🔴 LIVE | முப்பெரும் விழா 2023


போடியில் வலுப்பட்ட பிணைப்பு! தலைவர்கள் மகிழ்ச்சி!

வன்னியர் 10.5 விழுக்காடு இடஒதுக்கீட்டிற்கு எதிராக ஒன்றிணைந்த பிற்படுத்தப்பட்ட/மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் சமூகநீதி கூட்டமைப்பு அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு தயாராகி வருகிறது. வன்னியர் இடஒதுக்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கினாலும், மீண்டும் அதை நிறைவேற்றத்துடிக்கும் சக்திகள் தொடர்ந்து இயங்கிக்கொண்டே வருகின்றன. அரசிலும், அரசு நிர்வாகங்களிலும் ஊடுருவியுள்ள ஆதிக்க சக்திகள் தொடர்ந்து அதற்கான வேளயைச் செய்துவருகின்றன. வன்னியர் இடஒதுக்கீடு வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றபொழுது நடைபெற்ற மாணவர் சேர்க்கை, அரசுப்பணி நியமனம் அனைத்தும் இறுதி தீர்ப்பிற்கு கட்டப்பட்டதென்று நீதியரசர்கள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.கண்ணம்மாள் அமர்வு தெளிவாக உத்தரவு வழங்கியபோதிலும், அதுகுறித்து இந்த அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. தங்களுக்கு இருக்கும் அரசியல் செல்வாக்கால் நினைத்த மாத்திரத்தில் முதல்வரை சந்தித்து முறையிடமுடிகிறது. ஆனால் கடந்த ஓராண்டாக முதல்வரை சந்திக்க பாதிக்கப்பட்ட சமூகங்கள் எடுத்த முயற்சி எதுவும் பலனளிக்கவில்லை.


இதுதவிர மத்திய அரசுப்பணிகளில் 27 விழுக்காடு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு இருந்தும், இதுவரை 12 விழுக்காடு இடங்களே நிரப்பப்பட்டுள்ளன. சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் பரந்த கடல்போல் உள்ள மத்திய அரசு வேலைவாய்ப்புகளில், விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. மத்திய, மாநில அரசுப்பணிகளில் நடைபெற்றுவரும் மோசடிகளை இனியும் பொறுத்துக்கொண்டிருந்தால் வருங்கால தலைமுறை அரசுப்பணிகளில் சேரமுடியாத நிலை ஏற்படும். இதுகாறும் கல்வியறிவு இன்மையால் வாய்ப்புகளை பறிகொடுத்தது போதும், இனி தொடர்ந்து அனைவரும் ஒன்றிணைந்து பயணித்து அவரவர் சமூகத்திற்கான வாய்ப்புகளை வென்றெடுப்போம் என்ற அடிப்படையில் 261 சமூகங்களை இணைத்து சமூகநீதி கூட்டமைப்பு இயங்கி வருகிறது. 

கடந்த ஒரு வருடகாலமாக 261 சமூகங்களில் விழிப்புணர்வு மிக்க சமூகங்களை ஒன்றிணைத்து பல்வேறு கட்ட போராட்டங்களை களத்திலும், நீதிமன்றங்களிலும் நடத்தியுள்ள சமூகநீதி கூட்டமைப்பு, தொடர்ந்து விடுபட்டுள்ள சமூகங்களையும் இணைத்துக்கொண்டே அடுத்தடுத்த பணிகளை செய்து வருகிறது.அந்த வகையில் தெலுங்கானா, மகாராஷ்டிரா,பிகார், உ.பி போன்ற மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், தமிழகத்திலும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி உரிய பிரதிநித்துவத்தை வாய்ப்பற்ற சாதிகள் பெறவேண்டியுள்ளது.


இதற்காக தொட்டிய நாயக்கர் சமுதாய அமைப்புகளும் சமூகநீதி கூட்டமைப்பில் இணைந்து பல முன்னெடுப்புகளை நடத்தி வருகிறது. இதில் பிரதான அமைப்புகள் எல்லாம் தனித்தனியாக செயல்பட்டாலும், பொதுவான பிரச்சினைகளில் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன அல்லது குறுக்கீடு செய்யாமல் வேறுபணிகளில் கவனம் செலுத்தி வருகின்றன. முன் எப்போதும் இல்லாத வகையில் தொட்டிய நாயக்கர் சமூக அமைப்புகள் ஒருங்கிணைந்தது,  ஒருசிலருக்கு வயிற்றெரிச்சலை உண்டாக்கியிருப்பதும், அதனூடாக தனித்து புலம்பி வருவதும் திருஷ்டி பரிகாரமாக இருப்பதாகவும், மக்களால் புறக்கணிக்கப்பட்ட, நம்பிக்கையிழந்தவர்களின் புலம்பலை பொருட்படுத்தாமல் தொடர்ந்து மக்கள் பணியாற்றிட வேண்டும் என்கிறார் சமூகநீதி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான போடி.சௌந்திரபாண்டியன்.


இதந்தொடர்ச்சியாக, போடிநாயக்கனூரில் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் சார்பில் கடந்த சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் சமூகநீதி கூட்டமைப்பிலுள்ள கள்ளர், மறவர், ஜங்கம், முத்தரையர், உள்ளிட்ட பல சமுதாய தலைவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர். இதில் இடஒதுக்கீடு குறித்த விளக்கம், மக்கள்தொகை கணக்கெடுப்பின் அவசியம், சமூகநீதிகூட்டமைப்பின் அவசியம், சாதிகளுக்கிடையே நல்லிணக்கத்தின் அவசியம் குறித்து விரிவாகப் பேசினர். இதில் இராஜகம்பளத்தார் மேன்மக்கள் அறக்கட்டளை தலைவர் பெ.இராமராஜ், போடி,சௌந்திரபாண்டியன், சுருளிமணி, பாலகிருஷ்ணன், சின்ன நாட்டாமை ரமேஷ், கோபி உள்ளிட்ட பல இராஜகம்பளத்து தொட்டிய நாயக்கர் சமுதாய தலைவர்கள் கலந்துகொண்டனர்.

ஆண்களும், பெண்களும் திரளாக கூடியிருந்த இக்கூட்டத்தில் பேசிய  சௌந்திரபாண்டியன், பிற சமுதாயத்தினரோடு இணக்கமாக பணியாற்றுவதற்கு  கிடைத்த வாய்ப்பிற்காக மகிழ்ச்சி அடைவதாகவும், ஆகஸ்டு 7-இல் மதுரையில் நடைபெறும் சமூகநீதி மாநாட்டிற்கு ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் பிற்படுத்தப்பட்ட/ மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினரை வேன்களில் அழைத்துக்கொண்டு  செல்ல அனைத்துவிதமான ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். இதே மகிழ்ச்சியை கூட்டத்தில் கலந்துகொண்டவர்களும், பிற சமுதாய தலைவர்களும் வெளிப்படுத்தினர்.

செய்தி உதவி: பாலகிருஷ்ணன்

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved