🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கிராமசபை தீர்மானம்! ஊராட்சிமன்ற தலைவருக்கு பாராட்டு!

கடந்த மே-1 ஆம் நாள் தமிழகமெங்கும் கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றன. இக்கூட்டத்தில் முதல்முறையாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி பல கிராம ஊராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாட்டிலேயே முன்மாதிரியாக நிறைவேற்றப்பட்ட இத்தீர்மானம் அரசியல் வட்டாரத்தில் பலரின் கவனத்தைப் பெற்றது. நேற்று மாலை சத்தியம் தொலைக்காட்சியில் "சத்தியம் சாத்தியமே" விவாத நிகழ்ச்சியில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுமா? தீர்மானம் நிறைவேற்றும் கிராமசபைகள்- தமிழக அரசு என்ன செய்யப்போகிறது? என்ற தலைப்பில் ஒருமணி நேர விவாதம் நடைபெற்றது.

மக்களின் கோரிக்கையாக ஒலிக்கத்துவங்கியுள்ள இந்தக்குரல் அரசின் செவிகளை எட்டும் முன், மக்களோடு மக்களாக பயணிக்கும் ஊராட்சி மன்றத் தலைவர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது. அதனால் இதுவரை உள்ளூர் தேவைகள், அரசுக்கேற்றாற்போல் அதிகாரிகள் வடிவமைத்துக்கொடுக்கும் தீர்மானங்களை நிறைவேற்றி வந்த ஊராட்சி மன்றத் தலைவர்கள், தற்பொழுது மக்களின் குரலை கிராமசபையில் தீர்மானமாக நிறைவேற்றியுள்ளனர். 

அந்தவகையில் மக்களின் தேவை மற்றும் எதிர்கால அரசியல் போக்கை தீர்மானிக்கும் சக்தியுடைய இக்கோரிக்கை மக்கள் இயக்கமாக மாறிவருவதை முன்கூட்டியே கணித்த ஊராட்சி மன்றத் தலைவர்கள் பலர் இத்தீர்மானத்தை நிறைவேற்றி 69 இடஒதுக்கீட்டை பாதுகாக்க குரல் கொடுத்துள்ளனர். நமது கம்பளத்தார் சமுதாயத்தின் சார்பில் நாமக்கல் மாவட்டம் திண்டமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் K.P.இராமசாமி அவர்களும், தென்காசி மாவட்டம், சுப்பிரமணியபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் ராம்குமார் அவர்களும் சாதிவாரி கணக்கெடுப்பு தீர்மானத்தை நிறைவேற்றி, தமிழகத்தில் வழங்கப்படும் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டை பாதுகாக்க வலியுறுத்தியுள்ளனர். 

எதிர்கால அரசியலை சரியாக நாடிபிடித்து கணித்து காரியமாற்றத் துவங்கியுள்ள இரு தலைவர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம். வரும் ஆகஸ்டு 15-இல் நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் கம்பளத்தார் சமுதாயத்தினர் வசிக்கின்ற அத்தனை ஊராட்சி மன்றங்களிலும் இத்தீர்மானத்தை நிறைவேற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டுகிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved