🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கையெழுத்தானது ஒப்பந்தம்! கைகொடுக்குமா ஆப்ரேசன் 864?

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய  நலச்சங்கம் செங்குன்றம் பகுதியில் வண்டலூர்-மீஞ்சூர் 400 அடி வெளிவட்ட சாலையருகே சுமார் 12000 சதுர அடியில் மூன்றடுக்கு கட்டிடம் கட்டப்பட்டு வருவது சமுதாய மக்கள் அறிந்ததே. கொரோனோ பெருந்தொற்று காரணமாக சங்கத்தின் கட்டுமானப்பணிகள்  இரண்டாண்டுகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தன. சமுதாய மாணவ/மாணவியர்களுக்கு  போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி மையமாக செயல்பட வேண்டும் என்ற அடிப்படையில் கட்டப்பட்டு வரும் இக்கட்டிடம் பெரும் நிதிநெருக்கடியையும் சந்தித்திருந்த வேளையில் பிரபல தொழிலதிபர் ஒருவர் உதவிக்கரம் நீட்டிட, நாமக்கல் மாவட்ட தொட்டிய சமுதாய அறக்கட்டளையினரின் சீரிய முயற்சியால் கூடுதல் நிதி வழங்கப்பட்ட காரணத்தால் கடந்தாண்டு ஆக்டோபர் மாத இறுதியில் மீண்டும் தொடங்கப்பட்ட கட்டுமானப்பணிகள் ஏறக்குறைய 95 சதவீதம் நிறைவடைந்துள்ளது.


இதற்கிடையே இச்சங்கத்தின் எதிர்கால திட்டங்களை செயல்படுத்தும் நோக்கில் கூடுதலாக நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதுகுறித்து பேசிய இச்சங்கத்தின் பொருளாளர் எஸ்.இராமராஜூ, ஏற்கனவே கட்டப்பட்டு  வரும் கட்டிடப்பணிகள் நிறைவுபெறும் தருவாயில் உள்ளதாகவும், இக்கட்டிடத்தை சமுதாய பயன்பாட்டிற்கு அர்ப்பணிப்பது குறித்து உரிய நேரத்தில் நிர்வாகிகள் கூடி ஆலோசித்து முடிவெடுத்து அறிவிப்பார்கள் என்றும், மேலும் சமுதாயத்தின் எதிர்கால நலன்களை  கருத்தில்கொண்டு கூடுதல் நிலம் வாங்குவதற்கு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். தோராயமாக ரூபாய் 25 லட்சம் சந்தை மதிப்புள்ள இந்த இடத்திற்கான ஒப்பந்தம் சங்கத்தின் முன்னாள் தலைவர் திரு.சென்னையா நாயக்கர் மற்றும் முன்னாள் செயலாளர்  திரு.சுப்பையா நாயக்கர் ஆகியோர் முன்னிலையில் கடந்த வாரம் கையெழுத்தாகியுள்ளதாக தெரிவித்தார்.


மேலும் இந்த இடத்தை விரைவில் கிரையம் செய்வதற்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருவதாகவும், இதற்காக ஆப்ரேஷன்-864 என்ற பெயரில் சமுதாய மக்களிடமிருந்து நன்கொடை திரட்டப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே சங்கத்தின் கடன்சுமை 12 லட்சமாக இருந்துவரும் நிலையில் இது கூடுதல் சுமை என்றாலும் எதிர்கால சமுதாய நலன் கருதி "ரிஸ்க்" எடுக்க வேண்டிய தேவை இருப்பதாகவும், இதை வெற்றிகரமாக முடிக்கும் ஆற்றலும், அனுபவமும் இச்சங்கம் தொடங்கிய காலத்தில் இருந்து இருப்பதாகவும், எனவே இந்த ஆப்ரேசனை வெற்றிகரமாக இச்சங்கம் நடத்தி முடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved