🔴 LIVE | முப்பெரும் விழா 2023


இடஒதுக்கீடு வழக்கு வெற்றி! கிடாவெட்டு விருந்துக்கு வாங்க!

வன்னியர் சாதிக்கு 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் 8/2021 சட்டத்திற்கு எதிராக தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட சீர்மரபினர் சமுதாய சாதிகளும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலுள்ள பிற சாதியினரும் மிகப்பெரிய அளவில் போராடி வந்தனர். அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மிகவும் பின்தங்கிய சமுதாயங்களாக இருந்தபடியால் முந்தைய அதிமுக அரசும், இன்றைய திமுக அரசும் இச்சமூகங்களை கண்டுகொள்ளவேயில்லை. இன்றைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்னும் ஒருபடி மேலாக  திமுக ஆட்சி அமைந்ததிலிருந்து முதல்வரை நேரில் சந்தித்து முறையிட முயற்சி செய்து இன்றைய தேதிவரை நேரம் முடியவில்லை.

 உயர்நீதிமன்றம் இச்சட்டத்தை ரத்து செய்துவிட்டாலும் புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட சமூகநீதி அரசு என்று சொல்லிக்கொள்ளும் திமுக அரசு, ஒருசாதிக்கு ஆதரவாக, பாமக கைகாட்டும் இந்தியாவின் தலைசிறந்த வழக்கறிஞர் பட்டாளங்களையெல்லாம் அரசு செலவில், குறிப்பாக இச்சட்டத்தால் பாதிக்கப்பட்ட  மக்களின் வரிப்பணத்திலேயே அவர்களுக்கு எதிராக வாதாட வைத்ததை இன்று அவர்கள் வாயாலேயே சொல்லக்கேட்கிறோம். சாமானிய மக்களுக்கு எதிராக பின்னப்பட்ட இவ்வளவு பெரிய சதிவலையை முறியடிக்கும் பொருளாதார, அதிகார வல்லமை தொட்டிய நாயக்கர்,போயர், ஒட்டர்,வண்ணார்,நாவிதர் போன்ற எளிய சமுதாயங்களுக்கு இல்லை என்பது ஊரறிந்த ரகசியம்.

ஆகவே "திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை" என்ற முதுமொழிக்கு ஏற்ப எளிய இச்சமுதாயங்கள் நீதிமன்றத்தையும், கடவுளையும் மட்டுமே நம்பிவந்தனர். இடஒதுக்கீடு வழக்கு விசாரணைக்கு வரும்போதெல்லாம், அவரவர் குலதெய்வங்களை வேண்டி சமூக ஊடகங்களில் பதிவிடுவதே அவர்களின் உச்சபட்ச பங்களிப்பாக இருந்தது. 30-க்கும் மேற்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை எதிர்கொள்ள வழக்கறிஞர்களுக்கு கோடிகளில் கொட்டிக்கொடுக்க வேண்டுமே என்ற ஆதங்கத்தில் புலம்பி வந்தனர்.

ஆனால் மாற்றம் ஒன்றே மாறாதது என்று நிரூபிக்கப்பட்ட இந்த அண்டப்பெருவெளியில் நீதி மட்டுமே மாறாதது என்பதும் நிலைநிறுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் நமக்காக நீதியின் பக்கம் நின்று வாதாட அரசு நியமித்த வழக்கறிஞர்களுக்கு இணையாக புகழ்பெற்ற மூத்த வழக்கறிஞர்கள்,  வழக்கில் அதிகபட்சம் ஓரிரு மணி நேரம் தாங்கள் வாங்கும் கட்டணத்தில் கால்பங்கு மட்டுமே பெற்றுக்கொண்டு வாதாடி நீதியை நிலைநிறுத்தியுள்ளனர். அந்தக் கட்டணத்தைக்கூட உடனடியாக கொடுக்கமுடியாமல் வழக்கறிஞர்களிடமே வாய்தா வாங்கிக்கொண்டுள்ளன இந்த சமுதாயங்கள்.

அரசு எதிர்த்து நின்றாலும் தாங்களின் இஷ்ட தெய்வம், தங்கள் குலதெய்வம் தங்களை காப்பாறியதாக கருதும் இச்சமூகங்கள் வேண்டுதலை நிறைவேற்றத் தொடங்கியுள்ளன. அந்தவகையில் தொட்டிய நாயக்கர் சார்பாக போராட்ட களத்திலும், வழக்குநிதி பங்களிப்பிலும் முன்னின்று வெற்றியைத் தேடித்தந்த நாமக்கல் மாவட்டத்தின் சார்பில், விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகேயுள்ள இருக்கங்குடி மாரியம்மன் கோவிலில் கிடாவெட்டி நேர்த்திக்கடன் செலுத்த ஏற்பாடாகி வருகிறது.

இதுகுறித்து பேசிய நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை தலைவர் திரு.மு.பழனிச்சாமி அவர்கள் 8/2021 சட்டம் வருவதற்கு முன்பிருந்தே போராடி வருவதாகவும், தொட்டிய நாயக்கர் சமுதாய பிள்ளைகள் கடந்த பத்து வருடங்களாகத்தான் நன்கு படித்து பணியமர்ந்து குடும்பத்தைக் காப்பாற்றி வருவதாகவும், இந்த நேரத்தில், தலையில் கல்லைப்போட்டதுபோல் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு உள் ஒதுக்கீடு சட்டத்தை கொண்டு வந்தது. அதையே திமுக அரசும் செய்கையில் இடஒதுக்கீடு குறித்து எந்த விழிப்புணர்வும் இல்லாத தொட்டிய நாயக்கர் போன்ற எளிய சமுதாய பிள்ளைகளின் எதிர்காலம் என்னவாகுமோ என்ற ஐயத்தில் இருக்கன்குடி அம்மனிடம் தினந்தோறும் முறையிட்டு வந்ததாகவும், அது தற்பொழுது நிறைவேறி இருப்பது மனச்சுமையை குறைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

எதிர்கால பிள்ளைகளின் வாழ்க்கையை காப்பாற்றிக்கொடுத்த அம்மனுக்கு நன்றிக்கடனாக இருக்கன்குடி அம்மனுக்கு கிடாவெட்டு நடத்த இருப்பதாகவும், இதில் தமிழகம் முழுவதிலிமிருந்து இடஒதுக்கீட்டிற்காக பாடுபட்டவர்கள், உதவி அளித்தவர்கள் அழைக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார். நேர்த்திக்கடனுக்கான தேதி கலந்து ஆலோசித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

 

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved