🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சமூகமாய் திரள்வோம்! பொள்ளாச்சியில் இளைஞர்கள் உறுதி!

ஆகஸ்டு 07-இல் மதுரையில் நடைபெறும் சமூகநீதி மாநாடு குறித்த விளக்கப் பிரச்சாரத்தை வன்னியர் இடஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்ட சமூகங்கள், அவரவர் சமூகங்கள் மத்தியில் நடத்தி வருகின்றன. தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் விளக்கக் கூட்டத்தின் ஒருபகுதியாக தொட்டிய நாயக்கர் சமூகத்தின் சார்பில் நாமக்கல் அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி,  சமூகநீதி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பெ. இராமராஜ், விடுதலைக்களம் கட்சியின் நிறுவன தலைவர் கே.நாகராஜன் ஆகியோர் ஆங்காங்கே கலந்து கொண்டு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து கொண்டு வருகின்றனர். 


இதன்தொடர்ச்சியாக நேற்று (29.05.2022) மாலை பொள்ளாச்சி குள்ளக்கா பாளையம் கிராமத்தில் இளைஞர்களோடு கலந்துரையாடல் கூட்டமாக நடைபெற்றது. கே.டி.மோகன்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் கட்சிப்பாகுபாடுகளை மறந்து திமுக, அதிமுக, பாஜக, மதிமுக கட்சிகளைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். 

இக்கூட்டத்தில் சமூகநீதி கூட்டமைப்பின் இன்றைய தேவையும், நோக்கமும், வன்னியர் 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு பிரச்சினை,  சமூகநீதி கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள பிற சாதிகளோடு இணக்கமாக பணியாற்றி கம்பளத்தாரின் அரசியல் வாய்ப்புகளை பரவலாக்குதல், பொருளாதார உள் கட்டமைப்பை சமூகமாக ஒன்றிணைந்து உருவாக்குதல், ஆகஸ்டு 07-இல் நடைபெறும் மாநாட்டின் அவசியம் போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் செந்தில்குமார் இராமராஜ் கூடியிருந்த இளைஞர்களிடையே விளக்கினார். மேலும் சமுதாயத்திற்காக அரசியல் கட்சி பாகுபாடு மறந்து அனைத்து தலைவர்களும் ஒன்று கூடியிருப்பதற்கு பாராட்டுக்களை தெரிவித்தார்.


இக்கூட்டத்தின் முடிவில் இளைஞர் குழுக்களை தொடங்கி பொருளாதார கட்டமைப்பை உருவாக்கிடவும், மதுரையில் நடைபெறும் சமூகநீதி மாநாட்டிற்கு முழு அளவில் பிரச்சாரத்தை மேற்கொள்வதென்றும், கிராமத்திற்கு ஒரு வாகனம் என்ற அளவில் மதுரை மாநாட்டில் கலந்துகொள்வதற்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பதென்றும், குள்ளக்காபாளையம் கிராமத்தை மாதிரி கிராமமாக மாற்றிடவும் இளைஞர்கள் உறுதி அளித்தனர். 

இக்கூட்டத்தில் ஊர் கொத்துக்காரர் தன்ராஜ்,  ஊராட்சிமன்ற உறுப்பினர் சம்பத்,  கூட்டுறவு சங்க செயலாளர் முத்துராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

இறுதியாக நன்றியுரையாற்றிய கே.டி.மோகன்ராஜ்,  சென்னை வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் முன்னெடுத்துவரும் பல்வேறு முயற்சிகளுக்கு , குள்ளக்காபாளையம் கிராமம் முழு ஒத்துழைப்பு வழங்குமென்றும், சங்கத்தின் தொடர் முயற்சிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் வளர்ச்சி நிதியாக ரூ.பத்தாயிரத்து ஒன்று (ரூ.10001/-) நன்கொடை வழங்குவதாகவும் அறிவித்தார். (வளர்ச்சி நிதி கூகுள் பே மூலம் சங்கத்தின் பொருளாளர் கணக்கில் செலுத்தப்பட்டது).

கூட்டத்திற்கான ஏற்பாடுகளை பாஜக ஒன்றிய செயலாளர் கே.குணசேகரன் சிறப்பாக செய்திருந்தார்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved