🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கம்பளத்தார் வரலாற்றில் முதல்முறையாக....

தமிழகத்தில் தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 68 சீர்மரபினர் சமுதாயங்களுக்கு தற்பொழுது DNC என்றும் DNT என்றும் இரட்டை சாதி சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒரே சாதிக்கு இரண்டு சாதி சான்றிதழ்கள் உலகிலேயே தமிழகத்தில் மட்டும் தான் இவ்வாறு வழங்கப்படுகிறது. தமிழகத்தில் DNC சமூகங்கள் MBC பட்டியலிலும், அகில இந்திய அளவில் இச்சமூகங்கள் DNT என்று வகைப்படுத்தப்பட்டு OBC பட்டியலிலும் இடம்பெறுகின்றன.


தமிழகத்தில் 1979 வரை DNT வகைப்பாட்டிற்குள் இருந்த தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 68  சாதிகள் அரசாணை 1310-இன் மூலம் DNC என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டதே இத்தனை குழப்பங்களுக்கும் காரணமாக உள்ளது. 1979-இல் எம்ஜிஆர் அவர்களின் ஆட்சியில் பொருளாதார ரீதியாக இடஒதுக்கீடு வழங்கும் முடிவை அரசு அறிவித்தது. இதனையடுத்து நடைபெற்ற மாற்றங்களின் பொழுதுதான் மத்திய அரசின் உத்தரவுப்படி DNT சமூகங்கள் இனி DNC என்று பெயர் மாற்றம் செய்வதாக அறிவித்தது. பொருளாதார ரீதியான இடஒதுக்கீடு அறிவிப்பிற்கு தமிழகத்தில் ஏற்பட்ட கடும் எதிர்ப்பின் காரணமாக , 1980-இல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்ததது. உடனடியாக சுதாரித்துக்கொண்ட எம்ஜிஆர் அவர்கள் பொருளாதார இடஒதுக்கீடு வழங்கும் முடிவை கைவிட்டதோடு DNC பெயர் மாற்ற அரசாணை 1310-யும் அரசாணை எண் 72-இன் மூலம் விலக்கிக்கொண்டது. 


DNC அரசாணை விலக்கிக்கொள்ளப்பட்டவுடன் தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட சமூகங்களுக்கு  DNT என்றே சான்றிதழ் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அரசு அதிகாரிகளின் அலட்சியத்தாலும், மக்களின் அறியாமையாலும் DNC என்றே வழங்கப்பட்டு வந்தது. 1989-இல் கலைஞர் மு.கருணாநிதி தலைமையிலான அரசு  தனி இடஒதுக்கீடு கேட்டு போராடி வந்த வன்னியர் சமுதாயத்தையும், அத்தோடு DNT பிரிவிலுள்ள 68 சமூகங்கள், இசைவேளாளர், வண்ணார், நாவிதர் போன்ற சாதிகள் என மொத்தம் 116  சமூகங்களை இணைத்து மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் (MBC) வைத்து  கல்வி வேலைவாய்ப்பில் 20 விழுக்காடு இடஒதுக்கீட்டை அறிவித்தது. 


DNC/DNT பிரிவினருக்கு தமிழக அளவிலோ, அகில இந்திய அளவிலோ தனி இடஒதுக்கீடு இல்லாத காரணத்தால் தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 68 DNC/DNT சாதியினரில் பெரும்பான்மை சாதியினர் MBC சான்றிதழே பெற்று வந்தனர். இந்த அறியாமையின் காரணமாக மத்திய அரசு DNT சமூகங்களுக்கு வழங்கி வரும் பலகோடி மதிப்பிலான உதவிகளை 45 ஆண்டுகாலம் பெறாமல் இருந்து விட்டனர். தற்பொழுது மத்திய அரசு அமைத்த ரோஹிணி ஆணையம், இதாதே ஆணையங்கள் OBC பிரிவினருக்கு வழங்கப்படும் 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை மூன்றாக பிரித்து DNT சமூகங்களுக்கு 9 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க பரிந்துரை வழங்கியுள்ளது. இதனை செயல்படுத்தும் முயற்சியில் மத்திய அரசும் பரிசீலித்து வருவதாக தெரிகிறது. மேலும் 2014-இல் DNT பிரிவினருக்கு அகில இந்திய அளவில் தனி ஆணையம் அமைக்கப்பட்டு பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் கூட மத்திய அரசு DNT சமூகங்களுக்கு ரூ.200 கோடிக்கு திட்டங்களை அறிவித்துள்ளது.


எனவே தமிழகத்தில் மீண்டும் DNT சான்றிதழ் கேட்டு 2014 முதல் தமிழகத்தில் தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட சமூகங்கள் போராடி வருகின்றன. 1980-இல் வெளியிடப்பட்ட அரசாணைப்படி (அரசாணை எண்-72 படி) DNT சான்றிதழ் தான் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அரசு நிர்வாகத்திற்கும், DNC சமூகங்களுக்கு அரசாணை 72 குறித்து இதுவரை அறியாமல் இருந்தபடியால் சட்டத்திற்கு புறம்பாகவே இந்த தவறு 40 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. 2014 முதல் போராடி வருவதையடுத்து இக்கோரிக்கையை ஆராய ஐஏஏஸ் அதிகாரி அதுல்ய மிஸ்ரா தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையமும் DNT சான்றிதழ் வழங்க தடையேதும் இல்லை என்றும், DNT சான்றிதழ் வழங்கலாம் என பரிந்துரை செய்தது. இதனையடுத்து 2019-இல் எடப்பாடி தலைமையிலான அரசு மாநில அளவில் DNC சான்றிதழும், மத்திய பணிக்கு DNT சான்றிதழ் என இரட்டைச்சான்றிதழ் வழங்குவதாகவும் அறிவித்தது. இதனால் எந்த பயனும் இல்லை எனக்கூறி DNT என்று ஒரே சான்றிதழ் தான் தேவை என இச்சமூகங்கள் போராடிவருகின்றன.


1980-இல் வெளியிட்ட அரசாணை 72-குறித்த அறியாமையால் இத்தனை கூத்துகளும் நடந்து வருகின்றன. அரசுக்கே தாங்கள் வெளியிட்ட அரசாணை குறித்து தெரியாமல் அதுல்ய மிஸ்ரா ஆணையம் அமைத்ததும், 68 DNT சமூகங்கள் 8 ஆண்டுகாலமாக போராட்டி வருவதும் நடைபெற்று வருகிறது.


கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சி அமைந்ததும் DNT ஒற்றைச்சான்றிதழ் வழங்கப்படும் என்ற அறிவிப்பை ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி பிரச்சாரக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். ஆனால் ஆட்சி அமைத்து பதினோறு மாதங்கள் கடந்துள்ள நிலையில் முதல்வர் தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இதுகுறித்து முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும், ஆட்சியருக்கும் பல கடிதங்கள் அனுப்பப்பட்டும் அனைத்தும் கிடப்பில் இருந்து வருகிறது.


எனவே, அரசுக்கும், முதல்வருக்கும் நம் கோரிக்கையை தொடர்ந்து நினைவுபடுத்த வேண்டும் என்ற அடிப்படையில் விடுதலைக்களம் கட்சி மாநிலம் முழுவதுள்ள 100 வட்டாட்சியர் அலுவலகங்களில் DNT ஒற்றைச்சான்றிதழ் கேட்டு மனு அளித்துள்ளனர். தொட்டிய நாயக்கர் சமுதாய வரலாற்றில் முதல்முறையாக ஒரேநாளில் நூறு வட்டாட்சியர் அலுவலகங்களில் கோரிக்கை மனுக்களை அளிப்பது இதுதான் முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved