🔴 LIVE | முப்பெரும் விழா 2023


வாய்ப்பற்ற சமூகங்களுக்கு வாரியத்தலைவர் பதவி வழங்குக!

தளபதி.முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் 2021-இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிப்பொறுப்பேற்று கடந்த 07-ஆம் தேதியோடு ஓராண்டு நிறைவுபெறுகிறது. இதனையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ள சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சமூக நீதியை தமிழகத்தில் முழுமைபடுத்த சட்டமன்ற, நாடாளுமன்ற அவைகளில் இடம்பெறாத தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட சமூகங்களுக்கு வாரியத் தலைவர் பதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளது. இது குறித்து முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தின் முழுவிபரம் பின்வருமாறு.

கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை முழு வீரியத்தோடு தாக்கிக்கொண்டிருந்த வேளையில், தமிழக மக்களை மீட்கவந்த மீட்பராக முதல்வர் பொறுப்பேற்றுக்கொண்டு, தமிழகத்தின் நாற்றிசையிலும் பயணித்து, பம்பரமாய் சுழன்று பணியாற்றி, இரண்டே மாதங்களில் கொரோனா பெருந்தொற்றிலிருந்து தமிழகத்தை மீட்டெடுத்து இயல்புநிலைக்குக் கொண்டுவந்து நிறுத்தியதை ஓராண்டு நிறைவுறும் வேளையில் எண்ணிப்பார்க்கிறோம். வெள்ளை அறிக்கை மூலம் கஜானா காலியாக உள்ளதை படம் பிடித்துக்காட்டினாலும், துவண்டு போயிருந்த மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில், குடும்பங்களுக்கு தாலா நான்காயிரம் வழங்கியது, "இது நம் அரசு - நமக்கான அரசு" என்று மக்கள் நம்பும் வகையில் தங்கள் தலைமையிலான அரசு செயல்பட்டிருப்பதிற்கு தமிழகத்தில் வாழும் 40 லட்சம் கம்பளத்தார்களின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

பகுத்தறிவு, சுயமரியாதை, சமூகநீதி, பெண்விடுதலை என்ற நான்கு சக்கரங்களில் பூட்டிய தேராக எனது ஆட்சித் தேர் பவனி வருமென்று வாக்குறுதி அளித்தது தமிழகத்தில் வாழும் நூற்றுக்கும் மேற்பட்ட விளிம்புநிலை சமூகங்களுக்கு நம்பிக்கை அளித்தது. சொல் அல்ல செயல் என்பதை உறுதி செய்யும் வகையில் "சமூகநீதி கண்காணிப்புக் குழு" அமைத்து உத்தரவிட்டது தங்கள் ஆட்சித்தேர் பயணிக்கும் பாதையை தெளிவு படுத்தியது.

சமூகநீதியின் பெயரால் அமைந்துள்ள தங்கள் தலைமையிலான அரசு தமிழக அரசியலில் சமூகநீதி தேக்கமடைந்துள்ளதை நிவர்த்தி செய்திட வேண்டும் என்பதை ஓராண்டை நிறைவு செய்து இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் வேளையில் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். தமிழக அரசியலில் நான்கைந்து பெரும்பான்மை சாதிகளே கடந்த 75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் ஆண்டு அனுபவித்துக்கொண்டு வருகின்றனர். வாக்கு வங்கி அரசியலில் எண்ணிக்கை பெரும்பான்மை அந்த வாய்ப்புகளை அவர்களுக்கு வழங்கினாலும், இது அரோக்கியமான ஜனநாயகத்திற்கும், சமத்துவதற்கும், சமூகநீதிக்கும் எதிரானது என்பதை சமூகநீதியின்பால் அக்கறைகொண்டவர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.

இராஜகம்பளத்து தொட்டிய நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த எங்கள் மக்கள் கிருஷ்ணகிரியில் தொடங்கி இராமநாதபுரம் வரை இருபதிற்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றோம். எங்கள் சமுதாய மக்கள் வசிக்கும் கிராமம் தோறும் கிளைக்கழக செயலாளர் பதவிகளில், ஒன்றியச்செயலாளர் பதவிகளில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளாட்சி பதவிகளில் இருந்தபோதிலும் சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் வாய்ப்பு வழங்கப்படுவது இல்லை. இதுபோல் கட்சியிலும், நிர்வாகத்திலும் வாய்ப்பு மறுக்க நூற்றுக்கணக்கான சாதிகள் தமிழகத்தில் உண்டு.

"திராவிட மாடல் ஆட்சி" அகில இந்திய கவனத்தைப்பெற்றுவரும் இவ்வேளையில், அரசியல் பதவிகளை வழங்குவதில் சமூகநீதி நிலைநாட்டப்படுவதில்லை என்பது வேதனையான விசயம். எனவே வரும் காலங்களில்  தமிழக அரசு வழங்கும் நியமன பதவிகளிலும், வாரியம், கூட்டுறவுத்துறை போன்றவற்றில் தங்கள் கட்சியில் காலம் காலமாக பணியாற்றிவரும் தொட்டிய நாயக்கர் சமுதாயம் போன்று எண்ணிக்கை சிறுபான்மை சமுதாயங்களைச் சேர்ந்தவர்களுக்கு உரிய வாய்ப்பினை வழங்கிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved