🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பாராமுகம் காட்டும் அரசுக்கு மதுரையில் டிரைலர்!

MBC பட்டியலில் உள்ள 116 சாதிகளுக்கு வழங்கப்படும் 20 விழுக்காடு இடஒதுக்கீட்டில் வன்னியர் ஒரு சாதிக்கு மட்டும் 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் 8/2021 சட்டத்தை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. அரசியல் ஆதாயத்திற்காக ஓரு குறுப்பிட்ட சாதியின் வாக்குகளை பெறுவதற்காக முந்தைய அதிமுக அரசால் கொண்டுவரப்பட்ட இச்சட்டத்தை காப்பாற்ற பின்னர் வந்த திமுக அரசு எவ்வளவோ முயற்சி செய்தும் 115 சமூகங்கள் சட்டத்தின் துணைக்கொண்டு நீதிமன்றங்களில் முறியடுத்து தங்கள் சமுதாயத்திற்கான உரிமைகளை மீட்டுள்ளது.


உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வந்து ஒருவாரகால அவகாசம் கூட ஆகாதநிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ள பலவிசயங்களை மறைத்து, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமலும், வன்னியர் சமுதாயம் எந்த அளவு எம்பிசி பட்டியலிலுள்ள பிற சமுதாயங்களைக் காட்டிலும் பின்தங்கியுள்ளனர் என்பது பற்றி துள்ளியமாக அறிவியல் பூர்வமாக கணக்கிடாமலும், பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரையை மட்டும் பெற்று மீண்டும் சட்டத்தை நிறைவேற்றிக்கொள்ளலாம் என்று தவறான வாதத்தை பொதுவெளியில் பரப்பி, கருத்துருவாக்கத்தை ஏற்படுத்தி, மீண்டும் காரியம் சாதித்துக்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 


இதற்காக ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த அரசியல், நீதி,நிர்வாகம் என அனைத்துத்துறையிலும் இருப்பவர்களும் ஒன்றிணைந்து தமிழக அரசுக்கு நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தி வருகின்றனர். ஆளும்கட்சியில் உள்ள மூத்த அமைச்சரே அப்பட்டமாக சுயசாதி அரசியல் செய்வது வெட்டவெளிச்சமாகியுள்ளது. வன்னியர் சமுதாய பிரதிநிதிகளை உடனடியாக சந்திக்கும் தமிழக முதல்வர், 115 சமுதாய பிரதிநிதிகள் கடந்த ஓராண்டாக முதல்வரை சந்திக்க நேரம் கேட்டும், சந்திக்க நேரம் ஒதுக்காமல் புறக்கணித்து வருவதே சமூகநீதி பேசும் திமுக அரசும் வாக்கு அரசியலுக்காக திராவிட இயக்க அடிப்படை கொள்கைகளுக்கு சமாதி கட்டவும் தயார் என்பதை உணர்த்துகிறது.


எனவே நீதிமன்றத்தில் சட்டத்தின் துணைக்கொண்டு தங்கள் உரிமையை நிலைநாட்டிய சமுதாயங்கள், அரசியல் ரீதியாகவும் வெல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுத்தியுள்ளது. வன்னியர் அல்லாத 115 சமூகங்கள் அவிழ்த்துவிடப்பட்ட நெல்லிக்காய் மூட்டைபோல் ஒற்றுமையின்றி இருப்பதே அரசியல் கட்சிகள் 115 சமுதாய மக்களை கிள்ளுக்கீரையாக நினைப்பதற்கு அடிப்படைக்காரணம் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அரசியல் அரங்கில் ஏற்பட்டுள்ள இந்த கருத்துருவாக்கத்தை முறியடித்து 115 சமுதாயங்களும் ஓரணியில் இருப்பதை காட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.


115 சமூகங்களும் ஓரணியில் திரளமுடியும், தங்கள் சமுதாயத்திற்கும் இடஒதுக்கீடு குறித்தான தெளிவான பார்வையும், புரிதலும் உண்டு என்பதை அரசியல் அரங்கில் அழுத்தமாக பதிவு செய்யும் முயற்சியில் வன்னியர் அல்லாத 115 மிகவும் பிற்படுத்தப்பட்ட ,146 பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் களத்தில் இறங்கியுள்ளன. இதன் தொடர்ச்சியாக  மதுரை பழங்காநத்தத்தில் ஒன்றுகூடி தங்கள் கோரிக்கைகளை அரசுக்கு தெரிவிக்கும் முயற்சியில் கவன ஈர்ப்பு உண்ணாவிரத ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதென முடிவெடுத்து இன்று ஒன்றுகூடியுள்ளனர்.


முன்னதாக இந்த உண்ணாவிரத ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்து தடை ஏற்படுத்த அரசு மேற்கொண்ட முயற்சிகளை மதுரை உயர்நீதிமன்றத்தின் அனுமதியோடு முறியடித்து இப்போராட்டத்தை திட்டமிட்டபடி நடத்தி வருகின்றனர்.


இப்போராட்டத்தில் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் சார்பில் விடுதலைக்களம் கட்சியின் நிறுவன தலைவர் கொ.நாகராஜன் உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வருகிறார். அவரோடு இப்போரட்டத்தில் கரூர்,நாமக்கல், திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, தூத்துக்குடி, விருதுநகர், இராமநாதபுரம் போன்ற தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினர் இயக்க வேறுபாடுகளை கடந்து பெருமளவில் கலந்துகொண்டுள்ளனர். 


இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கம்பளத்தார் சமுதாயத்தின் சார்பில் நாமக்கல் அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி, மேன்மக்கள் அறக்கட்டளை தலைவர் பெ.இராமராஜ், போடி.சௌந்திரபாண்டியன், திருப்பூர் இராமசாமி, ஊராட்சிமன்றத்தலைவர் அழகர்சாமி, மல்லுச்சாமி ஆகிய முக்கியப்பிரமுகர்கள் பங்கேற்றுள்ளனர்.


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved