத்தும் திட்டங்களையும்,சட்டங்களையும் மட்டுமே முன்னெடுத்து வருகின்றோம். அதற்கு காரணம் பொருளாதார திட்டமிடுதல் என்பது சிலரின் செயல் என்று நினைத்து உலகம் போகிற போக்கில் ஓடிக்கொண்டிருக்கின்றோம்.  விளைவு சமூகநீதிக்குச் சமாதி கட்டப்பட்டுள்ளது. ஏற்றத்தாழ்வு இருக்கத்தான் செய்யும் என்று பலரும் எண்ணக்கூடும். ஆனால் ஏற்றத்தாழ்வு பாமர மக்களைக் கொலை செய்யும் அளவிற்கு இருப்பதை எப்படி சரியென்றோ, சதியென்றோ, விதியென்றோ ஏற்றுக்கொள்வது? 


எதோ இந்த உலகில் பிறந்தோம் வளர்ந்தோம் வாழ்ந்தோம் என்று பொத்தம்பொதுவாக வாழ்ந்து மறையாமல், நமக்கான உரிமைகளை முழுமையாகப்பெற்று, பிறர் நம்மைச் சுரண்டாமல் பாதுகாத்துக்கொள்ளும் அறிவோடு வாழ்ந்து, அடுத்த தலைமுறைகளுக்கும் வழிகாட்டுகிறோமா என்பதை மத்திய, மாநில அரசுகளால் திட்டமிட்டு சுரண்டப்படும் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்கள் உணர்ந்து செயல்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்தான விழிப்புணர்வை மக்களிடம் எடுத்துச்செல்ல தொடர் கருத்தரங்கங்கள் சமூகநீதி கூட்டமைப்பு சார்பாக நடத்தப்படவுள்ளது. இதன் முதல்முயற்சியாக கடந்த சனிக்கிழமையன்று மத்திய மாநில அரசுகளின் 2022-2023ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கைளை சமூகநீதி கண்ணோட்டம் குறித்து தமிழகத்தின் தலைசிறந்த ஆளுமைகள் பேசினர். நிலைத்த ஆரோக்கியமான அனைவருக்கும் ஆனந்தமான உலகை விரைவில் உருவாக்குவோம்.

சமூகநிதி கூட்டமைப்பு

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved