🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கோலகலமாக நடைபெற்ற நாயக்கர்களின் நாளேர் பொன்னுழவு: சித்திரைக்கொண்டாட்டம்!

இராமநாதபுரம், கமுதி வட்டாம், நீராவி கரிசல்குளம் கிராமத்தில் நமது நாயக்கர் சமுதாய சொந்தங்களின் நாளேர் பொன்னுழவு விடும் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் அக்கிராமத்தைச் சேர்ந்த மக்கள் திரளாக கலந்துகொண்டு பூஜை, சடங்குகள் நடத்தி, அடுத்த போகத்திற்காக நிலத்தை உழுது தயார்படுத்தினர்.


நாளேர் பொன்னுழவு பற்றி விரிவான தகவல்களை "கப்பிகுளம் ஜெ.பிரபாகர்" அவர்கள் மின்னம்பலம் இணைய இதழில் பதிவு செய்துள்ள விவரம்...

தமிழர்களின் பண்பாடும், பண்டிகையும் மக்களின் வாழ்வியலோடு தொடர்புடையதாகவே இருக்கின்றன. நாளேர், நல்லேர், சித்திர மேழி என்றழைக்கப்படும் பொன்னேர் நிகழ்வும் வேளாண் மக்களின் வாழ்வியலோடு ஒன்றிப்போனதாகவே உள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி, இந்தியாவில் ஆந்திரம் உள்ளிட்ட வேறு சில மாநிலங்களிலும், பொன்னேர் விழா நடக்கிறது. இலங்கை, பர்மா, தாய்லாந்து, கம்போடியா, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மன்னர்களும் மக்களும் பொன்னேர் உழுதலை (Royal Ploughing Ceremony) கொண்டாட்டமாகவே நடத்துகின்றனர். 

மழைக்கால திருநாட்கள் பண்டையத் தமிழர்கள் அறுபது நாழிகை, ஆறு சிறு பொழுதுகள், ஆறு பருவங்கள் என காலத்தை வகுத்தனர். தை, மாசி – இளவேனில், பங்குனி, சித்திரை – முதுவேனில், வைகாசி, ஆனி – கார், ஆடி, ஆவணி – கூதிர், புரட்டாசி, ஐப்பசி – முன்பனி, கார்த்திகை, மார்கழி – பின்பனி என்று காலங்களுக்கு ஏற்பவே வேளாண்மை செய்தனர். வைகாசி, ஆனியில் தென்மேற்குப் பருவமழை அடைமழையாகப் பெய்யும், ஐப்பசியில் வடகிழக்குப் பருவமழை, சித்திரையில் இடி, மின்னலுடன் கோடை மழை பெய்யும். வெயில் அதிக உச்சத்தை அடைந்து முதுவேனில் தொடங்கும். அறுவடைத் திருநாளை தைத் திங்களில் நடத்தி விட்டு, இயற்கைக்கும் கால்நடைகளுக்கும் நன்றி பாராட்டி, மாசி, பங்குனியில் இளவேனிற்கால வசந்தத்தை வரவேற்று, பங்குனி முழு நிலவில் குல தெய்வங்களை வழிபட்டு, சித்திரைத் திங்களில் கடற்கரை, ஆற்றங்கரை மணலில் முழு நிலவு விழாக்களைக் கொண்டாடி மகிழ்ந்தனர். மாமல்லபுரத்திலும், பூம்புகாரிலும் சித்ரா பெளர்ணமி நாளில் இந்திர விழாக்கள் நடைபெற்றுள்ளன. அறுவடை முடிந்து களஞ்சியங்கள் நிறைந்திருக்கும் சித்திரை மாதம் வேளாண் மக்களின் கொண்டாட்ட மாதமாகும். இப்போதும் சித்திரை, வைகாசி மாதங்களில்தான் கோவில் கொடை விழாக்கள் நடக்கின்றன.

இலக்கியங்களில் சித்திரை திருநாள்

உழவர்களும், உழத்திகளும் வேளாண்மை செய்ததை எடுத்துக்காட்டும் விதமாக “ஏர்மங்கலம் பாடி நாளேர் பூட்டி உழவைத் தொடங்கினார்கள்” என்கிறது முக்கூடற்பள்ளு (பாடல். 115).

கொழுங்கொடி யறுகையுங் குவளையுங் கலந்து

விளங்குகதிர்த் தொடுத்த விரியல் சூட்டிப்

பாருடைப் பனர்போற் பழிச்சினர் கைதொழ

ஏரொடு நின்றோர் ஏர்மங் கலமும்

என்று சிலப்பதிகாரத்தின் நாடுகாண் காதை பகுதி நாளேர் பற்றி குறிப்பிடுகிறது.

களமர்கள் பொன்னேர் பூட்டித் தாயர்வாய்க் கனிந்த பாடற்

குளமகிழ் சிறாரி னேறு மொருத்தலு முவகை தூங்க

வளமலி மருதம் பாடி மனவலி கடந்தோர் வென்ற

அளமரு பொறிபோ லேவ லாற்றவாள் வினையின் மூண்டார்.

என்கிறது திருவிளையாடற்புராணம்.

ஈரச் செவ்வி உதவின ஆயினும்

பல்எருத் துள்ளும் நல்எருது நோக்கி

வீறுவீறு ஆயும் உழவன் போல

என புறநானூறு பாடலும் நாளேர் பூட்டுதலை உவமையாக கூறுகின்றது. சங்க காலத்துக்கு முன்பே வேளாண் மக்கள் கோடை உழவு செய்துள்ளதாக ஆய்வாளர்கள் எடுத்துக்காட்டுகின்றனர். பொ.ஆ.பி.13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சித்திரமேழி கல்வெட்டு திருப்பத்தூர் அருகே கல்நார்சம்பட்டி கிராமத்தில் கிடைத்தது. அப்பகுதி மக்கள் இப்போதும் ஆடி மாதத்தில் நாளேர் பூட்டும் நிகழ்வை நடத்தி வருகிறார்கள்.

கிராமங்களில் நாளேர் பூட்டுதல்

மண்ணெல்லாம் பொன்னாகும், பொன்னு விளையுற பூமி என்பது போல வேளாண்மை செய்யும் நிலத்தில், விவசாயிகள் முதன்முதலாக உழவு செய்வதையும் பொன்னேர் பூட்டல் என்றே சிறப்புடன் கொண்டாடுகிறார்கள். பருவமழையை நம்பி மானாவரி விவசாயம் செய்கின்ற, தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் சித்திரை அமாவாசை முடிந்தவுடன் வளர்பிறையில் அல்லது சித்திரை முதல் வாரத்தில் உழவர்கள் கூடி ஒரே நிலத்தில் கோடை உழவு செய்கின்றனர்.

அதிகாலையில் வீடு கழுவி, வேளாண் புழங்கு பொருட்களை சுத்தம் செய்து, மாடுகளைக் குளிப்பாட்டி, கலப்பையுடன் ஊர்க்குடும்பர் நிலத்தில் ஒன்று கூடுவார்கள். ஏர் ஓட்டுவதற்குப் பழகாத புதிய காளைகளும், ஏர் ஓட்டிப் பழகாத இளந்தாரிகளும் அங்கே இருப்பார்கள். வேடிக்கை பார்க்க வருபவர்களும், சாட்டைக்கம்பு எனும் தார்க்குச்சிகளைப் புதிதாகச் செய்து கொண்டு வருவார்கள். கலப்பை, மேழி, கொழு, கயிறு, தார்க்குச்சி மட்டுமின்றி மாடுகளுக்கும் மஞ்சள், சந்தனம் பூசி, பூச்சூடி, மாலை அணிவிப்பார்கள். நிலத்தின் வடகிழக்குப் பகுதியில், நாழி நிறைய நெல் வைத்து, தேங்காய், பழம், சந்தனத்துடன் சூரியனை நோக்கி வேண்டுவார்கள்.

நாளேர் பூட்டும் பண்டிகை

நிலக்கிழார்கள் என்றழைக்கப்படும் பெரிய விவசாயிகளும், மாடு, வண்டி, சிறிதளவு நிலம் வைத்துள்ள நடுத்தர விவசாயிகளும், சிறு விவசாயிகளும் ஒட்டுமொத்தமாக ஏர் பூட்டி அணிவகுத்து நிற்பார்கள். ஊர் நாட்டாண்மை, நீர் பாய்ச்சி முன்னிலையில் ஊர்க்குடும்பரின் நிலத்தில் சம்சாரிகள் உழவு செய்வார்கள். பெண்கள் பனை ஓலைப் பெட்டியில் இருக்கும் நெல், கம்பு, சோளம், வரகு, கேழ்வரகு தானியங்களை விதைப்பார்கள். புதிதாக உழவு பழகும் காளைகளையும் ஏரில் பூட்டி உழவுக்குப் பழக்குவார்கள். இதை உழவு மாடு வசக்குதல் என்பர். ஏர் ஓட்டிப் பழக நினைக்கும் இளைஞர்களும் ஏர்க்கலப்பையை பிடித்து உழவு செய்வார்கள்.

பின்னர், கூடியிருக்கும் அனைவருக்கும் தேங்காய், பழம் மட்டுமின்றி பானக்கரையம் என்றழைக்கப்படும் புளிக்கரைசல், பனங்கருப்பட்டி சேர்த்த பானகம் வழங்குவார்கள். படையலில் வைத்த கப்பியரிசியை அதாவது முனை தீட்டாத பச்சரிசியை ஊறவைத்து பனை வெல்லம், பொட்டுக்கடலை சேர்த்து அனைவருக்கும் வழங்குவார்கள். வேளாண் கிராமங்களில் அன்று தோசை, இட்லி காலை உணவாக இருக்கும். காய்கறி குழம்பு, ஆடு, கோழி கறிசோறுடன் மதிய விருந்து நடக்கும்.

புஞ்சையை நோக்கி அணிவகுத்துச் செல்லும் மாடுகளை, பொன்னேர் பூட்டி முடித்தவுடன் அவிழ்த்து விட்டு விடுவார்கள். வீடுகள் நோக்கி மாடுகள் ஓடி வரும். இளைஞர்கள் வீடு திரும்பும்போது முறைப்பெண்கள் மஞ்சள் நீர் தெளிக்கும் நிகழ்வும் சில கிராமங்களில் நடப்பதுண்டு. நாளேர் உழவு முடிந்ததும், அவரவர் விவசாய நிலங்களில் கோடை உழவு செய்வார்கள்.

பொன்னேர் பூட்டும் இன்றைய கிராமங்கள்

”ஏர் முனைக்கு நேர் இங்கு எதுவுமே இல்லே..”, ”மணப்பாறை மாடு பூட்டி மாயவரம் ஏரு பூட்டி..”, ”பொட்டலுல கெணறு வெட்டி பொலிகாள ரெண்டும் பூட்டி..” போன்ற பழைமையான பாடல்கள் எப்போதாவது ஒலித்துக் கொண்டிருக்கின்றன. இப்போது மாடுகளும் இல்லை, ஏர் கலப்பைகளும் இல்லை. ஒருசில கிராமங்களில் ஒன்றிரண்டு ஜோடி மாடுகள்தான் உள்ளன.

ஆனாலும், டிராக்டர்கள் அணிவகுத்து நிற்கின்றன. டயர்களுக்கும், இயந்திரக் கலப்பைக்கும் மஞ்சள், குங்குமம் வைக்கப்படுகிறது. மாலை சூடிய டிராக்டர்கள் ஊர் குடும்பர், நீர் பாய்ச்சி நிலத்திலோ, கோவில் நிலத்திலோ, கிராமத்தின் பொது நிலத்திலோ புழுதியை உழவு செய்கின்றன. அதற்கும் நாளேர் பூட்டுதல் என்றுதான் பெயர். 

புஞ்சை நிலத்தில் மட்டுமின்றி நஞ்சை நிலத்திலும் நாளேர் பூட்டுதல் நடக்கின்றன. கோயம்புத்தூர் பேரூர் பகுதியில் ஊர், நாடு, பட்டி, பதி, பாளையம், வட்டகை பதினெட்டு குடும்புகளின் பிரதிநிதியாக நான்கு வம்சங்களைச் சேர்ந்த பேரூர் நாட்டுப் பட்டக்காரர்கள், ஊர் பண்ணாடிகள் முன்னிலையில் வயலில் இறங்கி பொன்னேர் பூட்டுகின்றனர். ஆனி மாதம் தங்கக் கலப்பையால் ஏர் பூட்டும் இந்நிகழ்வை சித்திரமேழி என்றழைக்கின்றனர்.

காவிரி, பாலாறு பாயும் ஆற்றங்கரையோரங்களில் ஆடிப்பெருக்கு நாளில் பொன்னேர் பூட்டும் நிகழ்வு நடக்கிறது. கோடை உழவு செய்தால் செல்வம் பெருகும், பொன் விளையும், சித்திரை மாத உழவு பத்தரை மாத்துத் தங்கம் என்கிறார்கள். நாளேர் பூட்டினால்தான் விளைச்சல், அறுவடை நன்றாக இருக்கும் என்பது மருதநில மக்களின் நம்பிக்கை. கோடை உழவு செய்வதால், இறுகலான மண் பொல பொலப்பாகிவிடும். காற்றோட்டம் கிடைப்பதால் மண்ணில் நன்மை பயக்கும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. ஊட்டச்சத்துகள் எளிதாக கிடைக்கிறது. உழவுசால்கள் மழைநீரின் ஈரப்பதத்தை தக்க வைக்கின்றன. மண்ணரிப்பு தடுக்கப்பட்டு, வளம் பாதுகாக்கப்படும். புழு, பூச்சிகள், களைசெடிகள் அழியும் என்று நாளேர் விழாவிற்கு பின்னால் இருக்கும் அறிவியலை வேளாண் நிபுணர்கள் எடுத்துரைக்கின்றனர்.

வெறும் சடங்குகளால் பலனேதுமில்லை என்பதால்தான், பண்டைய தமிழர்களின் பண்பாடும் பண்டிகையும் மக்களின் வாழ்வியலோடு கலந்ததாகவே உள்ளன.

நன்றி:மின்னம்பலம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved