🔴 LIVE | முப்பெரும் விழா 2023


எப்படி இருந்த சாதி இப்படி ஆயிடுச்சே! ஜீவசகாப்தன் ஆதங்கம்.

வன்னியர் 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டம் 8/2021-ஐ உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் ரத்து செய்ததைத் தொடர்ந்து சாதிவாரிக்கணக்கெடுப்பின் அவசியம் குறித்தான கருத்தரங்கம் தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட DNT/MBC சமூகங்கள் சார்பாக காணொளி வாயிலாக தினந்தோறும் மாலை 8 மணிக்கு நடைபெற்றுவருகிறது. இதில் பல்வேறு ஆளுமைகள் பங்கேற்று தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். கடந்த 14-ஆம் தேதி நடைபெற்ற கருத்தரங்கில் ஊடகவியலாளர் ஜீவசகாப்தன் கலந்துகொண்டு பேசினார். அவர் பேச்சின் விபரம் வருமாரு..

ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து தங்களை அழித்துக்கொண்ட சமூகங்கள் DNT எனப்படும் சீர்மரபினர் பழங்குடி சமூகங்கள். இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள சமூகங்கள் தமிழகம் முழுவதும் பரவி வாழ்ந்து வந்தாலும் ஆளும்வர்க்கத்தின் மத்தியிலும், ஊடகவியலாளர் மத்தியிலும் இச்சமூகங்கள் குறித்து எந்த புரிதலும் இல்லை என்பதை ஊடகத்துறையில் என்னுடைய அனுபவத்தின் மூலம் அறியமுடிகிறது. இப்பட்டியலில் உள்ள குறவர் சமூகம் பற்றி சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுபோலவே DNT சமூகங்கள் அனைத்திற்கும் நீண்ட வரலாறு உண்டு. இம்மண்ணின் பூர்வகுடி மைந்தர்களுக்கு உரிய நியாயத்தைப் பெற்றுக்கொடுக்கக்கூடிய அளவிற்கான ஆளுமைகள் இச்சமூகங்களில் இல்லாததது கவலைக்குறியது.

டெல்டா மாவட்டங்களில் திராவிட இயக்கத்தை வளர்த்தெடுத்தவர்களில் கள்ளர் சமுதாய மக்கள் முதன்மையானவர்கள் என்பதை மறுக்கமுடியாது. மேற்கு மாவட்டங்களில் மேட்டுக்குடி மனப்பான்மையில் காங்கிரஸ் பேரியத்திற்கு ஆதரவாக இருந்தபொழுதும் மத்திய மாவட்டத்திலும், தென்மாவட்ட்டத்திலும் உள்ள DNT சமூகங்கள் சாமானிய மக்களாக சீர்திருத்த கருத்துக்களுக்கு ஆதரவாக இருந்துள்ளனர். DNT சமூகங்களின் பண்பாடு இந்துத்துவ பண்பாட்டிலிருந்து வேறுபட்டது. இதில் இடம்பெற்றுள்ள எந்தவொரு சமுதாயமும் திருமணம், சடங்குகள் போன்றவற்றை பிராமணர்களை வைத்து நடத்துவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பல தியாகங்களைச் செய்த இச்சமூகங்கள் குறித்தான அரைகுறை பார்வை கொஞ்சம் நஞ்சம் கிடைக்கவேண்டிய சலுகைகளுக்குக்கூட தடையாக உள்ளது. குறிப்பாக மதுரை சுற்றுவட்டாரங்களில் அனைத்து கட்சிகளிலும் கள்ளர், மறவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஒருசிலர் மாவட்டச் செயலாளர், அமைச்சர்களாக இருப்பதால் அவர்களுக்கு என்ன குறை என்ற எண்ணம் பொதுவெளியில் உள்ளது. ஆனால் பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டியது அவசியம், அரசியலில் ஒருசிலர் பதவிகளில் இருப்பது மட்டுமே முழுமையான அதிகாரம் அல்ல. அரசு செயலர்கள், நீதிபதிகள், நிர்வாக அமைப்புகளில் இருப்பவர்களே இந்த நாட்டில் மக்கள் என்ன செய்ய வேண்டும், எதை சாப்பிட வேண்டும், யார் என்ன பேசவேண்டும், படிக்க வேண்டும் போன்றவற்றை தீர்மானிப்பவர்களாக மூன்று சதவீதம் மட்டுமே உள்ள உயர்சாதியினர் உள்ளனர்.

தற்பொழுது எழுந்துள்ள இந்த இடஒதுக்கீடு சிக்கலைப்பயன்படுத்தி பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்குள் மோதலை உருவாக்க சிலர் காத்துக்கொண்டுள்ளனர்.  மத ரீதியாக, சாதிய பெருமிதத்தை தூண்டி உங்களை பலியிடலாம். மிகுந்த கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் இடஒதுக்கீட்டு விவகாரத்தை அனுகவேண்டும். இடஒதுக்கீடு சிந்தனைக்கு எதிரானவர்களின் கைப்பாவையாக மாறிவிடக்கூடாது. நாடுமுழுவதும் இடஒதுக்கீடு சிந்தனையை கொண்டு செல்வது பிரதான பணி. அதற்கு சாதிவாரி கணக்கெடுப்பு மிக அவசியம். அதை இந்திய ஒன்றிய அரசு ஒருபோதும் செய்யாது. அதை முறியடிக்க வேண்டிய கட்டாயம் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு உண்டு. 

சீர்மரபினர் சமூகங்கள் ஊடகத்துறையில் கவனம் செலுத்த வேண்டும். அதன் மூலம் பொதுமக்களுக்கு உங்கள் தரப்பு நியாயங்களை கொண்டு சேர்க்க வேண்டும். எளிய பிற்படுத்தப்பட்ட, குரலற்றவர்களின் குரலாக என்னுடைய குரல் என்றும் சீர்மரபு சமுதாயங்களுக்கு ஆதரவாக இருக்கும் என்று உறுதியளிக்கிறேன் என்று பேசினார். 

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved