🔴 LIVE | முப்பெரும் விழா 2023


தமிழக முதல்வருக்கு சபாஷ்-அரசுப்பள்ளிகளில் மீண்டும் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகள்.

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான முந்தைய அதிமுக அரசு, அரசுப்பள்ளிகளில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி வகுப்புகள் தொடங்கப்படும் என்று 2018-இல் அறிவிப்பு வெளியிட்டது. இதனையடுத்து 2019-20 கல்வியாண்டு  முதல் தமிழகம் முழுவதுமுள்ள 2381 அங்கன்வாடிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று, சுமார் 43000 குழந்தைகள் எல்.கே.ஜி., யூ.கே.ஜி வகுப்புகளில் பயின்று வருவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. கிராமப்புற பெற்றோர்களிடமும், பொதுமக்களிடமும் மிகுந்த வரவேற்பைப்பெற்றது இத்திட்டம். நர்சரி வகுப்புகளை தொடங்கிய அரசு, இதற்கென தனியாக ஆசிரியர்களை நியமிக்காமல், தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் உபரியாக இருந்த ஆசிரியர்களை பணியிடமாற்றம் செய்து வகுப்புகளை நடத்தி வந்தனர்.

கொரோனோ பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக நேரடி வகுப்புகள் நடைபெறாதநிலையில், தற்பொழுது 2022-23 ஆம் கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் அடுத்தவாரம் தொடங்கவுள்ளன. இந்நிலையில், எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகள் ரத்து செய்யப்படுவதாக செய்திகள் வெளியானது. அரசின் இந்த முடிவிற்கு பொதுமக்களும், கல்வியாளர்களும் தங்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தினர். வசதியானவர்கள் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் மூன்று வயது முதல் பள்ளிக்கு செல்கையில், ஏழை,எளிய மக்களின் குழந்தைகள் ஐந்து வயதில்தான் பள்ளிக்கு செல்ல முடிவதாகவும், இதனால் இரண்டு வருடங்கள் கற்பது குறைவதாகவும், இது ஐந்தாம் வகுப்பை அடையும்பொழுது மாணவர்களின் கற்றல் திறன் இடைவெளி அதிகரிப்பதாகும், இது ஆரோக்கியமான போட்டியை உருவாக்காது என்றும் கருத்து தெரிவித்தனர்.

இதனையடுத்து விளக்கமளித்த பள்ளிக்கல்வித்துறை எல்.கே.ஜி., யூ.கே.ஜி., வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என்றும், ஆனால் அங்கன்வாடிகளின் நடைபெற்றுவரும் இந்த வகுப்புகள் பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டிலிருந்து, சமூகநலத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் என்று அறிவித்தது.

கொரோனா பெருந்தொற்றுக்குப்பின் ஏற்பட்டுள்ள வேலையிழப்பு, தொழில் முடக்கம் காரணமாக பெற்றோர்கள் வேலை இழந்துள்ளதால், அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மிக அதிக அளவு உயர்ந்துள்ளதாகவும், 4300 ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாகவும், இந்த பற்றாக்குறையை சரிக்கட்ட எல்.கே.ஜி., யூ.கே.ஜி., வகுப்புகளுக்காக பணியிடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், மீண்டும் தொடக்கப்பள்ளிக்கே மாற்றப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

பலதரப்பிலும் இருந்து வந்த கோரிக்கையை பரிசீலித்து, முதல்வரின் உத்தரவுப்படி மீண்டும் எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகளை பள்ளிக்கல்வித்துறையே நடத்தும் என்ற அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் இந்த வகுப்புகளுக்கு சுமார் 9000  தகுதியான சிறப்பு ஆசிரியர்கள் தேவைப்படுவதாகவும், விரைவில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும் கூறியுள்ளார்.

2018-ஆம் ஆண்டு சோதனை அடிப்படையில் கொண்டு வரப்பட்ட இந்த இரு வகுப்புகளுக்கு, அப்பொழுதே தேவையான ஆசிரியர்களை அரசு நியமித்திருக்க வேண்டும். அன்றைய அரசு அதை செய்யாமல் இருந்தநிலையில், புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட திமுக அரசு, ஏற்கனவே கடுமையான  நிதிநெருக்கடியில் மத்தியில் அரைகுறையாக தொடங்கப்பட்ட இத்திட்டத்தால் கூடுதல் நிதிச்சுமை என்பதால் இவ்விரு வகுப்புகளை மூடிவிட அரசு முடிவெடுத்திருக்கும் என்றும், ஆனால் திராவிட இயக்கத்தின் அடிப்படை நோக்கமே எல்லோருக்கும் தரமான கல்வி என்பதால், அரசு இதிலிருந்து விலகமுடியவில்லை என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும், இவ்விரு வகுப்புகளை நிரந்தரமாக்குவதற்கான அரசாணை விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

எது எப்படி இருப்பினும், மக்களின் கோரிக்கைக்கு உடனடியாக செவிசாய்த்த தமிழக முதல்வருக்கும், பள்ளிக்கல்வித்துறைக்கும் சபாஷ் சொல்லாமல் இருக்க முடியாது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved