🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சாதி பலத்தை நிரூபிக்க களமிறங்கும் அமைப்புகள்.

வன்னியர் இடஒதுக்கீடு விவகாரத்தால் வன்னியர் அல்லாத பிறசாதிகளிடம் ஏற்பட்டு வரும் எழுச்சி தமிழக அரசியலில் புதிய பாதை அமைக்குமா என்ற கேள்வி அரசியல் நோக்கர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

2019-நாடாளுமன்ற தேர்தலில் அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த தொகுதியான எடப்பாடியிலும், சொந்த வாக்குச்சாவடியிலும் அதிமுக கூட்டணி வேட்பாளர் எதிர்கட்சியான திமுக வேட்பாளரை விட மிகக்குறைவான வாக்குகளையே பெற்றார். இது அரசியல் வட்டாரங்களில் கடுமையான அதிர்வுகளை ஏற்படுத்தியது. வன்னியர் சமூகம் பெரும்பான்மையுள்ள எடப்பாடி தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தனது வெற்றியை உறுதி செய்யவும், நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் லட்சக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவியதாலும்,  சசிகலா வெளியேற்றத்தால் தென்மாவட்டங்களில் ஏற்படும் சரிவை சரிக்கட்டவும் வலிமையான கூட்டணியை கட்டமைக்கவும், வடக்கு மற்றும் மேற்கு மண்டலத்தில் மிக அதிக தொகுதிகளையும் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்த அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் அறிவிப்பிற்கு ஒரு சில மணித்துளிகளுக்கு முன் வன்னியர் சாதிக்கு 10.5% இடஒதுக்கீடு வழங்கும் 8/2021 சட்டத்தை அவசர அவசரமாக நிறைவேற்றினார். எடப்பாடியின் இந்த தேர்தல் வியூகம் கொங்கு வேளாபக்கவுண்டர், வன்னியர் சமூகங்கள் இணைந்து பெரும்பான்மையுள்ள மேற்கு மண்டலத்தில் அதிமுக விற்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத்தந்த போதிலும், வன்னியர் சமுதாயம் இல்லாத தென்மண்டலத்திலும், வன்னியர் தனித்து அதிகமுள்ள வடமணடலத்திலும் மிகப்பெரிய தோல்வியில் முடிந்தது. இதனால் அதிமுக மீண்டும் ஆட்சியமைக்கும் வாய்ப்பை இழந்தது. 


சாதிவாரி கணக்கெடுப்பு புள்ளிவிபரம் எதுவுமில்லாமல்,  வன்னியர் சாதிக்கு உள் இடஒதுக்கீடு வழங்க ஆரம்பம் முதலே தனித்தனியாக எதிர்ப்பு தெரிவித்து வந்த MBC பட்டியலிலுள்ள பிற 115 சாதியினர், வன்னியர் 10.5% இடஒதுக்கீடு வந்தவுடன் கடுமையாக எதிர்த்து போராடின. நாட்கள் செல்லச்செல்ல இந்த எதிர்ப்பு மங்கும் என்று அரசியல் கட்சிகள் எண்ணிக்கொண்டிருக்கும் வேளையில் வன்னியர் தனி இடஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்ட 115 சமூகங்களுக்கிடையேயான நெருக்கம் அதிகரித்து வருகிறது. 

ஏற்கனவே இந்த 115 சமூகங்களும் பிற்படுத்தப்பட்ட பிரிவிலுள்ள 241 சமூகங்களும் இணைந்து சமூகநீதி கூட்டமைப்பு என்ற அமைப்பைத் துவங்கி வன்னியர் இடஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளன.  வலிமையான தமிழக அரசையும், பாமக வையும் உயர்நீதி மன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும்  வெற்றி பெற்றிருப்பது சமூகநீதி கூட்டமைப்பிற்கு மிகப்பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது. 


உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்போடு சமூகநீதி கூட்டமைப்பிற்கு வேலை இருக்காது, மீண்டும் தனித்தனி சாதி அமைப்புகளாக பிரிந்து போய்விடும் என்று அரசியல் கட்சிகள் எண்ணியிருந்த நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியானவுடன் மருத்துவர் இராமதாஸ் இது தற்காலிக பின்னடைவு, நீதிமன்றம் ஏற்கும் வகையில் புள்ளிவிபரங்களை ஓரிரு வாரங்களில் தமிழக அரசு வழங்கினால் வன்னியர் தனி இடஒதுக்கீடு பெறுவதை எந்தக்கொம்பனாலும் தடுக்கமுடியாது என்று அறிக்கை வெளியிட்டிருந்தார். அதேபோல் தீர்ப்பு வெளியான அன்றே மூத்த அமைச்சர் துரைமுருகன் சட்ட ஆலோசகர்களுடன் விவாதித்து அரசு நல்ல முடிவெடுக்கும் என்று அறிவித்தார். இதேபோல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் வன்னியருக்கு தனி இடஒதுக்கீடு வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று அறிவித்தார். இதனையடுத்து அரசு அதிகாரிகள், சட்டநிபுணர்கள், மூத்த அமைச்சர்களோடு வன்னியர் இடஒதுக்கீடு குறித்து ஆலோசனை நடத்தினார். 

எனவே எந்நேரத்திலும் மீண்டும் ஒரு அவசர சட்டத்தின் மூலம் வன்னியருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படலாம் என்ற அச்சம் வன்னியர் அல்லாத 115  சமூகங்களிடையே நிலவிவருகிறது. எனவே தங்கள் உருவாக்கிய சமூகநீதி கூட்டமைப்பை தொடர்ந்து நடத்த தீர்மனித்த இச்சமூகங்கள், உச்சநீதிமன்ற தீர்ப்பிற்குப்பிறகு மாவட்ட ஆட்சியர், அமைச்சர் பெருமக்கள், அரசியல் கட்சித்தலைவர்களை சந்தித்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய பிறகே இடஒதுக்கீட்டில் மாற்றம் கொண்டுவரவேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும் இக்கோரிக்கையை வலியுறுத்தி பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மானியக்கோராக்கை நாளான ஏப்ரல் 22-ஆம் தேதி சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்தனர். 

சட்டசபை முற்றுகைப் போராட்டத்தை தலைமையேற்று நடத்திய தொட்டியநாயக்கர் சமுதாயத்தின் விடுதலைக்களம் கட்சியின் நிறுவன தலைவர் கொ.நாகராஜன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் சென்னை நகரின் நுழைவுவாயிலில் கைது செய்யப்பட்டனர். இதுபோல் பல சமூகங்களைச் சேர்ந்த  ஐநூறுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதனைத்தொடர்ந்து சாதிவாரிகணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி ஏப்ரல் 30-இல் விவசாயப்போராளி அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் சாலைமறியலில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 

இதனைத்தொடர்ந்து  261 சாதிகள் இணைந்து சமூக நீதி கூட்டமைப்பு சார்பில் ஆகஸ்டு 7 ஞாயிறன்று மதுரையில் மாபெரும் சமூகநீதி மாநாட்டை நடத்த தீர்மானித்துள்ளன.

இதற்காக ஒவ்வொரு சாதியும் தங்கள் சாதிகளின் பலத்தைக்காட்ட போட்டிபோட்டு ஏற்பாடுகளை செய்து வருகின்றன. இதன் ஒருபகுதியாக கடந்த 23.05.2022 திங்களன்று ஊராளிக்கவுண்டர் சமுதாயத்தின் சார்பில் சமூகநீதி மாநாடு விளக்கப்பொதுக்கூட்டம் பெரம்பலூரில் நடைபெற்றது. மாநாடு போல் திரண்டிருந்த ஊராளிக்கவுண்டர் சமுதாயக்கூட்டத்தில் பேசுவதற்காக பல சமுதாயங்களுக்கு அழைப்பு விடப்பட்டிருந்தது. தொட்டியநாயக்கர் சமுதாயத்தின் சார்பில் நாமக்கல் தொட்டிய நாயக்கர் சமுதாய அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி, மூத்த வழக்கறிஞர் நாமக்கல் பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர். 

பெரம்பலூரில்  ஒரே ஒரு சமுதாயத்தின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் திரண்ட மக்களைப்பார்த்து வியந்துபோயுள்ள அரசியல் நோக்கர்கள் 261 சமுதாயங்களும் இதுபோல் வலிமையைக் காட்டினால் தமிழக அரசியல் போக்கையே மாற்றும் என்று கணிக்கின்றனர். அவர்கள் எதிர்பார்ப்பதுபோல் பல்வேறு சமூகங்கள் தங்கள் மக்களிடையே நேரடியாக களமிறங்கி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved