🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கொதிக்கும் கொங்கு மண்டலம்! பரிதவிக்கும் பெற்றோர்கள்!

பருத்தி பஞ்சு விலை தொடர்ந்து  உயர்ந்து வருவதன்  காரணமாக தென்னிந்தியாவின் மான்செஸ்டரான கோவை மற்றும் அதைச்சுற்றியுள்ள திருப்பூர், ஈரோடு,கரூர்,நாமக்கல் உள்ளிட்ட கொங்கு மண்டல மக்களின் வாழ்வாதரம் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. கொரானோ பெருந்தொற்று பொதுமுடக்கம் காரணமாக இரண்டாண்டுகள் முழுமையாக பாதிக்கப்பட்டு இருந்தது. பொதுமுடக்க தளர்வுக்குப்பின் ஒருசில மாதங்களுக்கு முந்தொடங்கப்பட்ட தொழில்கள் மீண்டும் தற்பொழுதுதான் முழு உற்பத்தியை தொடங்கியுள்ளன. இந்த சூழ்நிலையில் கடந்த ஓரிரு மாதமாக அபரிமிதமான பஞ்சு விலை ஏற்றத்தின் காராணமாக பஞ்சு மற்றும் பின்னலாடை நிறுவனங்களை தொடர்ந்து நடத்தமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக  உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

பஞ்சாலைகளுக்கு  வாங்கப்படும் 356 எடை கொண்ட ஒரு கேண்டி  பஞ்சு 86 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை  உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 43 ஆயிரம் ருபாய்க்கு விற்பனையான ஒரு கேண்டி பஞ்சு தற்போது இரண்டு மடங்கிற்குமேல் உயர்ந்து விற்பனையாவதால் ஏற்கனவே எடுத்த ஆர்டர்களுக்கு சப்ளை செய்ய முடியாமல் பஞ்சாலை உரிமையாளர்கள் கடும் நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர்.

இந்த வரலாறு காணாத விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லை எனில் நூல் விலை ஏறுவதுடன் பின்னலாடை, காடா துணி உற்பத்தி விலையும்  அதிகரிக்கும் எனவும்  பஞ்சாலை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன் எதிரொலியாக திருப்பூர், கரூர், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் பின்னலாடை நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படும். 60 லட்சத்திற்கு அதிகமான மக்கள் இத்தொழிலை நம்பி வாழ்வதால் இதில் பணியாற்றும் தொழிலாளர்களின் எதிர்காலம் கடுமையாக பாதிக்கப்படும் என்று எச்சரிக்கின்றனர். 

பருத்தியின் இந்த அசாதாரணமான விலை உயர்வு கடந்த 10 ஆண்டுகளில் சந்திக்காதது  எனவும், இந்த விலையேற்றத்துக்கு  பெருநிறுவனங்களின் பதுக்கலும், யூக வணிகமும் காரணமாக இருக்கலாம் என்ற குற்றச்சாட்டு நிலவிவருகிறது.

கோடை விடுமுறைக்குப்பிறகு ஒருசில வாரங்களில் பள்ளிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில் ஜவுளித்துறையில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியால், குழந்தைகளுக்கு பள்ளி, கல்லூரிக்கட்டணம் செலுத்துவதற்கு பெற்றோர்கள் கடும் சிரமத்திற்குள்ளாவர். நூல் விலை உயர்வு காரணமாக பள்ளிச்சீருடைகளின் விலை 30 முதல் 50 விழுக்காடு வரை உயர்ந்துள்ளதாக பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே பஞ்சு விலையேற்றத்திற்கு காரணம் எதுவாக இருந்தாலும் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு தீர்வு காணவேண்டியது அவசியம். ஏற்கனவே பணவீக்கம் 7 % க்கும் மேல் உயர்ந்துள்ள நிலையில் பள்ளிகள் திறக்கும்பொழுது இன்னும் உயர வாய்ப்பிருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். விலைவாசி உயர்வால் வாட்டி வதங்கும் மக்களை காப்பாற்ற அரசு உடனடியாக நூல்விலை குறைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved