🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சபாஷ் தலைவரே! நீங்களாவது காதுகொடுத்து கேட்டீங்களே!

தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றுள்ள 115 சமுதாயத்தைச் சேர்ந்தவர்களில் முத்தரையர், முக்குலத்தோர், குலாலர், வேட்டுவக்கவுண்டர், ஊராளிக்கவுண்டர், ஒட்டர்,போயர் சமூகத்தினர் தமிழகம் முழுவதும் பல கிராமப்பஞ்சாயத்துகளில் ஊராட்சி மன்றத் தலைவர்களாக உள்ளனர்.

2014-முதல் DNT ஒற்றைச்சான்றிதழ் கோரிக்கையை வலியுறுத்தி இச்சமுதாயத்தைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள் போராடி வருகின்றன. 2019-இல் நடைபெற்ற பாராளுமன்றத்தேர்தலுக்குப்பின், 2021-இல் நடைபெற்றிருக்க வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பின்பொழுது, நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும், DNT ஒற்றை சாதிச் சான்றிதழ் வழங்கவேண்டும் போன்ற தீர்மானங்களை கிராம சபை கூட்டத்தில் தீர்மானமாக  நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை, சமூகநீதி கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள சமூக அமைப்புகளால் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தன.

2021-இல் வன்னியர் சாதிக்கு 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கியபின் சாதிவாரி கணக்கெடுப்பு கட்டாயம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை மேலும் வலுப்பெற்றது. ஏற்கனவே தமிழகத்தில் நடைமுறையிலுள்ள 69 விழுக்காடு இடஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கிலும் சாதிவாரி புள்ளி விபரங்கள் தேவை என்ற கருத்தை உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. சமீபத்தில் நடைபெற்ற வன்னியர் இடஒதுக்கீடு வழக்கிலும் இது எதிரொலித்தது. தொடர்ந்து தமிழகத்தில் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டை காப்பாற்ற சாதிவாரி கணக்கெடுப்பு மிக மிக அவசியமாகிறது.

இதுதவிர அகில இந்திய அளவில் ஓபிசி-க்களுக்கு வழங்கப்படும் 27 விழுக்காடு இடங்களில், இதுவரை 12 விழுக்காடு இடங்களே நிரப்பப்பட்டுள்ளன. அகில இந்திய அளவில் பல லட்சக்கணக்கான பணியிடங்கள் உள்ள நிலையில் அதுபற்றிய விழிப்புணர்வு ஓபிசி மக்களிடையே இல்லாத காரணத்தால் அப்பணியிடங்கள் அனைத்தையும் உயர்சாதியினரே பல ஆண்டுகளாக அனுபவித்து வருகின்றனர்.


எனவே தமிழகத்தில் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டை தக்க வைத்துக்கொள்ளவும், அகில இந்திய அளவில் ஓபிசி பணியிடங்களை தமிழகம் மற்றும் நாடெங்குமுள்ள 70 சதவீத பிற்படுத்தப்பட்ட மக்களின் குழந்தைகள் பலன்பெறவும், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு அவசியமாகிறது. ஏற்கனவே மக்கள்தொகை கணக்கெடுப்பில் எஸ்சி/எஸ்டி மற்றும் மத சிறுபான்மையினர் கணக்கெடுப்புகள் நடத்தும்பொழுது, ஓபிசி கணக்கெடுப்பு நடத்துவது மட்டும் அவ்வளவு கஷ்டமான காரியம் ஒன்றுமில்லை. ஏற்கனவே எடுக்கப்படும் படிவத்தில் கூடுதலாக ஒரு கட்டத்தை சேர்த்தால் போதுமானது. ஆனால் ஓபிசி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திவிட்டால் அதற்கேற்றாற்போல் இடஒதுக்கீடு கோருவார்கள் என்பதால் அரசு பல்லாண்டுகளாக மறுத்து வருகின்றது.

வன்னியர் இடஒதுக்கீடு தீர்ப்பிற்குப்பிறகு மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலிலுள்ள தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட அரசியல் செல்வாக்கற்ற சாதிகள் மீண்டும் ஏமாற்றப்படாமல் தடுக்க சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி கிராம சபைகளில் தீர்மானம்   நிறைவேற்ற வேண்டுமென்ற கோரிக்கை மீண்டும் வலுவாக ஒலிக்கத்ஹுவங்கியுள்ளது. 

கடந்த இரண்டு மூன்று வருடங்களாக சமுதாய அமைப்புகளால் முன்வைக்கப்படும் கோரிக்கையை நேற்று மே ஒன்றாம் நாள் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில், தங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ள ஊராட்சிகளில் அழுத்தம்கொடுத்து பல சமூகங்கள் தீர்மானத்தை நிறைவேற்றின.

20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான உள்ளாட்சி பிரதிநிதிகளைக்கொண்ட தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் சார்பில் தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் ஒன்றியத்திலுள்ள, சுப்பிரமணியபுரம் ஊராட்சி மன்றத்தலைவரும் வழக்கறிஞருமான திரு.இராம்குமார் அவர்கள் தனது கிராமத்தில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளார். திரு.இராம்குமார் அவர்களுக்கும் சுப்பிரமணியபுரம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் ஆகியோருக்கு சமூகநீதி கூட்டமைப்பு சார்பில் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved