🔴 LIVE | முப்பெரும் விழா 2023


மீண்டும் ஏமாற்றத் துடிக்கிறதா அரசு? தொட்டிய நாயக்கர்கள் உண்ணாவிரதம்!

மீண்டும் ஏமாற்றத்துடிக்கிறதா அரசு? தொட்டிய நாயக்கர்கள் உண்ணாவிரதம்!

எம்பிசி பட்டியலிலுள்ள வன்னியர் சாதிக்கு 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு கொண்டுவந்த 8/2021 சட்டத்தை எதிர்த்து தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட எம்பிசி பட்டியலிலுள்ள 115 சாதியினர் தொடர்ந்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்றக்கிளை கடந்த நவம்பர் ஒன்றாம் தேதி ரத்து செய்து உத்தரவிட்டது. உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசும், பாட்டாளி மக்கள் கட்சியும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தன.

இந்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்ற நீதியரசர்கள் நாகேஷ்வரராவ், கவாய் அமர்வு கடந்த 31-ஆம் தேதி வழங்கிய தீர்ப்பில் உயர்நீதிமன்ற தீர்ப்பு செல்லும் என்றுகூறி மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்தது. இதனால் வன்னியருக்கு 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் 8/2021 பதிமூன்றே மாதங்களில் குழிதோண்டி புதைக்கப்பட்டது.

இத்தீர்ப்பு குறித்து தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் வாய்மூடி மௌனியாக இருக்கும்நிலையில், பாமக நிறுவனர் மருத்துவர் ஐயா ராமதாசு, உச்சநீதிமன்ற தீர்ப்பு சாதகமாக வந்துள்ளதாகவும், சிறிய பிழை மட்டுமே இருப்பதால் அதை திருத்தி பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரையை பெற்று மீண்டும் வன்னியர் இடஒதுக்கீடு சட்டத்தை கொண்டுவரலாம் என்று தெரிவித்திருந்தார். இக்கருத்தையே சமூக ஊடகங்களிலும், பொதுவெளிகளிலும் பரப்பி கருத்துருவாக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.

சமீபத்தில் நடைபெற்ற பாமக அவசரக்கூட்டத்தில் பேசிய மருத்துவர் அன்புமணி, வழக்கறிஞர் பாலு உள்ளிட்டோரும் சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பெல்லாம் தேவையில்லை, அரசு நினைத்தால் ஒரே வாரத்தில் புள்ளி விபரத்தை திரட்டி வரும் சட்டமன்றக்கூட்டத்திலேயே மீண்டும் சட்டத்தை கொண்டுவரலாம் என்று பேசியுள்ளனர். அக்கூட்டத்தில் பேசிய மருத்துவர் ஐயா இராமதாசு அவர்கள் தமிழக முதல்வர் ஸ்டாலின் நிச்சயம் வன்னியர் இடஒதுக்கீடை கொண்டுவருவார் என்று பேசினார்.

இதனையடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற திருமண விழாவில் பேசிய தமிழக வாழ்வுரிமைக்கட்சித் தலைவர் வேல்முருகன் அவர்கள் வன்னியர் இடஒதுக்கீட்டை தமிழக முதல்வர் நிச்சயம் உறுதி செய்வார் என்று பேசினார். அதற்கு பதிலளித்துப்பேசிய தமிழக முதல்வரும் நான் கலைஞர் கருணாநிதி மகன் நிச்சயம் உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவேன் என்று உறுதியளித்து பேசினார்.

தமிழக முதல்வர் தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட DNT சமூகங்களுக்கு ஒறைச்சான்றிதழ் வழங்கப்படும் என்று ஆலங்குளம் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் வாக்குருதி அளித்தார். ஆனால் ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆகியும், பலமுறை வலியுறுத்தியும் இதுவரை தமிழக முதல்வர் நிறைவேற்றவில்லை. சாதிசான்றிதழ், இடஒதுக்கீடு சம்மந்தமாக முதல்வரை சந்தித்து முறையிட 115 சமூகங்கள் கடந்த ஓராண்டாக முயற்சி செய்தும் இதுவரை நேரம் ஒதுக்கவில்லை. ஆனால் பாமக, வன்னியர் தரப்பினரை தொடர்ந்து சந்திக்கும் முதல்வர், அவர்கள் வைக்கும் கோரிக்கையை நிச்சயம் நிறைவேற்றுவேன் என்று வாக்குறுதி வழங்குகிறார்.

உச்சநீதிமன்றம் தனிசாதிக்கு இடஒதுக்கீடு இல்லை என்பதையும், போதிய தரவுகள் இல்லாமல் இடஒதுக்கீடு வழங்கமுடியாது என்பதையும், வன்னியர் இடஒதுக்கீடு வழங்க பரிந்துறை செய்த பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர்கள் நீதிபதி ஜனார்த்தனம், நீதிபதி தணிக்காச்சலம் அறிக்கைகளில் இருந்த குறைகளையும் தெளிவாக தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள நிலையில், தலைவர்களின் பேச்சும் முதல்வரின் பதிலும் உச்சநீதிமன்ற தீர்ப்பின் உண்மைத்தன்மையை மறைத்து மீண்டும் மோசடிகளில் ஈடுபட தயாராகி வருகின்றனரோ என்ற ஐயம் 115 சமுதாயங்களிடையே ஏற்பட்டுள்ளது.

எனவே, நீதிமன்றத்தில் போராடிப்பெற்ற நீதியை எளிய மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி மீண்டும் அபகரிக்க நினைக்கும் முயற்சியை தொடக்கநிலையிலேயே முறியடிக்க தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 115 சமூகங்கள் முடிவு செய்துள்ளன. 

இதற்காக வரும் ஞாயிற்றுக்கிழமை (10.04. 2022) காலை 10 முதல் மாலை 5 மணி வரை மதுரை பழங்காநத்தத்தில் தமிழக அரசுக்கு கீழ்க்கண்ட காரணத்தை வலியுறுத்தி  உண்ணாவிரதப் போராட்டத்தை தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 115 சமுதாயங்கள் நடத்துகின்றன. இதில்அனைத்து சமுதாய மக்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. 

இந்த உண்ணாவிரதப்போராட்டத்தின் முக்கிய கோரிக்கைகளாக, (1) அனைத்துசமுதாயத்திற்கும் முறையான ஜாதிவாரி கணக்கெடுப்பை எடுக்க வேண்டும் (2) 2001 முதல் 2021வரை கல்வி வேலைவாய்ப்பில் எந்தெந்த சமூகம் எவ்வளவு இடங்களைப் பெற்று இருக்கிறது என்கிற வெள்ளை அறிக்கையை அளிக்க வேண்டும் (3) தனியார் துறையில் இட ஒதுக்கீடுக்கு சட்டம் இயற்ற வேண்டும் என்று மூன்று கோரிக்கைகள் வலியுறுத்தப்படுகிறது.

அரசின் கவனத்தை ஈர்க்கும் இந்த உண்ணாவிரத ஆர்ப்பாட்டத்தில், நமது   தொட்டிய நாயக்கர் சமூக சார்பாக விடுதலைக்களம்கட்சி நிறுவனர் தலைவர் கொ.நாகராஜன் உண்ணாவிரதம்  மேற்கொள்கிறார். அவரோடு னமது சமுதாய மக்கள் ஆயிரக்கணக்கில் கலந்துகொண்டு நமது குழந்தைகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved