🔴 LIVE | முப்பெரும் விழா 2023


தமிழக அரசே! தமிழக அரசே! தாயைப் பார்க்க தடை செய்யலாமா?

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ் இ.ஆ.ப அவர்கள் நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில், பாஞ்சாலங்குறிச்சியில் நாளைமறுநாள் (13-ஆம் தேதி) தொடங்கி இரண் டுநாட்கள் (14-ஆம் தேதி வரை) நடைபெறவுள்ள வீரசக்கதேவி ஆலய திருவிழாவினை முன்னிட்டு, அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியாக நடைபெறும் பொருட்டும், சட்டம் மற்றும் ஒழுங்கினை பராமரித்திடவும், 12.05.2022 மாலை 6.00 மணி முதல் 15.05.2022 காலை 6.00 மணி வரை தூத்துக்குடி மாவட்டம் முழுமைக்கும் குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 144-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய விடுதலைக்கு முதல் முழக்கமிட்ட ஒப்பற்ற மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் குலதெய்வமாகவும், வெள்ளையர்களுக்கு எதிரான போரில் பல ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்த வீரபூர்வகுடி மக்களின் தெய்வமாகவும் போற்றி வணங்கப்பட்டு வரும் வீரசக்கதேவி கோவில் திருவிழாவை, சட்டம் ஒழுங்கு காரணம் காட்டி மாவட்ட நிர்வாகம் தடை உத்தரவு பிறப்பித்திருப்பது பேரதிர்ச்சியாக உள்ளது.

தமிழகம் முழுவதுமுள்ள 40 லட்சத்திற்கும் அதிகமான மக்களின் வாழ்க்கையோடும், உணர்வுகளோடும் ஒன்றிப்போயுள்ள இக்கோயிலில், ஆண்டுக்கொருமுறை நடைபெறும் சித்திரைத் திருவிழாவில் கலந்துகொள்வது என்பது பூர்வகுடி கம்பளத்தார்களின் தவம். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, குடும்பம் குடும்பமாக, உற்றார் உறவினர்களோடு, வண்டி வாகனங்களில் வந்து பாஞ்சை திருக்கோவிலில் வழிபாடு செய்து திரும்புவது  தொன்றுதொட்டு பாரம்பரியமாக நடைபெற்று வருவது. எனவே இத்திருவிழாவில் ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கும், வாடகை வாகனங்களில் வருவதற்கும், மாவட்ட நிர்வாகம் தடை விதிப்பது, அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கலாச்சார, பண்பாட்டு உரிமையை தகர்ப்பதாக உள்ளது. 

கொரோனா பெருந்தொற்றிற்குப்பிறகு, மதுரையில் கடந்த வாரம் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் திரண்டிருந்து வழிபட்ட கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவைத்தை, எவ்வித அசம்பாவிதமும், சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படாமல் சிறப்பாக கையாண்ட மாநில அரசும், காவல்துறையும், பாஞ்சாலங்குறிச்சி சித்திரைத்திருவிழாவிற்கு வருவோரை அச்சுறுத்தும் வகையில் தடை உத்தரவு பிறப்பித்திருப்பது ஆச்சரியத்தை அளிப்பதாக உள்ளது.

அனைத்து சமூக மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கக்கூடிய தமிழக முதல்வர், லட்சக்கணக்கான இராஜ கம்பள - தொட்டிய நாயக்கர் சமுதாய மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய திருவிழாவிற்கு மாவட்ட நிர்வாகம் பிறப்பித்துள்ள 144 தடை உத்தரவை விலக்கிக்கொள்ள அறிவுறுத்த வேண்டுமாய் ஒட்டுமொத்த கம்பளத்தாரின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved