🔴 LIVE | முப்பெரும் விழா 2023


காலங்கள் மாறினாலும் கம்பளத்தாரின் அன்பு மாறாதது! வரவேற்பில் நெகிழ்ந்த துரைவைகோ!

கடந்த மே 13 மற்றும் 14 தேதிகளில் நடைபெற்ற பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயத்தின் 66-ஆம் ஆண்டு சித்திரைத் தேர்திருவிழா மிகுந்த எழுச்சியோடு நடைபெற்று முடிந்தது. இந்த விழாவில் பங்கேற்கக்கோரி ஆலயக்குழுவினரும்,  கம்பளத்தார் சமுதாயத்தைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் இயக்கங்களைச் சேர்ந்தவர்களும், பெரும்பான்மையான அரசியல் கட்சித் தலைவர்களையும், இந்நாள், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்திருந்தனர்.

பாஞ்சாலங்குறிச்சி சென்றுவந்தால் பதவிக்கு ஆபத்து சேரும் என்று அங்குள்ள ஒருசில சாதியைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகளால் பல்லாண்டுகளாக ஒரு பொய்யை கட்டமைத்து அரசியல் வட்டாரங்களில் பரப்பியுள்ளதால், வெற்றிலை பாக்கு வைத்து அழைத்தாலும் முற்போக்கு பேசும் அரசியல் கட்சியினர்கூட வருவதில்லை. (கட்டபொம்மனின் மீது அளவுகடந்த அன்புகொண்டுள்ள துணைஜனாதிபதி ஆகும் முன் பாஞ்சை வந்திருந்து அன்னையின் அருள்பெற்றுச் சென்றது நிகழ்கால வரலாறு) இருந்தாலும் தலைவர்களை எப்படியாவது அழைத்துவந்துவிட வேண்டும் என்ற முனைப்பில் சிலர் வழக்கமாக ஆண்டுதோறும் நேரில் அழைப்பிதழ் வழங்குவது வாடிக்கை.


இந்த மூடநம்பிக்கையை பொருட்படுத்தாமல், உண்மையான பகுத்தறிவுவாதியாக இருப்பவர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள். தனக்கு இறைநம்பிக்கை இல்லையென்றாலும், வரலாற்று நாயகர்களை கவுரவப்படுத்துவதில் சாதி, மத பேதம் கடந்து ஆண்டுதோறும் கட்டபொம்மன் நினைவுநாளில் கயத்தாறிலும், அரசியலில் நிர்க்கதியாய் நிற்கும் கம்பளத்தார் மீதான பாசத்தால் பாஞ்சை சித்திரைத்தேர் திருவிழாவிலும் தவறாமல் பங்கேற்று வருபவர் வைகோ. மாவீரன் பூலித்தேவனுக்கு முதன்முதலாக சிலை அமைத்தவரும் அவரே. சில ஆண்டு முன்புவரை விழாவின் இறுதிநாளன்று தன் சொந்த செலவில் மேடை அமைத்து கட்டபொம்மனாரின் புகழை விண்ணதிர ஓங்கி ஒலித்தவரும் அவரே. 

இதுமட்டுமல்ல அதிமுக, திமுக போன்ற இயக்கங்களில் தலைமுறை தலைமுறையாக இருக்கும் கம்பளத்தார்களுக்கு வாய்ப்பு கிடைக்காதபொழுது க.சுப்பு, சுந்தரராஜன் ஆகியோருக்குப்பிறகு கம்பளத்தார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பையும், சட்டமன்ற உறுப்பினர் ஆக்கியவரும் வைகோ அவர்கள். அதேபோல் வாஜ்பாய் பிரதமராக இருந்த்பொழுது கட்டபொம்மனுக்கு தபால்தலை வெளியிடச் செய்தவரும், கொலை பழி சுமத்தப்பட்ட குருசாமி நாயக்கரை, துக்கிலிட மேடைக்கு அழைத்துச்செல்லப்பட இருந்த கடைசி ஒருசில மணித்துளிகள் இருக்கும் நிலையில் காப்பாற்றி கரைசேர்த்தவர் வைகோ. இப்படி கம்பளத்தாரின் வாழ்வோடு இரண்டரக்கலந்த ஒரே அரசியல் தலைவர் வைகோ. கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த சில வருடங்களாக அவர் பாஞ்சை வருவது தடைபட்டிருந்தது. 


இந்நிலையில் வழக்கம்போல் எல்லா அரசியல் தலைவர்களுக்கும் அழைப்பு விடுப்பதுபோல் துரைவைகோ அவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அழைப்பிதழை வாங்கியபொழுதே பாஞ்சை வருவதை உறுதி செய்த துரைவைகோ அவர்கள், சொல்லியதுபோல் நிறைவேற்றவும் செய்தார். மே 13 காலை கோவில்பட்டியில் இருந்து புறப்படும் தொடர் ஜோதியை துவக்கி வைத்தார் துரை வைகோ. அதேபோல் பாளையங்கோட்டையிலிருந்து புறப்பட்ட ஜோதியை துரைவைகோவின் வழிகாட்டுதலின்பேரில் மாவட்டச்செயலாளர் நிஜாம் துவக்கி வைத்தார். எப்பொழுதும் ஜோதி துவங்கியவுடன் ஒருசில நிமிடங்களில், ஜோதியோடு ஏந்திவரும் வாளை வாங்கி தங்கள் பாதுகாப்பில் வைத்துக்கொண்டு, தொண்டர்களை  வாகனங்களில் ஏற்றி அனுப்பும் காவல்துறை, இம்முறை மதிமுக வின் தலையீட்டால் சிறிது தூரம் ஜோதியை ஏந்தி ஓடுவதற்கு அனுமதி அளித்தனர். அதேபோல் கட்டபொம்மன் வம்சத்தினர் வீரத்தின் அடையாளமாகவே வாழேந்தி செல்வதாகவும், வன்முறையாளர்கள் அல்ல என்று கூறி அனுமதி பெற்றுத்தந்தனர்.


இதே உற்சாகத்தோடு துரைவைகோ மாலை படை பரிவாரங்களோடு பாஞ்சை புறப்பட்டு வந்தார். ஏதோ அழைத்தார்கள் என்று சடங்கிற்காக வந்து செல்லாமல், காரில் இறங்கி ஊர்வலமாய் நடந்து சென்று, நூற்றுக்கணக்கான இளைஞர்கள் செல்பி எடுக்க ஆசைப்பட்டபொழுது அத்தனை பேரோடும் புகைப்படம் எடுத்தும், பாசத்தோடு பேசியவர்கள், தந்தையின் மீது அன்புகொண்ட பெரியவர்கள் என அனைவரையும் நலம் விசாரித்து, குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் அனைவருக்கும் எதிர்காலம் குறித்து அறிவுரை வழங்கி தன் குடும்பவிழாவாக அன்பு பாராட்டியது காண்போரை நெகிழ்ழ்சியுற செய்தது.

அதன்பிறகு நடந்தவற்றை அவரே தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  கம்பளத்தார் தன் தந்தை மீது கொண்டிருந்த பாசத்திற்கு இணையாக தன்மீதும் பாசமழை பொழிவதை எண்ணி மகிழ்வதாக குறிப்பிட்டுள்ளார். துரைவைகோ அவர்களின் முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது,


பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து, ஆங்கில படைகளுக்கு ஒருபோதும் நாங்கள் அடிபணிந்து போக மாட்டோம் என்று தம் மக்களிடையே வீர உணர்ச்சியை தட்டி எழுப்பிய பாஞ்சை மன்னன் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் குலதெய்வ திருத்தலமான அருள்மிகு ஸ்ரீ சக்கதேவி அன்னை ஆலய திருவிழா தூத்துக்குடி மாவட்டம், பாஞ்சாலங்குறிச்சியில் நேற்று (13.05.2022) நடைபெற்றது. 

தென்மாவட்டங்களில் பல்வேறு பகுதியிலிருந்து இளைஞர்கள் தொடர் ஓட்டம் மூலம் அணையா ஜோதியை கொண்டுவந்து சிறப்பு சேர்த்துக் கொண்டு இருந்தனர்.எழுச்சி நிறைந்து, உணர்ச்சிப் பெருக்கோடு நடைபெற்ற இந்த திருவிழாவில் ஜோதியை பெற்றுக்கொள்ளும் நிகழ்வில் கலந்துகொண்டு அம்மனை தரிசிக்கும் வாய்ப்பும் நேற்று சிறப்பாக அமைந்தது.

ஆலயத்தின் 66-வது ஆண்டு திருவிழாவை முன்னிட்டு கோவில்பட்டியில் இருந்து அன்னையின் ஆலயம் வரை தொடர் ஓட்டமாக சகோதரர் அய்யாசாமி அவர்களின் ஒருங்கிணைப்பில் கோவில்பட்டி வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு அறக்கட்டளை மற்றும் மாமன்னர் திருமலை நாயக்கர் இளைஞர் பேரவையினர் சார்பில் கொண்டுவரப்பட்ட ஜோதியை பெற்றுக்கொண்டேன்.

முன்னதாக பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தூரத்திற்கு வழி நெடுகிலும் வரவேற்பு நல்கிய பொது மக்களுக்கும், இளைஞர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அம்மனை தரிசித்து விட்டு சுமார் பத்தாயிரம் பேர் கூடியிருந்த மக்கள் மத்தியில் பாஞ்சை வேந்தர் வீரபாண்டிய கட்டபொம்மனின் குன்றாத வீர உணர்ச்சியை பற்றியும், வீரம் மட்டுமே மன்னரின் அடையாளம் அல்ல சமுதாய ஒற்றுமையும் நம் மன்னரின் அடையாளம் என்பதற்கு எடுத்துக்காட்டாக தான் வீரன் சுந்தரலிங்கம், வீரன் வெள்ளையத்தேவன், தானாவதி பிள்ளை போன்றவர்களோடு இணைந்து பரங்கியர் படையை எதிர்கொண்டார் என்ற வரலாற்றை எடுத்துரைத்தேன்.


இன்றைய சூழலில் கல்வி என்பது மிகவும் முக்கியம். குறிப்பாக பெண் கல்வி மிக மிக அவசியம். எனவே அனைவரும் தன் வீட்டு பெண் பிள்ளைகளை கட்டாயம் படிக்க வைப்பதற்கு உறுதி எடுத்துக் கொள்ளுங்கள் என்றும் வேண்டுகோள் வைத்தேன்.

நமது இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்கள் சிறையில் இருந்த வருடமும் கொரானா கட்டுப்பாடுகள் கடுமையாக இருந்த வருடமும் தவிர சுமார் 50 ஆண்டுகளாக மன்னர் கட்டபொம்மனின் நினைவு இடமான கயத்தாறுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருப்பதைப் போல் நானும் அன்னை சக்கதேவி ஆலயத்திற்கு வருடம்தோறும் வருவதாக உறுதி அளித்தேன்.

மன்னரின் புகழை தமிழகம் மட்டுமல்ல, இந்த தேசம் முழுக்க பரவிக் கிடக்கின்றது. அதன் அடையாளமாகத்தான் நம்முடைய தலைவர் வைகோ அவர்கள் பாரதப் பிரதமராக இருந்த வாஜ்பாய் அவர்கள் இடத்தில் வைத்த வேண்டுகோளின்படி வீரபாண்டிய கட்டபொம்மன் அஞ்சல் தலை வெளியிடப்பட்டு மன்னர் அவர்களை தலைவரால் கவுரவிக்கப்பட்டது.

ஆதவன் இல்லாமல் விடியல் இல்லை..

சுவாசம் இல்லாமல் உயிர் இல்லை..

அலைகள் இல்லாமல் கடல் இல்லை..

உழவன் இல்லாமல் உண்ண உணவு இல்லை…

அண்ணல் மகாத்மா காந்தி அடிகள் இல்லாமல் அகிம்சை இல்லை..

மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் இல்லாமல் விடுதலை வீர உணர்ச்சி என்பது இல்லை…

வீரபாண்டிய கட்டபொம்மன் தான் வீரத்தின் அடையாளம்..!

வீரபாண்டிய கட்டபொம்மன் தான் தெற்குச் சீமையின் அடையாளம்..!

வீரபாண்டிய கட்டபொம்மன் தான் சமுதாய ஒற்றுமையின் அடையாளம்..!

அழியாத புகழை கொண்ட வீரபாண்டிய கட்டபொம்மனின் புகழ் ஓங்குக ! என்று உரையாற்றினேன்.

உடன் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் தி.மு. இராசேந்திரன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் புதுக்கோட்டை செல்வம், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ், மாவட்ட இளைஞரணி செயலாளர் விநாயகா ஜி.ரமேஷ், அரசு வழக்கறிஞர் சுப்பாராஜ், ஊராட்சி மன்ற தலைவர் கமலா யோகராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வரதராஜன், மாவட்ட துணைச் செயலாளர்கள் வீரபாண்டி செல்லச்சாமி, பவுன் மாரியப்பன், தூத்துக்குடி மாநகர் செயலாளர் முருகபூபதி, ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜகோபால், கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன், கோவில்பட்டி நகர செயலாளர் பால்ராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் என்.எஸ்.கணேசன், கோவில்பட்டி மத்திய ஒன்றிய செயலாளர் சரவணன், கோவில்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் கேசவ நாராயணன், கிழக்கு ஒன்றிய செயலாளர் மாரிச்சாமி, விளாத்திகுளம் ஒன்றிய செயலாளர் மணிராஜ், புதூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், வடக்கு ஒன்றிய செயலாளர் காளைச்சாமி, ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் இக்பால் சின்ன மாரியப்பன், குருவிகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜகோபால், மதுரை பூப்பாண்டி,தேனி சுருளி மணி, மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி துணைத் தலைவர் அனல் செல்வராஜ், மாநில விவசாய அணி துணைச் செயலாளர் சிவக்குமார்,பேரூராட்சி மன்ற உறுப்பினர் வள்ளிமுத்து, ஊராட்சி மன்ற துணை தலைவர் பாலகிருஷ்ணன், வரகனூர் காளிராஜ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பொம்முதுரை, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சரவணப்பெருமாள், வீரபாண்டிய கட்டபொம்மன் இளைஞர் அணி நிர்வாகிகள் தம்பிகள் சசிகுமார், கே சிவா அப்பு ராஜ், V.P.K. மகேஷ் வழக்கறிஞர் D. விஜய் உள்ளிட்ட சகோதரர்களும் இளைஞர்களும் கழக தோழர்கள் பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு அம்மனை தரிசித்தனர்.

அருள்மிகு ஸ்ரீ சக்கதேவி அன்னையின் ஆசி அனைவருக்கும் பரவட்டும். மாமன்னர் கட்டபொம்மனின் புகழ் ஓங்கட்டும். இவ்வாறு துரைவைகோ வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved