🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பீகாரில் ஓங்கி ஒலிக்கும் ஒற்றைக்குரல்!

இந்தியாவில் மிகவும் பின்தங்கிய மாநிலங்களில் ஒன்றான பீகார் மாநிலத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த அனைத்துக் கட்சிகளும் ஒப்புதல் தெரிவித்துள்ளன. 

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி அனைத்து சமூகங்களுக்கும் உரிய வாய்ப்புகளையும், பிரதிநிதித்துவத்தையும் வழங்க வேண்டும்  என்பது பிகார் மாநிலத்திலுள்ள நித்தீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், பிரதான எதிர்க்கட்சியான லல்லு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் நீண்டநாளைய கோரிக்கை. மத்தியில்  ஆளும் பாஜக,  ஆண்ட காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அதற்கெதிரான நிலைப்பாட்டில் இருப்பவை. 

இதற்கு மத்தியில் நேற்று பிகார் முதல்வர் நித்தீஷ்குமார் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் பிகார் மாநிலத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த அனைத்துக்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆளும்கட்சியின் கூட்டணி கட்சியான பாரதிய ஜனதா கட்சி, மத்திய அரசு மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை திட்டவட்டமாக நிராகரித்து விட்ட நிலையில், நேற்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த ஆதரவு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கூட்டத்திற்கு பிறகு பேசிய முதல்வர் நிதீஷ்குமார்,  பிகார் மாநிலத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தும் முடிவிற்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு வழங்கியுள்ளதாகவும்,    மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு விரைவில் ஒப்புதல் பெறப்பட்டு, அடுத்துவரும் சட்டமன்றக் கூட்டத்தில் சட்டம் கொண்டுவரப்படும் என்றும் தெரிவித்தார். 

எதிர்க்கட்சித்தலைவர் தேஜஸ்வி யாதவ், தங்கள் கட்சியின் தலைவர் லல்லு பிரசாத் யாதவின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியுள்ளதாகவும்,  அனைத்து தரப்பு மக்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்குவதற்கு சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என்றார். மேலும் பிகாரில் நடைபெறவுள்ள சாதிவாரி கணக்கெடுப்பிற்கு ஒன்றிய அரசு நிதியுதவி அளிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். 

ஏற்கனவே தெலுங்கான, ஒரிசா போன்ற மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடைபெற்றுள்ள நிலையில் பிகார் மாநிலமும் பின்பற்ற உள்ளது, நாடுமுழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டுமென்ற  கோரிக்கைக்கு வலுசேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. 

தமிழ்நாட்டிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திட வலியுறுத்தி தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 261 சாதிகள் அடங்கிய சமூகநீதி கூட்டமைப்பு சார்பில் ஆகஸ்டு -7 இல் மாபெரும் மாநாட்டை மதுரையில் நடைபெறவுள்ளது. தமிழகத்திலும் இக்கோரிக்கை நிறைவேறினால் அரசியல், அரசு வேலைவாய்ப்புகளில் புறக்கணிக்கப்பட்டுள்ள தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட அதிகாரம் கைக்கு எட்டாத சாதிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. 

சுதந்திர இந்தியாவின் அரசியலின் அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சி சாதிவாரி கணக்கெடுப்பில் தான் உள்ளது. நாடுமுழுவதும் இது நடந்தால் எதிர்கால அரசியலில் மிகப்பெரும் மாற்றங்கள் நிகழும்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved