🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கோட்டையை நோக்கி பேரணி! உரிமையை காப்போம் வா!

பன்முகத்தன்மையுள்ள ஒரு தேசத்தில், தான் பிறந்த சமுதாயத்தின் உரிமைக்கு குரல்கொடுக்கத் தவறிய மனிதன் அச்சமுதாயத்தின் ஆகப்பெரிய துரோகி, எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தாலும் நடைபிணங்களே என்கிறார் மானுடவியல் தத்துவ அறிஞர். 

அறிந்தோ அறியாமலோ தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களூம் தங்கள் உரிமைகளை பாதுக்காக்க தவறிய நிலையில் தான் உள்ளனர். நாட்டிற்காக தியாகங்களைச் செய்து, இந்திய ஜனநாயகத்தையும், அரசியலமைப்பு சட்டத்தையும் ஏற்றுக்கொண்டு வாளோடு வாழ்ந்த வாழ்விற்கு  விடை கொடுத்து  வாழக்கற்றுக்கொண்ட இச்சமூகங்கள் அரசியலமைப்பு சட்டம் கொடுத்த உரிமைகள் குறித்து அறிந்துள்ளனவா என்றால் இல்லை என்பதே கசப்பான உண்மை. 

ஒரு புறம் சுதந்திற்காக இச்சமூகங்கள் போராடிக்கொண்டு வந்த நிலையில் மறுபுறம் ஆங்கியேலேயர்களோடு கைகோர்த்துக்கொண்டவர்கள் ஆதிக்கம் பெற்றனர். இதனால் தங்கள் குலபலத்திலும் , தோள்வலிமையாலும் ஆட்சி அதிகாரம் செலுத்திய ஆண்ட பரம்பரைகள் இன்று வாழ்வதற்கே அண்டிப்பிழைத்தவர்களின்  கடைக்கண் பார்வைக்காக காத்துக்கிடக்கின்றன. அரசியல் சட்டம் அனைத்து மக்களுக்கும் உரிமைகள் வழங்கினாலும், இவர்களுக்கு கல்வி குறித்தான விசாலமான பார்வையில்லாத்தால் வானம்பார்த்த பூமியிலேயே வாழ்க்கையை தொலைத்து விட்டனர்.

மாற்றங்களை உள்வாங்கிக்கொள்ளாத மந்தி மனநிலையில் பலதலைமுறைகள் சென்றுவிட்ட நிலையில், வாழ்க்கை சூழல் மாறிக்கொண்டே உள்ளது. சிறு சமூகங்களின் நிலவுடைமையும், அதிகாராமும் நாளுக்குநாள் தேய்ந்து வரும் நிலையில், உலகம் வேறு பாதையில் வேகமாக நடைபோடத்தொடங்கி பல்லாண்டுகள் ஆகிவிட்டன. மாற்றங்களை உள்வாங்கி தற்காத்துக்கொள்ளவும், அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ளவும் இச்சமூகங்களுக்குள்ள ஒரே ஆயுதம் கல்வி மட்டுமே. 

பெரும்பகுதி மக்களுக்கு தரமான கல்வி எட்டாக்கனியாக உள்ளநிலையில், கல்வி கைகூடிய முதல்தலைமுறை பட்டதாரிகளுக்கு சந்தைப்பொருளாதாரம் கொடுத்த வாய்ப்புகள் தலைமுறைகளுக்குமான வசந்த காலம் என்று எண்ணிக்கொண்டிருப்பது சாப்ட்வேர் படித்தார்களே தவிர சமூக வரலாற்றை படிக்கத் தவறிவிட்டனர் என்பதே உண்மை. அந்த வேடிக்கை மனிதர்கள் தங்கள் ஏறிவந்த ஏணியில் இன்னும் ஏற வேண்டியுள்ள தங்கள் உறவுகள்  பலலட்சம் என்பதை மறந்து ஏணியை பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறையின்றி உள்ளனர்.

பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு ஏணியாக இருப்பது இடஒதுக்கீடு தான் என்பதை புரிந்துகொள்ள அதிகம் சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. ஏறுபவனுக்கு சறுக்கல் சாண் அளவுதான், உச்சத்தில் இருப்பவனுக்கே ஏணி நிரந்தர பாதுகாப்பு என்பதை உணர மறுத்தால் பள்ளத்தில் வீழ்வது உறுதி. கூலிகளின் தோற்றமும், தன்மையும் தான் மாறியுள்ளதே தவிர இருவரும் பாட்டாளி வர்க்கம் தான். உற்பத்தி சாதனங்களும், சந்தையும் இவர்களுக்கு சொந்தமில்லாதபொழுது பாட்டாளிகளின் உடையிலும், தோற்றத்திலும், வாழ்க்கையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளதே தவிர விவசாயக்கூலிக்கு உடலே வலிமை போனாலும், மென்பொறியியல் கூலிக்கு மூளை பழுதானாலும் அரசாங்க உதவி அவசியம் தேவைப்படும் பாட்டாளி வர்க்கங்களே. 

பாட்டாளி வர்க்கங்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வரும் இந்திய சாதிய சமூகத்தில் கல்வி, வேலைவாய்ப்பு உறுதி செய்ய இடஒதுக்கீட்டின் தேவை மிக முக்கியமானது. எனவே இடஒதுக்கீட்டின் தேவை குறித்து ஒவ்வொரு சமூகங்களும் தெரிந்திருப்பது அவசியமானது. இடஒதுக்கீட்டை பாதுகாப்பது என்பது வருங்கால தலைமுறையை பாதுகாப்பது போன்றது. ஒரு சாதியான வன்னியர்க்கு மட்டும் 10.5 விழுக்காடு என்பது மற்ற சமூகங்களை அடிமைத்தனத்திற்கு தள்ளுவதற்கு அடித்தளமாக இருக்கும். மக்கள் தொகை அதிகம் இருப்பதாலேயே ஒரு சாதிக்கு தனி இடஒதுக்கீடு கொடுக்க அரசியல் அமைப்புச்சட்டத்தில் இடமில்லை. மக்கள்தொகை அதிகமிருக்கும் சாதிகள் அரசியல் அதிகாரத்தில் கொடிகட்டி பறக்கிறார்கள். சிறு சமூகங்களுக்கு அரசியல் அதிகாரம் எட்டாக்கனி, அதிகாரத்தில் நுழைய இருக்கும் ஒரே வாசல் கல்வியால் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் மட்டுமே. 

எனவே அரசியல் அதிகாரமற்ற சமூகங்கள் மானத்தோடு, சுயமரியாதையோடும் வாழ்ந்திட இடஒதுக்கீடு அவசியம். வாக்கு வங்கி அரசியலுக்காக அதை தட்டிப்பறிக்கத் துடிக்கும் அதிகாரவர்க்கத்திற்கு எதிராக நம் எதிர்ப்பை பதிவு செய்ய ஏப்ரல் 22'இல் சென்னை கோட்டையை நோக்கி நடைபெறும் பேரணிக்கு சமுதாய அக்கறையுள்ளவர்களும், சுயநலமாய் சிந்திப்பவர்கள் தங்கள் குடும்ப சந்ததியினர்  அடிமைகளாய் போகாமல் தடுத்திட  சமூகநீதி பேரணியில் பங்கேற்க அலைஅலையாய் திரண்டு வாரீர் வாரீர் என தொட்டிய நாயக்கர் சமுதாய இடஒதுக்கீடு மீட்புக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved