🔴 LIVE | முப்பெரும் விழா 2023


ஆகஸ்டு-7'இல் மதுரையில் மாபெரும் மாநாடு!

அகில இந்திய அளவில் பிற மாநிலங்களில் சீர்மரபின மக்களுக்கு DNT சாதி சான்றிதழ் வழங்குவதுபோல் தமிழகத்திலும் சீர்மரபினர் பட்டியலில் இடம்பெற்றுள்ள தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 68 சாதிகளுக்கு வழங்கப்படும் DNC சான்றிதழுக்கு பதிலாக DNT சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை 2014 முதல் எழுப்பப்பட்டு வருகிறது. 1979-வரை தமிழகத்திலும் DNT சாதி சான்றிதழ் வழங்கி வந்தநிலையில் திடீரென DNC என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மக்கள் அறியாமையில் இருந்தபடியால் 35 ஆண்டுகளுக்கு மேலாக DNC/DNT வேறுபாடுகளை அறிந்திருக்கவில்லை. 2014-முதல் இக்கோரிக்கையை நிறைவேற்றக்கோரி நடைபெற்றுவந்த போராட்டங்கள் மெல்ல மெல்ல வலுப்பெற்று அரசுக்கு தீராத தலைவலியை ஏற்படுத்தியது. 2019 பாராளுமன்ற தேர்தலையொட்டி இப்பிரச்சினைக்கு தீர்வுகாணுவதாக அறிவித்த அன்றைய ஆளும் கட்சியான அதிமுக DNC/DNT என இரட்டைச் சான்றிதழ் முறையை அறிமுகப்படுத்தியது.


DNT சமூகங்களுக்கு இடஒதுக்கீடு ரீதியாக மத்திய அரசுப்பதவிகளில் எந்தவிதமான பலனும் இல்லை என்றாலும், நலத்திட்ட உதவிகள் பெரிய அளவில் வழங்கப்பட்டு வருகின்றன. தற்பொழுதுகூட ரூ.200 கோடி DNT சமுதாயங்களுக்கு நலத்திட்ட உதவிகளை மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசைப்பொறுத்தவரையில் DNC என்ற வகைப்பாடு இல்லாததால் தமிழகத்தில் மட்டும் வழங்கப்படும் DNC சான்றிதழால் எந்தவிதப்பயனும் இல்லாமல் உள்ளது. DNC/DNT என இரட்டை சான்றிதழ் வழங்கி DNC-யை தமிழகத்திலும், DNT சான்றிதழை மத்திய அரசுக்கும் பயன்படுத்திக்கொள்ள அரசு தரப்பில் சொல்லப்பட்டாலும், இரு சாதிக்கு இரண்டு வகையான சாதி சான்றிதழ் வழங்குவது அரசியல் சட்டத்திற்கு எதிராக உள்ளது. மேலும் 1979-வரை DNT சாதி சான்றிதழ் கொடுத்த அரசு தற்பொழுது கொடுக்கத் தயங்குவதின் பின்னனி என்ன என்ற கேள்வி எழுகிறது.


இக்கோரிக்கை கடந்த சட்டமன்ற தேர்தலில் எதிரொலித்ததின் விளைவாக தென்மாவாட்டங்களில் அன்றைய ஆளும் கட்சியான அதிமுக கடும் எதிர்ப்புகளையும், சரிவையும் சந்தித்தது. ஆளும்கட்சி மீதான எதிர்ப்பை பயன்படுத்திக்கொள்ள நினைத்த அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது தேர்தல் பிரச்சாரத்தின்பொழுது சீர்மரபினர்களுக்கு திமுக ஆட்சி அமைந்தவுடன் DNT சான்றிதழ் வழங்கப்படும் என்று ஆலங்குளம் தொகுதி தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் அறிவித்தார்.


இதனையடுத்து திமுக ஆட்சி அமைந்தவுடன் தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட சமூகங்களுக்கு DNT சான்றிதழ் கொடுப்பது குறித்து முதல்வர் நல்ல முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்ப்புடன் ஓராண்டு கடந்துள்ள நிலையில், இதுகுறித்து முதல்வரை சந்தித்து முறையிடக்கூட அனுமதி கிடைத்தபாடில்லை.


இப்பிரச்சினையோடு வன்னியர் இடஒதுக்கீடு விவகாரமும் சேர்ந்து கொண்டதால், இருமுனை தாக்குதலை தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட சமூகங்கள் எதிர்கொண்டு வருகின்றன. இடஒதுக்கீடு பிரச்சினையை உச்சநீதிமன்றம் வரை சென்று வழக்காடி ஒருவகையில் வெற்றி பெற்றிருந்தாலும், மீண்டும் அச்சட்டத்தை நிறைவேற்ற அரசுக்கான அழுத்தம் அதிகரித்துக்கொண்டே உள்ளது. போதிய புள்ளி விபரங்கள் இல்லை என்று தள்ளுபடி செய்துவிட்டாலும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முடிக்காமல் வன்னியர் இடஒதுக்கீடு வேண்டுமென்ற கோரிக்கை வேகமெடுத்து வருகிறது.


 சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியே இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட சமுதாய அமைப்புகள் அரசை வலியுறுத்தி வந்தாலும், இக்கோரிக்கையை வலியுறுத்தும் சாதி மக்களிடம் இடஒதுக்கீடு குறித்தான விழிப்புணர்வு இல்லையென்று அரசியல் கட்சிகள் கருதுவதால், உச்சநீதிமன்ற தீர்ப்பிற்குப்பிறகு கூட பொதுவெளியில் பேச அரசியல்கட்சியினர் பயப்படுகின்றனர். 


ஒவ்வொரு சமுதாயமும் தங்கள் சமுதாய மக்களின் எதிர்கால நன்மைக்காக அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை பாதுகாப்பது அவசியம். இதை ஒவ்வொரு சமுதாய மக்களிடமும் எடுத்துச்செல்ல வேண்டிய பெரும்பொறுப்பு சமுதாய அமைப்புகளிடம் உள்ளது. அரசியல் சாசனம் மக்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளை பாதுக்காக்க் மக்கள் தன்னெழுச்சியாக திரண்டால் ஒழிய அரசுகள் தங்கள் பார்வையை இச்சமூகங்கள் மீது திரும்பாது என்பது அரசின் பாராமுகம் மூலம் உறுதியாகிறது.


எனவே தொட்டிய நாயக்கர் சமுதாயம் உள்ளிட்ட 261 சாதிகள் இணைந்த சமூகநீதி கூட்டமைப்பின் சார்பில்  மக்களைத் திரட்டும் பணி நடைபெற்றுவருகிறது. அதன் முதற்கட்டமாக வரும் ஆகஸ்டு 7-ஆம் நாள் மதுரை மாநகரில் மாபெரும் மாநாடு ஒன்றை நடத்தி தங்கள் வலிமையை அரசுக்கு உணர்த்திட ஆயத்தமாகி வருகிறது. இந்த சமூகநீதி மாநாட்டில் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து பெரும் திரளான மக்கள் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved